சனி, 14 ஏப்ரல், 2018

தமிழன் என்றோர் இனமுண்டு – #GoBackModi.. .... சவுக்கு

savukkuonline.com: தமிழன் என்றோர் இணமுன்டு,
தனியே அவற்கொரு குணமுண்டு
மானம் பெரிதென உயிர்விடுவான்
மற்றவர்க் காகத் துயர்படுவான்
தானம் வாங்கிடக் கூசிடுவான்
தருவது மேல் எனப் பேசிடுவான்
என்றார் நாமக்கல் கவிஞர்.
அந்த கவிஞரின் வாக்குகள் பொய்யில்லை என்பதை 12 ஏப்ரல் 2018, இந்தியாவுக்கு அல்ல.  உலகுக்கே நிரூபித்துள்ளது.
ஒருவன் அரசியல்வாதியாவதற்கு, ஒரு குறிப்பிட்ட அளவு நாசிஸ்சிஸ்ஸம்  எனப்படும் சுயமோகம் என்கிற குணம் தேவை.   தன்னை நேசிக்கும் அத்தகைய குணம் இல்லாதவனால், அரசியல் தலைவனாக முடியாது.  அரசியல் தலைவர்கள் பெரும்பாலானோருக்கு இது இருக்கும்.  அந்த சுயமோகத்தின் அளவு ஒரு எல்லையைக் கடந்து போகையில், அது நோயாகும்.  அந்த நோயை      Narcissistic Personality Disorder என்று வைப்படுத்துகிறார்கள்.
அந்த நோய் மிகவும் முற்றிப் போனால் எப்படி இருக்கும், அதனால் பாதிக்கப்பட்டவர்கள் எப்படியெல்லாம் நடந்து கொள்வார்கள் என்பதற்கான வாழும் உதாரணம்தான் நரேந்திர மோடி.   துளியும் கூச்ச நாச்சம் இல்லாதவர்.  ஆசூயை அற்றவர்.
2013 முதல் மோடியை தொடர்ந்து பார்த்து வருபவர்களால் இதை நன்றாக புரிந்து கொள்ள முடியும்.  எந்த நிகழ்வாக இருந்தாலும், நான், நான் நான் மட்டுமே.
ஒரு தேர்தல் நடக்கையில் வாக்குச் சாவடியில் இருந்து குறிப்பிட்ட தொலைவு வரை, தேர்தல் சின்னத்தை காட்டுவது தவறு என்பது தெளிவான விதி.   பெரிய தலைவர்கள் யாரும் இதை மீறியதாக தகவல்கள் இல்லை.
ஆனால் 2014 தேர்தலின்போது, தேசிய சேனல்களில் நேரடி ஒளிபரப்பு செய்யும் என்பதை நன்றாகவே உணர்ந்து, வாக்களித்து விட்டு, வாக்குச் சாவடியின் வாயிலிலேயே, தாமரை சின்னத்தை எடுத்து கையில் வைத்துக் கொண்டு செல்பி எடுத்துக் கொண்ட கேவலமான பிறவிதான் மோடி.


அமைச்சர்களைக் கூட சுதந்திரமாக மோடி செயல்பட விட்டதேயில்லை.  மத்திய உளவுத் துறையினரை வைத்து, அத்தனை அமைச்சர்களையும் கண்காணிப்பில் ஆட்சிக்கு வந்த முதல் நாள் முதல் இன்று வரை வைத்திருக்கிறார்.  இப்படி நான் கண்காணிக்கிறேன் என்ற தகவலையும் கசிய விட்டு அவர்களை அச்சத்தில் வைத்திருப்பார்.
எந்த நாட்டுக்கு ஒரு நாட்டின் பிரதமர் சென்றாலும், அவரோடு தவறாமல் வெளியுறவுத் துறை அமைச்சரை அழைத்துச் சென்று, இரு நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர்களும், பேச்சுவார்த்தை நடத்துவதும், பத்திரிக்கையாளர்களை சந்திப்பதும் வழக்கம்.
ஆனால், மோடி, வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை எந்த நாட்டிலும் முன்னிறுத்தியதில்லை.   எந்த நாட்டுக்கு சென்றாலும் அந்த நாட்டின் அதிபரை கட்டிப் பிடித்துக் கொண்டு போட்டோவுக்கு போஸ் கொடுப்பது, அந்த நாட்டில் உள்ள இந்தியர்களை வரவைத்து செல்பி எடுத்துக் கொள்வது, இதுதான் வேலை மோடிக்கு.
மோடி மற்றும் பக்தாள் ட்விட்டர் மற்றும் இதர சமூக வலைத்தளங்களை 2013 முதல் பயன்படுத்தித்தான் நாடெங்கும் மோடிக்கு ஆதரவான ஒரு பிம்பத்தை கட்டமைத்தார்கள்.  குஜராத் முதல்வராக இருக்கும்போதே, அதிகமாக ட்விட்டரின் பயன்களை உணர்ந்து பயன்படுத்தத் தொடங்கிய ஒரு அரசியல் தலைவர் மோடியே.   காங்கிரஸ் அரசு எதை செய்தாலும் உடனே ட்விட்டரில்தான் கருத்திடுவார்.   நரேந்திர மோடி இந்தியாவில் அதிக பாலோயர்களைக் கொண்ட ஒரே இந்தியர் என்று பக்தர்கள் மோடியை கொண்டாடினார்கள்.  பின்னர், அதில் பெரும்பகுதி பாலோயர்கள், பாட்கள் என்று அழைக்கப்படும் போலி ட்விட்டர் அக்கவுண்டுகள் என்ற செய்தியும் வெளியானது.  ஆனால் இதற்கெல்லாம் கவலைப்படும் நபரா மோடி ?
மோடி நினைத்திருந்தால், காவிரி மேலாண்மை வாரியத்தை எளிதாக அமைத்திருக்க முடியும்.  ஆனால், காவிரி மேலாண்மை வாரியம் என்ற பேச்சே, கர்நாடகத்தில், பிஜேபியை குழிதோண்டி புதைக்கும் என்பது மோடிக்கும், அமித் ஷாவுக்கும் நன்றாகத் தெரியும்.  இதனால்தான் திட்டமிட்டே, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவை, இறுதி நாள் முடியும் வரை, தள்ளிப் போட்டார்கள்.
மேலும் கர்நாடகாவில் மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் 110 தொகுதிகளில் லிங்காயத்துக்கள் தீர்மானிக்கும் சக்தி.  அவர்களின் நூற்றாண்டு கோரிக்கையே, தங்களை தனி மதமாக அறிவிக்க வேண்டும் என்பதே.   ஒரு வகையில் இது நியாயமான கோரிக்கையே.  மதம் என்பது தனி நபர் சார்ந்த விவகாரம்.  அரசாங்கத்துக்கு அதில் எந்த விதமான உரிமையும் கிடையாது.  அரசு, ஒரு மதம் இன்னொரு மதத்தோடு மோதாமல், வன்முறை உண்டாகாமல் பார்த்துக் கொள்ளும் கடமையை மட்டுமே செய்ய வேண்டும்.   ஆனால்  பிஜேபியை பொறுத்தவரை இது தலைகீழ்.  ஒரு மதம் இன்னொரு மதத்தோடு மோதுவதைத்தான் பிஜேபி எப்போதுமே விரும்பும்.
லிங்காயத்துகளை தனி மதமாக அறிவித்ததோடு மட்டுமல்லாமல், அவர்களுக்கு சிறுபான்மை அந்தஸ்தும் அளித்தார் சித்தாராமைய்யா.   லிங்காயத்துகளை தனி மதமாக அறிவித்ததை எதிர்க்கவும் முடியாமல், எதிர்க்காமல் இருக்கவும் முடியாமல், பிஜேபி நெளிந்தது.

இந்த நேரத்தில்தான் காவிரி தொடர்பான தீர்ப்பை உச்சநீதிமன்றம் வெளியிட்டது.  அதில் ஆறு வாரங்களுக்குள் இதற்கான இறுதி திட்டத்தை வடிவமைத்து வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.  காவிரி தொடர்பாக, இதற்கு முன்பாக இருந்த அமைப்பு என்ன ?  காவிரி மேலாண்மை வாரியம்தானே ?  அதைத்தானே அமைக்க வேண்டும்.  ஒரு புதிய அமைப்பு அமைக்க வேண்டுமென்றால், ஏற்கனவே இருந்த காவிரி மேலாண்மை வாரியம் அவசியமில்லை.  அதை முற்றிலும் நிராகரித்து விட்டு, புதிதாக ஒரு திட்டத்தை வகுக்க வேண்டும் என்றல்லவா உச்சநீதிமன்றம் சொல்லியிருக்கும் ?
அதை வசதியாக கண்டு கொள்ளாமல் விட்டு விட்டு, உச்சநீதிமன்றம் வழங்கிய ஆறு வார கால கெடு முடியும் வரை பொறுமையாக காத்திருந்து விட்டு,  ஆறு வார காலம் முடிந்த பிறகு,  சாவகாசமாக scheme என்ற வார்த்தைக்கு விளக்கம் கேட்டு மனுத் தாக்கல் செய்து ஒரு பச்சை அயோக்கியத்தனம் என்பதைக் கூட புரிந்து கொள்ளாத முட்டாள்களா தமிழர்கள் ?
இந்த கோபம் மோடி மீதானது மட்டுமல்ல.   ஆறு வார காலம் முடியும் வரை ஒவ்வொரு நாளும் பேட்டியளித்த அதிமுகவின் பல்லில்லாத அடிமைகள், இன்னும் 24 நாட்கள் இருக்கின்றன, 18 நாட்கள் இருக்கின்றன, 8 நாட்கள் இருக்கின்றன என்று மோடிக்கு ஒத்து ஊதியதையும் தமிழர்களால் புரிந்து கொள்ள முடியாதா என்ன ?
டெல்லியிலே விவசாயிகள் தங்கள் குறைகளை மோடி கேட்க வேண்டும் என்பதற்காக பல நாட்கள் பட்டினியாக இருந்து பல்வேறு நூதனப் போராட்டங்களை நடத்தினார்கள்.   நடிகைகளை அழைத்து அவர்களோடு பேசி, அவர்களோடு புகைப்படம் எடுத்துக் கொள்ளத் தெரிந்த மோடிக்கு பட்டினிப் போராட்டம் நடத்திய விவசாயிகளோடு ஒரு நிமிடம் பேச வேண்டும் என்று தோன்றவில்லை.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் காலம் தாழ்த்தியதோடு, தமிழகத்துக்கு கடுமையான துரோகத்தை இழைத்த, மோடி யாருடைய நண்பன், யாருக்கானவர் என்பது தெரியாதா என்ன ?   கோடிகளில் கொழிக்கும் தொழிலதிபர்களுக்கு, மேலும் மேலும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் உள்ள மக்கள் பணத்தை வாரிக் கொடுத்து, அவர்கள் கட்ட முடியாதென அறிவித்தவுடன், அந்தக் கடன்களை வாராக்கடனாக காட்டி, தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளை நஷ்டத்தில் ஆழ்த்திய மோடி யாரென்பதை அறியாதவர்களா தமிழர்கள் ?

முகேஷ் அம்பானி மனைவி நீத்தா அம்பானியுடன் மோடி
இந்தியாவின் மூலை முடுக்குகளிலெல்லாம் பல்வேறு தந்திரங்களை உபயோகித்து வெற்றி வாகை சூட முடிந்த அமித் ஷாவும் மோடியும், தமிழகத்தில் தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாலும், நோட்டாவை மிஞ்ச முடியாதது ஒன்றே தமிழர்கள் யாரென்பதை  உணர்த்தவில்லையா ?
எந்த ட்விட்டரில், மோடி அதிகமானவர்களால் பின் தொரப்படுகிறாரோ, அதே ட்விட்டரில் மோடியை விரட்டியடித்தான் தமிழன்.  எந்த ட்விட்டரில் தன்னை உலகளாவிய தலைவனாக சித்தரிக்க முயன்றாரோ, அதே ட்விட்டரில் மோடியை அவமானப்படுத்தினான் தமிழன்.   எந்த ட்விட்டரில், தன்னை ஒரு காலத்தை கடந்த அரசியல்வாதி என்பதை நிரூபிக்க முயன்றாரோ, அதே ட்விட்டரில், மோடிக்கு செருப்பைத் தூக்கிக் காட்டினான் தமிழன்.
தன் சொந்த நாட்டின் மாநிலத்தில், தன் சொந்த குடிமக்கள் இருக்கும் ஒரு நகரத்தில், சாலையில் நடந்து செல்ல முடியாமல் ஹெலிகாப்டரில் பறந்து, இருட்டுச் சாலைகளிலே பதுங்கி, காடுகளின் மரங்களை வெட்டி ஹெலிபேட் அமைத்து, அதில் உள்ள மான்களை விரட்டியடித்து, ஒரு விழாவில் கலந்து கொண்டு, அதில் பேசுவதை விட வேறு என்ன அவமானம் வேண்டும் சுயமோகி  மோடிக்கு ?   செத்து விடலாமே…. ?
5 லட்சம் ட்வீட்டுகளை போட்டு, ஓடிப்போ மோடி என்ற செய்தியை உலகுக்கே உரக்க ஒலிக்க வைத்தானே….. அதனால்தான் தமிழனுக்கென்று ஒரு தனிக் குணம் உண்டு.
எதிர்ப்புக் குரல் வரக் கூடாது என்பதற்காக செய்தித் தொலைக்காட்சிகளை மிரட்டலாம்.   செய்தித் தாள் உரிமையாளர்களை கட்டுப்படுத்தலாம்.   போராட்டம் நடத்தப்படுவதை தவிர்க்க மெரினாவை மூடலாம்.   அண்ணா சாலையை மூடலாம்.   வாலாஜா சாலையை மூடலாம்.
ட்விட்டரை என்ன செய்ய முடிந்தது உங்களால் ?   ஒரு மாநிலத்தின் ஒட்டுமொத்த மக்களால் வெறுக்கப்படுவதை விட ஒரு நாட்டின் பிரதமருக்கு அவமானம் இருக்க முடியுமா ?  சிறிதளவேனும் சூடு சொரணை உள்ள ஒரு மனிதன் இந்நேரம் பதவியை ராஜினாமா செய்திருக்க வேண்டும்.
ஆனால், ஒரு மாநிலத்தின் தேர்தலில் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக, முன்னாள் பிரதமரை, பாகிஸ்தானோடு சேர்ந்து சதிக் கூட்டம் நடத்தினார் என்று கூசாமல் பேசிய நபர்தான் மோடி.  அவரிடம் அதையெல்லாம் எதிர்ப்பார்க்க முடியாது.
மோடியின் வருகையால், தமிழகத்துக்கு மற்றொரு நல்லது நடந்திருக்கிறது.   தன்னை ஒரு பெரிய பிஜேபி எதிர்ப்பாளராக காட்டிக் கொண்ட மன்னார்குடி மாபியாவின் அரசியல் முகமான திராவிடச் செல்வர் என்று அழைக்கப்படும் டிடிவி தினகரன் இதனால், முழுமையாக அம்பலமாகியிருக்கிறார்.  மன்னார்குடி மாபியாவுக்கே உரிய குணமான வழக்குகளில் இருந்து தப்பிக்க எந்த சமரசத்தையும் செய்யத் தயாராகும் குணநலனில் தானும் விதிவிலக்கு கிடையாது என்பதை, மோடிக்கு கருப்புக் கொடி காட்ட வேண்டாம் என்று கூறியதில் இருந்தும்,  அந்த போராட்டங்களில் கலந்து கொள்ளாமல் தவிர்த்ததில் இருந்தும் அவர் வெளிப்படுத்தினார்.


விமான நிலையத்தில் மோடி வரும் அன்று, இரண்டு மணி நேரம் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டாலும் மக்கள் அன்று அதை பொருட்படுத்தவில்லை.    விமான நிலையத்தின் எதிரே இருந்த உயர்ந்த விளம்பரப் பலகைகளில் போராட்டக் காரர்கள் ஏறி போராடினர்.  வானத்தில் பறக்கிறார் மோடி என்பதை அறிந்து கருப்பு பலூன்களை பறக்க விட்டனர்.  சென்னை நகரின் முக்கிய பகுதிகளெங்கும் கருப்புக் கொடிகள் பறந்தனர்.  சமூக வலைத்தளங்களில் கருப்பு சட்டையோடு புகைப்படங்களை பதிவிட்டனர்.

ட்விட்டர் மற்றும் பேஸ்புக்கை #GoBackModi என்று தெரிக்க விட்டனர்.   விழாவில் கலந்து கொண்ட மோடியின் முகத்தில் சவக்களையை பார்க்க முடிந்தது.
அறுபதுகளில் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்துக்கு பின்னர் இத்தகையதொரு எழுச்சியை பார்க்க முடிந்தது.
தமிழன் என்றோர் இணமுன்டு,
தனியே அவற்கொரு குணமுண்டு
மானம் பெரிதென உயிர்விடுவான்
மற்றவர்க் காகத் துயர்படுவான்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக