வியாழன், 17 மே, 2018

குமாரசாமி : எம் எல் ஏக்களை அமாலாக்கல் துறை மூலம் பிடிக்கும் முயற்சி நடக்கிறது

எம்எல்ஏக்களைப் பாதுகாப்போம்: குமாரசாமிமின்னம்பலம்: பாஜகவினர் எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டியுள்ள குமாரசாமி, எம்எல்ஏக்களைப் பாதுகாப்பதே எங்கள் திட்டம் என்று தெரிவித்துள்ளார்.
பலத்த எதிர்ப்புகளுக்கும் சர்ச்சைகளுக்கும் இடையே கர்நாடக முதல்வராக பாஜகவின் எடியூரப்பா இன்று (மே 17) பதவியேற்றுக்கொண்டார்.
எடியூரப்பாவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்ததற்கு மதச்சார்பற்ற ஜனதா தள மாநிலத் தலைவர் குமாரசாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று (மே 17) காலை செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பாஜகவினர் மற்றும் அக்கட்சியின் அமைச்சர்கள் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கும் முயற்சியில் ஈடுபட்டுவருகின்றனர். அவர்களிடமிருந்து எம்எல்ஏக்களைப் பாதுகாப்பதே எங்களின் திட்டம். மத்திய அரசின் நடத்தை குறித்து மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும். பாஜகவுக்குப் பெரும்பான்மை இல்லாதபோது ஆளுநர் எப்படி அவர்களுக்கு அழைப்பு விடுக்கலாம்? தனது அதிகாரத்தை ஆளுநர் தவறாகப் பயன்படுத்துகிறார்” என்று குற்றம்சாட்டினார்.

“ஜனநாயக முறைகளை பாஜக அழித்துவருகிறது. எனவே, நாட்டின் நலனைக் காக்க அனைவரும் ஒருங்கிணைய வேண்டும். அனைத்து மாநிலக் கட்சிகளுடனும் பேசி இதற்கான முயற்சிக்குத் தலைமை தாங்க வேண்டும் என்று எனது தந்தை தேவகௌடாவை நான் கேட்டுக்கொள்கிறேன்” என்றும் அவர் கூறினார்.
மத்திய அரசின் அமைப்புகளை மோடி அரசாங்கம் தவறாகப் பயன்படுத்துவதாகக் குற்றம்சாட்டிய குமாரசாமி, “தற்போது மாயமாகியுள்ள காங்கிரஸ் எம்எல்ஏ ஆனந்த் சிங் மற்றொரு காங்கிரஸ் எம்எல்ஏவுடன் பேசியுள்ளார். அப்போது, ‘அவர்கள் அமலாக்கத் துறையைப் பயன்படுத்துகின்றனர். ஏற்கனவே அமலாக்கத் துறையில் என் மீது வழக்கு உள்ளது. அவர்கள் என்னைக் கொடுமைப்படுத்த போகிறார்கள். என்னை மன்னித்துவிடுங்கள், நான் முதலில் எனது நலனைப் பாதுகாக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார். இவ்வாறு அவர்கள் அமலாக்கத் துறை மூலம் எம்எல்ஏக்களை மிரட்டிவருகின்றனர்” என்று குற்றம்சாட்டியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக