செவ்வாய், 15 மே, 2018

கர்நாடகத்தில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காது: மாநில உளவுத்துறை தகவல்

NDTV  :  BJP 71    Cong 70     JDS 32  Trending
தினத்தந்தி : பெங்களூரு, கர்நாடக சட்டசபை தேர்தல் கடந்த 12-ந்தேதி நடந்தது. இதில் ஜெயநகர், ராஜராஜேஸ்வரி நகர் தொகுதிகளை தவிர்த்து 222 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடைபெற்றது. ஒட்டுமொத்தமாக 72.36 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.
இது கர்நாடக சட்டசபை தேர்தலில் புதிய மைல்கல் சாதனையாக இருப்பதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.< கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி தேர்தலுக்கு முந்தைய மற்றும் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளில் பெரும்பாலானவைகளில் எந்த கட்சிக்கும் தனிமெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்க தேவையான 113 இடங்கள் கிடைக்காது எனவும், மாநிலத்தில் தொங்கு சட்டசபை அமையும் என்றும் தெரியவந்துள்ளது.
இதனால் கர்நாடகத்தில் 2004-ம் ஆண்டை போல் மீண்டும் கூட்டணி அரசு அமைய வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. இதன் காரணமாக கூட்டணி பேச்சுவார்த்தைக்கு காங்கிரஸ், பா.ஜனதா, ஜனதாதளம் (எஸ்) கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன.</
இந்த நிலையில் கர்நாடக சட்டசபை தேர்தலில் எந்தெந்த கட்சிகள் எத்தனை இடங்களை கைப்பற்றும் என்பது தொடர்பாக ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய மாநில உள்துறை மந்திரியின் ஆலோசகர் கெம்பய்யாவுக்கு சித்தராமையா ரகசிய உத்தரவு பிறப்பித்ததாக தெரிகிறது. அதன்படி அவர் உளவுத்துறை மூலம் தகவலை சேகரித்து சித்தராமையாவிடம் அறிக்கையாக தாக்கல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதில், சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் தனி மெஜாரிட்டி கிடைக்காது என்றும், காங்கிரஸ் கட்சி அதிகபட்ச இடங்களில் வெற்றி பெறும் எனவும் கூறப்பட்டுள்ளது. அதாவது காங்கிரஸ் கட்சி 95 முதல் 102 இடங்களிலும், பா.ஜனதா கட்சி 70 இடங்களிலும், ஜனதாதளம் (எஸ்) கட்சி 28 இடங்களிலும் வெற்றி வாகை சூடும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், காங்கிரஸ்- பா.ஜனதா, காங்கிரஸ்- ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் இடையே சுமார் 30 தொகுதிகளில் கடுமையான போட்டி நிலவும் என்றும் உளவுத்துறை ஆய்வில் தெரியவந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தொகுதிகளில் பெரும்பான்மையான இடங்களில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் வெற்றிபெறும் பட்சத்தில் கர்நாடகத்தில் மீண்டும் அக்கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதுதவிர, மைசூரு மாவட்டம் சாமுண்டீஸ்வரி தொகுதியில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்திலும், பாகல்கோட்டை மாவட்டம் பாதாமி தொகுதியில் குறிப்பிடும் படியான வாக்குகள் வித்தியாசத்திலும் சித்தராமையா வெற்றி பெறுவார் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.உளவுத்துறை ஆய்வு முடிவுகளால் சித்தராமையா உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் மகிழ்ச்சியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. குறிப்பாக சித்தராமையா, கெம்பையா கொடுத்த ஆய்வு முடிவு மீது அதீத நம்பிக்கை வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக