வெள்ளி, 4 மே, 2018

ஸ்டான்லி மருத்துவமனையில் தடுப்பூசி : சிறுமி உயிரிழப்பு!

ஸ்டான்லி மருத்துவமனையில் தடுப்பூசி : சிறுமி உயிரிழப்பு!மின்னம்பலம் :ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போடப்பட்ட 5 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுமி உயிரிழந்ததையடுத்து உடலை வாங்காமல் பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்த கோபி - லோகேஸ்வரி தம்பதியினரின் மகள் தனிஷ்கா(5). கொளத்தூரில் உள்ள பள்ளி ஒன்றில் படித்து வந்தார். அவருக்கு 5 வயதில் போட வேண்டிய அம்மை தடுப்பூசி போடுவதற்காக, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்குக் கடந்த 2 ஆம் தேதி பெற்றோர்கள் அழைத்துச் சென்றுள்ளனர்.

அங்குத் தடுப்பூசி ஊசி போடப்பட்ட 10 நிமிடங்களில், தனிஷ்காவுக்கு கண் எரிச்சல் ஏற்பட்டதோடு, முகமும் வயிறும் வீங்கியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் உடனே அதே மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து தன்ஷிக்காவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று (மே 3) சிறுமி உயிரிழந்துள்ளார். இதுகுறித்து மருத்துவர்களிடம் கேட்டதற்கு அவர்கள் அலட்சியமாகப் பதில் கூறியதாகப் பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அப்பகுதி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் சிறுமியின் உடலை வேறொரு மருத்துமனையில் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று கூறி உடலை வாங்க மறுத்துப் பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
“வெளிநாட்டு மருந்தைப் பரிசோதிப்பதற்காக எனது மகளுக்கு மருத்துவர்கள் போட்டதால்தான் அவர் இறந்து விட்டாள்” என்று தன்ஷிகாவின் தாய் லோகேஸ்வரி கூறியுள்ளார்.
இதுகுறித்து ஏழுகிணறு காவல் நிலையத்தில் புகார் அளித்த போது அவர்கள் தாமதமாகத்தான் புகாரை ஏற்றுக் கொண்டார்கள். ஸ்டான்லி மருத்துவமனையில் ஊசி போட்டதற்கான ஆதாரம் உண்டா என்று எங்களிடம் கேள்வி எழுப்பினர். எனது மகளின் இறப்புக்குக் காரணம் தெரிய வேண்டும் என்று அவர் கண்ணீர் மல்க கேட்டுக்கொண்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக