வியாழன், 3 மே, 2018

திருநாவுகரசர் என்ன பேசுகிறார், எப்படிப் பேசுகிறார் ... எல்லா பக்கமும் பேசிக்கொண்டே திமுக கூட்டணியிலும் ,,,,

Narain Rajagopalan : தமிழக காங்கிரஸ் நண்பர்கள் கோவப்படுவதில் அர்த்தமே இல்லை. யதார்த்தத்தினைப் புரிந்துக் கொள்ளுங்கள்.
போன முறை ஒதுக்கீடான 41 தொகுதிகளில் 8 தொகுதிகளில் தமிழக காங்கிரஸ் வென்று இருக்கிறது. அதில் பாதி தொகுதிகள், காங்கிரஸ் கூட்டணியில் இருந்தாலும், இல்லை என்றாலுமே கூட, காங்கிரஸுக்கு என்றே எழுதி வைக்கப்பட்ட தொகுதிகள். மொத்த வாக்களிப்பில் தமிழக காங்கிரஸ் 6% மேல் வைத்திருக்கிறது. இதில் வாசன் செய்து கொண்டிருக்கும் காமெடிகள் தனி.
பரம்பரை காங்கிரஸ்காரர்கள் ஒரு நாளும் திமுகவிற்கு வாக்களிக்கப் போவதில்லை. பரம்பரை திமுககாரர்கள் ஒரு நாளும் காங்கிரஸிற்கு வாக்களிக்கப் போவதில்லை. இது இங்கே இப்படி தான் இயங்கிக் கொண்டு இருக்கிறது. இதில் மாற்றங்கள் இல்லை.
ஆனால் தமிழக காங்கிரஸின் தலைவர் என்ன பேசுகிறார், எப்படிப் பேசுகிறார் என்பதை மக்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். 'அதிமுகவில் இருந்து இருந்தால் இந்நேரம் கட்சியின் பொது செயலாளர் ஆகி இருப்பேன்’ என்று காங்கிரஸில் இருந்துக் கொண்டு பேசுவதெல்லாம் எந்த கணக்கில் வரும்? ம.ந-வில் ஆரம்பித்து அதிமுகவின் இன்றைய பல்வேறு பிரிவுகளோடும் தொடர்ச்சியாக ஒரு பக்கம் உரையாடிக் கொண்டே, இன்னொரு பக்கம் திமுக கூட்டணியில் பெரும்பங்கு எப்படி சாத்தியம்?

மேலும், 62 மாவட்டங்களாக திமுக தமிழகத்தைப் பிரித்து இருக்கக் கூடிய சூழலில், திமுகவிற்குள்ளும் புதிய முகங்களையும், வேட்பாளர்களையும் கண்டறிவது திமுகவிற்கான existential pressure. அவர்களால் எப்படி கட்சியில் எல்லோரையும் திருப்திப் படுத்த முடியும். ஏற்கனவே இப்படி திருப்திப் படுத்த முடியாமல் போய் தான் போன தேர்தலில் 20க்கும் மேற்பட்ட தொகுதியில் 3000த்திற்கும் குறைவான வாக்கு வித்தியாசத்தில் திமுக தோற்றது. இதை செயல் தலைவரே ‘உட்கட்சி சண்டையால்’ தோற்று இருக்கிறோம் என்பதை பகிரங்கமாக சொல்கிறார். இந்த சூழலில் இந்த முறையும் அதிகப்படியான தொகுதிகளை (winning ratio இல்லாமல்) எப்படி திமுகவால் தர முடியும்?
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பீகாரில் மகாகாட்பந்தன் உருவாக்கியப் போது நிதிஷிற்கும், லாலுவிற்கும் அதிக தொகுதிகளை உள்ளடக்கி, காங்கிரஸ் குறைவான தொகுதியில் இருந்தாலும் அந்த கூட்டணி சிதறாமல் பார்த்து வெற்றிக் கண்டார். இது ஏன் சாத்தியப்பட்டது என்றால், பீகாருக்குள் நிதிஷின் ஜனதா தளமும், லாலுவின் ராஷ்ட்ரீய ஜனதா தள்ளும் மிக வலுவான கட்சிகள். அப்படிப் பார்த்தால், தமிழ்நாட்டில் திமுக தான் வலுவான பிராந்திய கட்சி. பீகாருக்கு ஒரு நியாயம், தமிழகத்திற்கு ஒரு நியாயமா? கர்நாடகா தவிர்த்து, தென்னகத்தில் காங்கிரஸ் எங்கே வலுவாக இருக்கிறது?
இன்றைய நிலையில் அகில இந்திய காங்கிரஸே குறிப்பிட்ட மாநிலங்கள் தவிர்த்து பல மாநிலங்களில் பாஜக, பிராந்திய கட்சிகளுக்கு பின்னால் தான் இருக்கிறது. Accept the reality. இன்றைக்கு இது தான் நிதர்சனம். வலுவான பிராந்திய கட்சிகள் + காங்கிரஸ் வலுவான இடங்களில் இருக்கக் கூடிய சின்ன பிராந்திய கட்சிகள் என்று தான் தேர்தல் வியூகத்தினை அமைக்க முடியும். தேசிய கட்சி என்கிற பந்தாவெல்லாம் மலையேறி காலங்களாகிறது. இந்திய வரைப்படத்தை எடுத்துப் பார்த்தால் காவிகள் Vs. காங்கிரஸ் ஆட்சிகள் எங்கெல்லாம் நடக்கிறது என்பது தெள்ளத்தெளிவு.
6 - 7.5% வாக்கு வங்கிக்கு கூட்டணியில் என்ன கிடைக்குமா அதை பற்றி தாராளமாக பேசலாம். இதனால் நான் காங்கிரஸை குறைத்து மதிப்பிடுகிறேன் என்றோ, நிராகரிக்கிறேன் என்றோ பொருளல்ல. Let's discuss political discourse more maturely with ground realities. ஒன்றிய அரசில் காங்கிரஸை ஆதரிக்க மாட்டோம் என்று ஒரு போதும் திமுக சொல்லாது. ஆனால், அதிகபட்ச இடங்களில் அதிமுக, மோதிமுக, அம்மா அணி, ஆயா அணி, சின்னம்மா அணியின் சாம,தான,பேத,தண்ட சூழ்ச்சிகளை நேரடியாக எதிர்க்கக் கூடிய, எதிர்க்க திராணியுள்ள ஒரே கட்சி இப்போதைக்கு திமுக தான்.
இந்தியாவில் இருக்கும் எல்லோருக்கும் கிரிக்கெட் ஆட தெரியும். கமெண்ட்ரி சொல்லத் தெரியும். ஆனால் ப்ளேயிங் XIல் பதினோறு பேர் தான் ஆட முடியும். அதையும் கேப்டனும், அணியின் கோட்ச்சும் தான் முடிவு செய்வார்கள். அதிமுக/பாஜக நாசக்கார கூட்டணிக்கு எதிரான அணி தலைமை திமுக தான். கோட்ச் கலைஞர் தான். கேப்டன் ஸ்டாலின் தான். அவர்கள் முடிவு செய்வதை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று மட்டும் தான் சொல்கிறோம். முறுக்கிக் கொண்டு தொடை தட்டுவதால் நீங்கள் உங்களுக்கு தெரியாமலே அதிமுக/பாஜகவிற்கு வழிவகை செய்கிறீர்கள் என்று பொருள். முடிவு உங்கள் கையில்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக