சனி, 14 ஏப்ரல், 2018

தி.மு.க., கூட்டணி கட்சிகள் 16-ந் தேதி ஆர்ப்பாட்டம் சென்னையில் நடக்கிறது

தினத்தந்தி : சென்னை, தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் சார்பில்
வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- தாழ்த்தப்பட்டோர், மலைவாழ் மக்களுக்கு எதிரான குற்றங்கள் நாடு முழுவதும் அதிகரித்து வரும் நிலையில், சுப்ரீம் கோர்ட்டு வழங்கியுள்ள தீர்ப்பு குற்றவாளிகளுக்கு ஆதரவான ஒரு நிலையை ஏற்படுத்துவதுடன் குற்றம் செய்ய நினைப்பவர்களுக்குச் சாதகமான வகையில் அமைந்துள்ளது. நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட ஒரு சட்டம் நீர்த்துப்போகும் வகையில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்திருப்பது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. இந்நிலையில், மத்திய அரசு இந்த வழக்கில், மூத்த வழக்கறிஞர்களை வைத்து வாதிடாமல், அக்கறையின்றி நடந்து கொண்டது கண்டனத்திற்குரியதாகும். உடனடியாக மத்திய அரசு இப்பிரச்சினையில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்து, மீண்டும் தாழ்த்தப்பட்ட, மலைவாழ் பழங்குடி மக்களுக்கு உரிய பாதுகாப்பினை வழங்கிட வேண்டும் என்பதை வலியுறுத்தியும், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை அரசியலமைப்புச் சட்டத்தின் 9-வது அட்டவணையில் இணைக்க வலியுறுத்தியும் 16-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணியளவில், சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே, அனைத்துக் கட்சித் தலைவர்கள் கலந்து கொள்ளும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.


இந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க., திராவிடர் கழகம், காங்கிரஸ், ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி மற்றும் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த முன்னணியினர், தொண்டர்கள் கலந்துகொண்டு தங்களது கண்டனத்தை பதிவு செய்திட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக