திங்கள், 7 மே, 2018

நீட்: மேலும் ஒருவர் மரணம்!. சிவகங்கை மாவட்டம் திரு.கண்ணன்.

நீட்: மேலும் ஒருவர் மரணம்!மின்னம்பலம் :நீட் தேர்வு எழுதிய மகளை மதுரையிலிருந்து ஊருக்கு அழைத்து வரும்போது மாணவியின் தந்தை கண்ணன் மாரடைப்பு ஏற்பட்டு, பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் நேற்று பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நீட் தேர்வு நடைபெற்றது. சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியைச் சேர்ந்தவர் கண்ணன். இவரது மகள் ஐஸ்வர்யா, நீட் தேர்வு எழுதுவதற்காக விண்ணப்பித்திருந்த நிலையில், மதுரை பசுமலையில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து நேற்று காலை தேர்வுக்காக மகளை மதுரைக்கு அழைத்துச் சென்றார் கண்ணன். நீட் தேர்வு எழுதிவிட்டு ஊருக்குச் செல்லும்போது மகள் ஐஸ்வர்யாவிடம் தனக்கு நெஞ்சு வலிப்பதாக கண்ணன் கூறியுள்ளார். இதையடுத்து உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
பின்னா் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடலை உறவினர்கள் சிங்கம்புணரிக்கு எடுத்துச் சென்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
முன்னதாக திருத்துறைப்பூண்டி மாணவன் கஸ்தூரி மகாலிங்கத்துக்கு எர்ணாகுளம் நாளந்தா பப்ளிக் பள்ளியில் மையம் ஒதுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து எர்ணாகுளத்துக்கு மகன் கஸ்தூரி மகாலிங்கத்தைத் தேர்வு எழுத அழைத்துச் சென்ற திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த கிருஷ்ணசாமி நேற்று காலை மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். தந்தை மறைவு தெரியாமல் தேர்வெழுதிய மாணவன், தகவலறிந்து மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த தந்தையின் உடலைக் கண்டு கதறி அழுதார். கிருஷ்ணசாமியின் உடல் நேற்றிரவு திருத்துறைப்பூண்டி விளக்குடிக்கு எடுத்து வரப்பட்டது. இன்று அடக்கம் செய்யப்படவுள்ளது. கிருஷ்ணசாமியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பல்வேறு தலைவர்களும், இதற்கு மத்திய மாநில அரசுகளே பொறுப்பேற்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நீட் தேர்வினால் நேற்று ஒரே நாளில் இரண்டு பேர் உயிரிழந்துள்ள சம்பவம் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக