வெள்ளி, 25 மே, 2018

சென்னை: எதிர்கட்சிகள் முழு அடைப்பு போராட்டம் - போலீசார் குவிப்பு

தினத்தந்தி : தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகளும், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இன்று (வெள்ளிக்கிழமை) தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முழுஅடைப்பு போராட்டத்தையொட்டி தமிழகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் பாதுகாப்பு பணியில் 20 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட்டிருகிறார்கள்.
தலைமைச் செயலகம் உள்ளிட்ட முக்கிய அரசு அலுவலகங்கள், பஸ், ரெயில் நிலையங்களில் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருக்கிறார்கள்.> மேலும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பஸ்-ரெயில்கள் ஓடும் என்று தெரியவந்துள்ளது. நேற்று இரவில் இருந்தே முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் அத்தியாவசிய பொருட்கள் எவ்வித இடையூறுமின்றி பொதுமக்களுக்கு கிடைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் அறிவித்துள்ளனர்.


மேலும் இன்று குமரியில் நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்குள் செல்லாமல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக-கேரள எல்லையில் கேரள பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளன. நாகர்கோவிலில் அரசு பேருந்துகள் மீது கல்வீச்சு சம்பவமும் நிகழ்ந்துள்ளது. மேலும் பல இடங்களில் கடையடைப்பு போராட்டம் நடந்து வருகிறது.

முழுஅடைப்பு போராட்டம் காரணமாக சென்னையில் மெரினா உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக