வியாழன், 31 மே, 2018

அரச பயங்கரவாதத்தின் ஊதுகுழலா ரஜினி?

அரச பயங்கரவாதத்தின் ஊதுகுழலா ரஜினி?மின்னம்பலம்: ‘எதற்கெடுத்தாலும் போராட்டம் நடத்தினால் தமிழகம் சுடுகாடாக மாறிவிடும்’ என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியதற்குப் பல்வேறு தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தூத்துக்குடியில் காவல் துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியாகினர். காயமடைந்தவர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பல்வேறு தலைவர்களும் காயமடைந்தவர்களைச் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர்.
இந்தச் சூழ்நிலையில் நேற்று தூத்துக்குடி சென்ற நடிகர் ரஜினிகாந்த், காயமடைந்தவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார். அதைத் தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவிவிட்டதாகத் தெரிவித்தார். மேலும் எதற்கெடுத்தாலும் போராட்டம் என்று இறங்கினால், தமிழ்நாடு சுடுகாடாகிவிடும் என்றும் தெரிவித்திருந்தார்.
ரஜினிகாந்த்தின் இந்தக் கருத்துக்கு எதிர்க்கட்சிகள் மத்தியில் கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. பல்வேறு தலைவர்களும் ரஜினியின் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர், கே.பாலகிருஷ்ணன்
ரஜினி தூத்துக்குடியில் பேசி இருப்பது முழுக்க முழுக்க பாஜகவின் குரலாகவே இருக்கிறது. தூத்துக்குடியில் போராடியவர்களைச் சமூக விரோதிகள் என்று ரஜினி குறிப்பிட்டுள்ளார். அதற்கு அவரிடம் ஆதாரம் இருக்கிறதா? ரஜினி வேண்டுமானால் எதற்கும் போராடாமல் அடிமையாக இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால், மக்களை அப்படி இருக்கச் சொல்ல அவருக்கு எந்த உரிமையும் இல்லை. போராடுவது என்பது மக்களின் அடிப்படை உரிமை. அதை மறுப்பதற்கு ரஜினி யார்?
விசிக தலைவர், திருமாவளவன்
தமிழ்நாடு சுடுகாடு ஆகிவிடக் கூடாது என்பதற்காகத்தான் நாங்கள் போராடிக் கொண்டிருக்கிறோம். இதை உணர்வதற்கு, ரஜினிகாந்துக்குச் சில காலம் தேவைப்படலாம். தற்போது போராட்டத்தை அவர் எதிராகப் பார்க்கிறார். தீவிர அரசியலில் ஈடுபடும்போது ஆட்சி, அதிகாரம் எப்படி மக்களுக்கு எதிராக இருக்கிறது என்பதை ரஜினிகாந்த் புரிந்துகொள்வார். இந்துத்துவ சக்திகளின் குரலை அவர் பிரதிபலிக்கிறார். யார் சமூக விரோதிகள் என்று அவர் குறிப்பிட்டுச் சொன்னால், யார் சமூக விரோதிகள் எனத் தெரியும். மக்களோடு மக்களாய் நிற்பவர்களைச் சமூக விரோதிகள் என முத்திரை குத்துவது வலதுசாரிச் சிந்தனை. தற்போது ரஜினிகாந்த் ஆளும் வர்க்கத்திற்கு ஆதரவாகவே இருக்கிறார்.
சமத்துவ மக்கள் கட்சி தலைவர், சரத்குமார்
‘சமூக விரோதிகள் ஊடுருவல்’ என்று ரஜினி கூறியிருப்பது பாஜகவின் எதிரொலியாகவே தோன்றுகிறது. மக்கள் போராட்டத்தை சமூக விரோதிகள் ஊடுருவல் என்பது வேதனையளிக்கிறது. இப்படிக் கூறியிருப்பதன் அடிப்படை ஆதாரம் என்ன என்பதை அவர் விளக்க வேண்டும்.
மனிதநேய மக்கள் கட்சித் தலைவர், ஜவாஹிருல்லா
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் விதமாகவும், போராட்டக்காரர்களை விஷக் கிருமிகள் என்றும், சமூக விரோதிகள் என்றும் அவர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் எனவும் நடிகர் ரஜினிகாந்த் பேசியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அரச பயங்கரவாதத்தின் ஊதுகுழலாக மாறி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தைக் கொச்சைப்படுத்தியுள்ளார் ரஜினிகாந்த்.
ஓர் அரச பயங்கரவாதத்தின் பிரதிநிதியாகவே ரஜினிகாந்த் தூத்துக்குடி சென்றுள்ளார். துப்பாக்கிச் சூட்டுக்கு எதிராகவும், காவல் துறையின் காட்டுமிராண்டித் தாக்குதல்களுக்கு எதிராகவும் குரல் கொடுப்பதற்குப் பதிலாக, தமிழகத்தில் போராட்டங்களும், சமூக விரோதிகளும் அதிகரித்துள்ளனர் என ஒரு விஷமக் கருத்தையும் பதிவு செய்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் மேலும் தனது பேட்டியில் ‘எதற்கெடுத்தாலும் முதல்வரைப் பதவி விலகச் சொல்வது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல’ என்று கூறியிருப்பது அரச பயங்கரவாதத்தை நியாயப்படுத்தத் தமிழக முதல்வர் எடப்பாடி மற்றும் பாஜகவால் அனுப்பப்பட்ட தூதராகவே ரஜினிகாந்த் தூத்துக்குடிக்குச் சென்றுள்ளார் என்பதை மெய்ப்பித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக