புதன், 30 மே, 2018

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்கு சமூக விரோதிகள் ஊடுருவலே காரணம்; திமுக அரசியல் செய்கிறது: ரஜினி குற்றச்சாட்டு

tamilthehindu : தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்கு காரணம் சமூக விரோதிகள் ஊடுருவலே,  திமுக இந்த விவகாரத்தில் அரசியல் செய்கிறது என நடிகர்  ரஜினி,  குற்றம் சாட்டினார்.
ஸ்டெர்லைட் ஆளைக்கு எதிராக 100 நாட்கள் போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது ஆட்சியர் அலுவலகம் அருகே போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் துப்பாக்கிச் சூடு மற்றும் போலீஸ் தாக்குதல் காரணமாக படுகாயம் அடைந்தனர்.<> நடிகர் ரஜினிகாந்த் தூத்துக்குடியில் பாதிக்கப்பட்ட மக்களை இன்று நேரில் சென்று பார்த்தார். மருத்துவமனைக்கு சென்ற ரஜினி பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். சம்பவம் பற்றி கேட்டறிந்தார். பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் 48 நபர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் உதவித்தொகை அளித்தார். மேலும் உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் உதவித்தொகை வழங்குவதாக அறிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:
பாதிக்கப்பட்ட எல்லோரையும் போய் பார்த்தேன் அதில் சிலபேர் மனு கொடுத்துள்ளார்கள், நிறைய பேர் பயந்திருக்கிறார்கள், நிறைய பேர் சோகத்தில் இருக்கிறார்கள். அதை பார்க்கும் போது இது மாதிரி சம்பவம் இனி நடக்கவே கூடாது என்று நினைக்கிறேன். நல்ல பிரச்சனைக்காக 100 நாள் போராட்டம் நடத்தினார்கள்.


குடியிருப்பை, ஆட்சியர் அலுவலகத்தை எரித்தவர்கள் சாதாரண மக்கள் கிடையாது. விஷக்கிருமிகள், சமூக விரோதிகள் அதன் உள்ளே நுழைந்துள்ளார்கள், அவர்கள் வேலைதான் இது. நாம் போராட்டம் நடத்தும் போது, ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ஜல்லிக்கட்டில் கூட அப்படித்தான் நடந்தது. இந்த புனிதமான போராட்டம் வெற்றி கிடைத்தாலும் கூட அது ரத்தக்கறையுடன் முடிந்துள்ளது.
இது போன்ற விஷயங்களை அரசு இரும்புக்கரம் கொண்டு விஷக்கிருமிகளை, சமூக விரோதிகளை அடக்கணும். அந்த விதத்தில் ஜெயலலிதாவை பாராட்டுவேன். அவர் விஷக்கிருமிகளை, சமூக விரோதிகளை அடக்கி வைத்திருந்தார். இப்போது இருக்கும் அரசாங்கம்கூட இந்த விஷயத்தில் அவர்களை பின் பற்றி அடக்கி வைக்கணும் இல்லாவிட்டால் தமிழ்நாட்டுக்கே ஆபத்து.
ஸ்டெர்லைட் ஆலையை முழுவதுமாக திறக்க மாட்டோம், பூட்டு போட்டாச்சு என்று அரசு சொல்கிறது. இனி நீதிமன்றத்துக்கு ஸ்டெர்லைட் நிர்வாகம் போனால் அவர்கள் மனிதர்களே கிடையாது. நீதிமன்றத்தில் உள்ளவர்கள் கூட மனிதர்கள்தான். நிச்சயமாக வழக்கு ஜெயிக்காது. ஜெயிக்கவிட கூடாது. நீதிமன்றத்துக்கு அவர்களும் போக மாட்டார்கள். மனித சக்தி, ஜனங்களின் சக்தி முன்பு எதுவும் நிற்காது.
ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகிகள் உண்மையான மனிதர்களாக இருந்தால் இத்தனை உயிர்பலி வாங்கிய பின்னர் ஆலையை திறக்கக்கூடாது. எந்த அரசும் இதை அனுமதிக்காது. தமிழகத்தில் அடிக்கடி போராட்டங்கள் நடக்கிறது. சிலர் நல்லதுக்கும் போராடுகிறார்கள். சிலர் போராட்டத்தை தூண்டி விடுகிறார்கள். மக்கள் மிகவும்  ஜாக்கிரதையா இருக்க வேண்டும்.
தமிழகத்தில் போராட்டம் நடந்தால் எந்த தொழில் முதலீடும் வராது. எந்த வியாபாரிகளும் வரமாட்டார்கள். வேலை வாய்ப்பும் கிடைக்காது. இளைஞர்களும் கஷ்டப்படுவார்கள். ஏறகெனவே தண்ணீர் கிடையாது. விவசாயம் பாதிக்கிறது. வேலை வாய்ப்பும் குறைந்தால் சரியாக இருக்காது. ரொம்ப க்ஷ்டமாகி விடும்.
இதுபோன்ற போராட்டம் நடக்கும் போது ரொம்ப கஷ்டமாகி விடும். போராட்டம் நடக்கும் போது அரசாங்கம் அனுமதி கொடுக்கும் போது அனைத்து நிபந்தனைகளையும் பார்த்துதான் அனுமதி கொடுக்க வேண்டும். பிரச்சினைகளை நீதிமன்றம் மூலம் தான் தீர்க்க வேண்டும்’’ எனக் கூறினார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் பதில் அளித்தார்.
சமூக விரோதிகள் உள் நுழைந்ததை கணிக்க தவறியது காவல்துறையின் பலகீனமா?
இது உளவுத்துறையின் தவறு, இதை ஏற்கெனவே நான் கூறியிருக்கிறேன். இது பெரிய தவறு. இனி நடப்பது நன்றாக நடக்க வேண்டும்.
போராட்டம் முடிந்த பின்னரும் திமுக சட்டசபையை முடக்கும் போராட்டம் நடத்துகிறார்களே?
எல்லாவற்றிலும் அரசியல் செய்கிறார்கள், மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். மக்களுக்கு  ஒன்றும் தெரியாது என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். மக்களுக்கு எல்லாம் தெரியும். நேரம் வரும்போது அவர்கள் நியாயத்தை வெளிக்காட்டுவார்கள்.
யார்தான் சுட்டது?
மொத்தத்தில் இது குழப்பமாக இருக்கிறது. இது மாதிரி நடக்கும் என்று போலீஸும் எதிர்ப்பார்க்கவில்லை. அப்போதும் சொல்கிறேன் இப்போதும் சொல்கிறேன் காவலர்கள் மீது கை வைப்பவர்களை எப்போதும் விடக்கூடாது. போலீஸார் இல்லாவிட்டால் 7 கோடி மக்களை யார் காப்பாற்றுவார்கள்.
போலீஸாரை தாக்கும் நபர்களின் புகைப்படத்தை வெளியிட வேண்டும். சமூக விரோதிகள் என்று வழக்கு போட வேண்டும். கட்டாயம் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முதல்வர் ராஜினாமா என்ற கோரிக்கையை குறித்து?
எல்லாவற்றிற்கும் ராஜினாமா, ராஜினாமா என்று கேட்டால் எப்படி. அந்த அரசியலை நான் கையாள விரும்பவில்லை. எல்லாவற்றிற்கும் ராஜினாமா என்று கோர முடியாது.
13 உயிர்கள் பலியாகி உள்ளதே, பிறகும் ராஜினாமா கோரிக்கை கேட்க கூடாதா?
ஆமாம், 100 சதவீதம் உண்மைதான். அதற்காக கோர முடியாது, இப்ப மூடுவதாக அரசே அறிவித்துளளது.
ஒரு நபர் ஆணையம் மீது நம்பிக்கை உள்ளதா?
இல்லை, ஒரு நபர் ஆணையம் மீது சுத்தமாக நம்பிக்கை இல்லை, அதை யோசித்து செய்யவேண்டும்.
100 நாள் போராட்டம் நடந்தும் அரசு கண்டுக்கொள்ளாதது குறித்து?
அதற்கு அலட்சியம் தான் காரணம், அவர்கள் உஷாராக இருக்க வேண்டும். இது ஒரு பெரிய பாடம்.
உயிரிழப்பு குறித்து பிரதமர் மோடி இதுவரை வருத்தம் தெரிவிக்காதது குறித்து?
அது எனக்கு தெரியாது. கருத்து சொல்ல விரும்பவில்லை.
நீங்கள் ஏன் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு போகவில்லை?
பாதிக்கப்பட்டவர்களை, உயிரிழந்தவர்கள் குடும்பத்தாரை நான் பார்த்துவிட்டேன். இந்த கூட்டத்தில் என்னால் அங்கு போக முடியவில்லை. இதெல்லாம் முடிந்த பின்னர் போய் பார்ப்பேன். இறந்து போனவர்கள் குடும்பத்திற்கு தலா ரெண்டு லட்ச ரூபாய் வழங்க உள்ளேன்’’ என ரஜினி பேட்டியளித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக