சனி, 12 மே, 2018

நவாஸ் ஷெரிப் : பாகிஸ்தானியர்கள் எல்லையைத் தாண்டி மும்பையில் 150 பேரைக் கொன்றதை அனுமதிக்கலாமா?

26 / 11 தாக்குதலில் பாகிஸ்தானுக்கு பங்கு!மின்னம்பலம் :மும்பையில் நடந்த 26 / 11 தாக்குதலில் பாகிஸ்தான் நாட்டுக்குத் தொடர்பிருப்பதாக, முதன்முறையாக ஒப்புக்கொண்டுள்ளார் அந்நாட்டின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்.
கடந்த 2008ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதியன்று மும்பையில் 10 லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். பல்வேறு இடங்களில் நடந்த தாக்குதல்களில் 150 பேர் பலியாகினர். தாக்குதல் நடத்தியவர்களில் அஜ்மல் கசாப் தவிர, மற்றவர்களை இந்தியப் படையினர் சுட்டுக்கொன்றனர். இவர்கள், பாகிஸ்தானில் இருந்து கடல் மார்க்கமாக மும்பைக்கு வந்ததாகக் குற்றம்சாட்டியது இந்திய அரசு. ஆனால், அதனைத் தொடர்ந்து மறுத்து வருகிறது பாகிஸ்தான் அரசு. இந்த வழக்கு விசாரணையின் முடிவில், அஜ்மல் கசாப்புக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. மும்பை தாக்குதல் தொடர்பான வழக்கு, பாகிஸ்தான் ராவல்பிண்டி நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக, நேற்று (மே 11) பாகிஸ்தானைச் சேர்ந்த டான் என்ற இதழுக்குப் பேட்டியளித்தார் அந்நாட்டின் முன்னாள் பிரதமரும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் பிரிவு தலைவருமான நவாஸ் ஷெரீப். முல்தான் நகரில் அவரது கட்சி சார்பில் நடைபெற்ற பேரணியில் கலந்துகொண்டவர், பாகிஸ்தானின் பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கைகள் தொடர்பாகப் பேசினார். அப்போது, மும்பையில் நடந்த 26/11 தாக்குதலில் பாகிஸ்தானுக்குப் பங்குள்ளதாகக் குறிப்பிட்டார்.
”நம்மை நாமே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளோம். தியாகங்கள் புரிந்த பின்பும், நமது தரப்பு கருத்துகள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. ஆப்கானிஸ்தான் தரப்பு கருத்துகள்கூட ஒத்துக்கொள்ளப்பட்டுவிட்டன. இதனை நாம் கவனிக்க வேண்டும். இங்கு தீவிரவாத இயக்கங்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. அவர்களுக்கும் அரசுக்கும் தொடர்பில்லை என்று சொல்லலாம். ஆனால், அவர்கள் எல்லையைத் தாண்டி மும்பையில் 150 பேரைக் கொன்றதை அனுமதிக்கலாமா? இதற்கு விளக்கம் சொல்லுங்கள். இன்னும் அந்த வழக்கு விசாரணை ஏன் நிலுவையில் உள்ளது?” என்று கேள்வி எழுப்பினார் நவாஸ் ஷெரீப்.
இதனை ஏற்க முடியாதென்றும், இதனால்தான் பாகிஸ்தான் போராட்டங்களைச் சந்தித்து வருகிறதென்றும் அவர் குறிப்பிட்டார். ரஷ்ய அதிபர் புதின் மற்றும் சீன அதிபர் ஜீ ஜின்பிங்கும் இதையே வலியுறுத்தியதாகக் கூறினார். ஒரு நாட்டில் இரண்டு அல்லது மூன்று இணை அரசாங்கங்கள் செயல்பட முடியாதென்றும், அரசியலமைப்புச் சட்டப்படி ஒரு அரசு மட்டுமே செயலாற்ற வேண்டுமென்றும், பாகிஸ்தான் நாட்டின் நிலைமை குறித்து விமர்சித்தார் நவாஸ்.
மும்பை தாக்குதலில் பாகிஸ்தான் நாட்டின் பங்கு குறித்து, நவாஸ் ஷெரீப் முதன்முறையாகப் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக