சனி, 26 மே, 2018

காடுவெட்டி குரு அவர்களுக்கு இரங்கல்களும், இழப்பிற்கு வருத்தங்களையும் ...

ரூ 60 இலட்சம்  இல்லாமையால்? 
Sowmian Vaidyanathan : வன்னியர் சங்க மாநில தலைவர் காடுவெட்டு ஜெ. குரு
அவர்களுடை உரையின் ஆடியோ ஒன்றை ஐந்தாறு வருடங்கள் முன்பு கேட்க நேர்ந்தது. மேடைப்பேச்சு போன்ற அலங்கார வார்த்தைகள் எல்லாம் ஏதுமின்றி... ரொம்ப கலோக்கியலான, மண் வாசனை கலந்த அடிமன ஆற்றாமையை அமைதியாக வெளிப்படுத்திய பேச்சு அது.
அதை எனது பாமக நண்பர் ஒருவர் போடுவதாகச் சொன்ன போது வேண்டாமே என்று தான் தவிர்த்தேன். காரணம் அவர் தலைவர் கலைஞரையோ அல்லது சாதி சார்ந்து மாற்று சாதியினரை குறிப்பாக தாழ்த்தப்பட்ட மக்கள் குறித்து தரக்குறைவாக விமர்சனம் ஏதும் செய்திருப்பாரோ... அதை ஏன் நாம் கேட்க வேண்டும் என்ற எண்ணம் தான். ஆனால் நண்பரோ, நீங்கள் மறுதலிக்கும் காரணம் எனக்குப் புரிகிறது, ஆனால் இதைக் கேட்டுப்பாருங்கள் என்று கூறவே... உரையைக் கேட்க ஆரம்பித்தேன்..!
அவர் பேச்சின் கண்ட்டண்ட் இது தான்...
எங்களுக்கும் அவங்களுக்கும் என்ன பிரச்சினை? ஒன்னுமே கிடையாது. எங்க ஆளுங்கள கிராமத்துப் பகுதில வந்து பாருங்க. குடிசை வீடு தான். தினக் கூலி தான், சுகாதரமற்ற குடியிறுப்புக்கள் தான். அன்னிக்கு வேலைக்கு போகலன்னா வீட்டுல அடுப்பு எரியாது, புள்ளைங்கள படிக்க அனுப்பறது எல்லாம் பெரிய விஷயம். தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் எங்களுக்கும் பொருளாதார ரீதியா எந்த வித்தியாசமுமே கிடையாது. ஆனா எங்களுக்கு பக்கத்து ஏரியாவுல தான் இருப்பாங்க.... வருஷத்துல அங்க இருக்குற நாலு பேருக்கு திடீர்னு அரசாங்க உத்தியோகம் கிடைச்சிடும், இப்பிடியே வருஷா வருஷம் அங்கேர்ந்து கொஞ்சம் கொஞ்சமா மேல வந்துருவாங்க. ஆனா எங்க ஆளுங்க ஒட்டு மொத்தமா அப்படியே தான் இருப்பாங்க...!

காரணம் அவங்களுக்கு கிடைச்ச இட ஒதுக்கீடு..., அது எங்களுக்கும் கிடைச்சாத்தான் நாங்களும் கொஞ்சமாச்சும் மேல வர முடியும்.... கொஞ்சம் கொஞ்சமா மேல வரமுடியும்ன்னு புரியும் போது தான், எங்களுக்கு தெரிஞ்ச வழியில அந்த இட ஒதுக்கீட்டை எங்களுக்கும் கேட்டு போராடினோம்...!
இதே போக்கில் தான் இருந்தது அந்த அரை மணி நேர ஆச்சரியப்படுத்தும் உரை. அவர் பேசியது முழுக்க முழுக்க எதார்த்தமான, தான் சார்ந்த சமூகத்திற்கான சமூக நீதி பிரச்சினை மட்டுமே..!
வன்னியர் சங்கமானது அதைத்தான் முன்னெடுத்தது. தனக்குத் தெரிந்த வழியில் போராடியது.... வழக்கம் போல அதிமுகவின் நிறுவனரும் அன்றைய முதல்வருமான எம் ஜி ஆர் போராட்டக்காரர்களை சுட்டு வீழ்த்தி 21 பேர் வரை அதில் மாண்டு போய்.... மாவட்டம் மாவட்டமாக, ஊர் ஊராக, வீடு வீடாகச் சென்று வன்னிய இன ஆண்களை பிடித்து இழுத்து அடித்து, வழக்குகள் போட்டு வன்முறையைக் காட்டி மிரட்டிய நிலையில்....
ஒரு கட்டத்தில் எம் ஜி ஆர் இறந்த பின்பு, திமுகழகம் ஆட்சிக்கு வந்து தலைவர் கலைஞர் முதல்வரான பிறகு அதே கோரிக்கையோடு டாக்டர் ராமதாஸ் தலைமையில் வன்னியர் சங்கம் இக் கோரிக்கையை அவரிடம் எடுத்துச் சொல்ல...
தலைவர் கலைஞர் அவர்களிடம் தெளிவாக எடுத்துச் சொல்கிறார்..., அரசியலமைப்புச் சட்டப்படி ஒரு தனி சாதிக்கு இனிமேல் இட ஒதுக்கீடு என்பது சாத்தியமில்லை... உள் இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டுமானால் 3.5 அல்லது 5 சதவிகிதத்திற்கு மேல் போனால், சட்டப்படி அது வேரு ஒருவர் பொதுநல வழக்கு தொடுக்கும் நிலையில் நீக்கப்பட்டுவிடும். ஆகவே உங்கள் சாதிக்கு மட்டுமான தனி இட ஒதுக்கீடு என்பது நிரந்தர பலனைத் தராது என்ற போது..,
இதற்கு என்ன தான் வழி என்று வன்னியர் சங்க நிர்வாகிகள் ராமதாஸ் தலைமையில் கேட்க...
தலைவர் கலைஞரோ, ஏற்கனவே நம் தமிழகத்தில் இதற்காக மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என்ற பட்டியல் உருவாக்கி வைக்கப்பட்டுள்ளது..., அதில் வன்னியர் சாதியை கொண்டு வந்து, அத்துடன் இன்னும் பல எண்ணிக்கையில் மிக மிக குறைவாகவோ அல்லது கிட்டத்தட்ட இல்லாமலோ இருக்கின்ற சாதிகளையும் இணைத்து அந்த அனைத்து சாதியினருக்கும் தனி பிரிவாக மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என்ற பட்டியலுக்கான கோரிக்கையாக இதை அரசிடம் கேளுங்கள்.
அந்த பட்டியலில் 100க்கும் மேல் சாதி சங்கங்கள் இருந்தாலும், அதில் வன்னிய மக்களின் எண்ணிக்கை 70 சதவிகிதத்திற்கும் அதிகமாக இருக்கின்ற படியால் அப்பட்டியலுக்கு தரப்படுகின்ற இட ஒதுக்கீட்டில் 70 சதம் கண்டிப்பாக வன்னிய இன மக்களுக்கு கிடைக்கும் என்று கூறவே...
டாக்டர் ராமதாசும் அதை ஏற்றுக்கொண்டு, அப்படியே மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான பட்டியலையும் அதன் கோரிக்கையையும், அதில் வன்னிய சாதியை இணைக்கும் கோரிக்கையையும் முதல்வர் கலைஞரிடம் சமர்ப்பிக்க....
வன்னிய இன மக்களையும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இணைத்து 20சதவிகித தனி இட ஒதுக்கீட்டினை பிற்படுத்தப்பட்டோர் ஒதுக்கீட்டிலிருந்து தனியாகப் பிரித்து தலைவர் கலைஞர் அறிவித்தார்...!
அத்தோடு மட்டுமல்லாமல் இந்த போராட்டத்திற்காக தங்கள் இன்னுயிரை துறந்த 21 வன்னிய இன தியாகிகளின் குடும்பத்திற்கு அரசின் சார்பில் மாதாந்திர உதவித் தொகை வழங்கியும், வன்னியர்கள் மீது போடப்பட்டிருந்த முறையற்ற வழக்குகளை திரும்பப் பெற்றும்.... இப்படி அச்சமூகத்திற்கு மிகப் பெரிய மாற்றத்தையும்.... முன்னேற்றத்தையும் அளித்தவர் தலைவர் கலைஞர்..!
வன்னிய இன மக்களின் அந்த தியாக போராட்டத்திற்கு தலைவர் கலைஞர் மூலமாக கிடைத்த வெற்றியினை.... அவரை அழைத்தே சிறப்பித்து மாபெரும் விழாவாக டாக்டர் ராமதாசே முன்னெடுத்து... அந்த மேடையில் தலைவர் கலைஞருக்கு அவர் அளித்த மஞ்சள் துண்டைத்தான் இன்றைக்கும் தலைவர் கலைஞர் போட்டுக் கொண்டிருப்பது இன்றைய சில வன்னிய இளைஞர்களால் மறக்கப்பட்ட அல்லது அவர்களுக்குச் சொல்லாமல் மறைக்கப்பட்ட வரலாறு.
அதன் பிறகு பாட்டாளி மக்கள் கட்சியை டாக்டர் ராமதாஸ் துவங்கி செயல்பட்டுக் கொண்டிருந்தாலும், காடுவெட்டி குரு அவர்கள் கடைசி வரை தன்னை வன்னியர் சங்க தலைவராகவே தான் முன்னிலைப்படுத்தி வந்திருக்கின்றார். அதன் காரணமாகவே தான் அச் சமூகத்தினரிடையே இன்றைக்கும் பாமக என்ற அச்சமூகத்தினருக்கான கட்சி என்று அறியப்படும் கட்சியினரையும் கடந்து மற்ற மற்ற கட்சிகள் இயக்களில் இருப்பவர்களிடமிருந்தும் கூட ஆழ் மனத்திலிருந்து மனப்பூர்வமான இரங்கல்கள் வெளிப்படுவதை காண முடிகிறது..!
இதில் நாம் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால், வன்னியர் சங்கம் என்ற சாதி சங்கமானது தன் மக்களுக்கான மிக நியாயமான கோரிக்கைகளை முன்னெடுத்து வெள்ப்படையாக போராடி அரசிடம் அதைப் பெற்றது....!
ஆனால் அது அரசியல் கட்சியாக உருமாறிய பொழுது போலியாக சில பல சமரசங்களைச் செய்து கொள்ள வேண்டிய காரணத்தினாலேயே திமுக, அதிமுக என்று மாறி மாறி கூட்டணி அமைத்து, இரு கட்சி தலைவர்களையும் மாறி மாறி வாழ்த்தியும், கேவலமாக வசைபாடியும்... தன் சுய கம்பீரத்தை இழந்தது என்றால் அதை யாரும் அவ்வளவு எளிதில் மறுத்துவிட முடியாது.
சாதி சங்கம் என்று இருக்கின்ற பொழுது, அது யாருக்கும் எதற்கும் சமரசம் செய்துகொள்ளத் தேவையில்லை. தங்களுக்கான அவ்வப்பொழுது ஏற்படும் கோரிக்கைகளை அரசிடம் முன் வைக்கும், நிறைவேறாவிட்டால் போராடும்..., அது மட்டுமின்றி தாங்கள் பெற்ற உரிமைகளை பங்கம் வராமல் கூர்ந்து கவனித்து தக்க வைத்துக் கொண்டே இருக்கும்...!
ஆனால் அதுவே அரசியல் கட்சியாக மாறினால், பல்வேறு சமரசங்களைச் செய்து கொண்டிருக்க வேண்டும்..., தன் சாதி வாக்குகளை ஒருங்கிணைக்க எப்பொழுதும் யாருடனோ சண்டையிட்டு..., அந்த சாதிக்கு இன்னார் எதிரி, அவர் நம்மை விட தாழ்ந்தவர், நாம் தன் உசத்தி என்று இளைஞர்களை உசுப்பேற்றி, ஒருங்கிணைப்பிலேயே வைத்திருந்து வாக்குகளை வாங்கிக் காட்ட வேண்டும்..!
ஆனால் இந்த இடத்தில் தான் காடுவெட்டி குரு அவர்கள் தன்னை சமரச எல்லைகளுக்குள் பெரும்பாலும் கட்டுப்படுத்திக் கொள்ளாமல் தன் மக்களுக்கு மட்டுமே உழைக்கும் போராடும் மனிதனாக வன்னியர் சங்க தலைவராகவே தன்னை வரையறுத்துக் கொண்டுவிட்டார். ஆனாலும் பாமக என்ற அரசியல் கட்சிக்கான சமரச சாயம் மாற்று சமூகத்தினரிடம் அவரது பிம்பத்தினை சிதைத்திருந்தது என்பதை மறுப்பதற்கில்லை..!
சாதிப் பற்று, சாதிப் பாசம், சாதி வெறி இதையெல்லாம் பெருமையாக பேசுவதா? அது திராவிட இயக்க சித்தாந்தத்திற்கு எதிரானது அல்லவா என்று கேட்டால்.... ஒரு இனத்திற்காக... அதாவது யூதம், ஆரியம், திராவிடம் இப்படி எதற்காக போராடினாலும் கூட மனிதத்தைக் கடந்து இந்த பிரிவினை கோஷம் சரியா என்று தான் கேட்க வேண்டியிருக்கும்..! இப்பொழுது மனிதத்திற்கு மட்டும் போராடுவதும் தவறு..., அதையும் கடந்து அனைத்து உயிரினங்களுக்கும் சேர்ந்தே போராட வேண்டும் என்ற குழுக்களையும் கூட நாம் காண்கிறோம்...!
ஆகவே இதையெல்லாம் புறம் தள்ளி விட்டு, ஒரு பாதிக்கப்பட்ட அல்லது தேவைகள் நிறைய உள்ள ஒரு இனத்திற்கோ, சாதிக்கோ நியாயமாக எந்த சமரசமும் இன்றி போராடுகின்ற யாராக இருந்தாலும் அவர் அந்த இனத்தினராலோ, சமூகத்தினராலோ அல்லது சாதியினராலோ நிச்சயம் பாராட்டப்படுவார்.
அந்த கோணத்திலேயே இன்றைக்கு வன்னியர் சங்க மாநில தலைவரான காடுவெட்டி குருவின் மறைவுக்கு பல்வேறு தளங்களில் அல்லது இயக்கங்களில் அல்லது கட்சிகளில் செயல்பட்டுக்கொண்டிருக்கின்ற வன்னிய இன மக்களிடமிருந்து வந்து கொண்டிருக்கும் நெஞ்சார்ந்த இரங்கல்களை பொதுவானவர்கள் பார்க்க வேண்டும்..!
இதில் வன்னிய இன மக்கள் புரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், பாட்டாளி மக்கள் கட்சியைக் கடந்து காடுவெட்டி குரு அவர்களுக்கு இரங்கல்களும், அவர் இழப்பிற்கு வருத்தங்களையும் வெளிப்படையாக தெரிவிக்கின்ற தெம்பும், திராணியும் திமுகழகத்தினருக்கு மட்டுமே இருக்கின்றது என்பதையும், அத்தகைய சுதந்திரத்தையும், ஜனநாயக உரிமையையும், நாகரிகத்தையும் இன்றைக்கு தமிழகத்தில் திமுகழகம் மட்டுமே தம் கட்சித் தொண்டர்களுக்கு வழங்கியும், பயிற்றுவித்தும் வந்திருக்கின்றது என்பதைத் தான்...!
ஆகவே பேரறிஞர் அண்ணாவால், தலைவர் கலைஞரால், செயல் தலைவர் தளபதியாரால் வார்த்தெடுக்கப்பட்டிருக்கின்ற திமுகழக தொண்டனாக வன்னியர் சங்க மாநில தலைவர் காடுவெட்டி குரு அவர்களை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கும், வன்னிய சகோதர, சகோதரிகளுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள் ((

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக