சனி, 28 ஏப்ரல், 2018

மெரினாவில் அய்யாக்கண்ணு உண்ணாவிரதத்துக்கு தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்

maalaimlar :மெரினாவில் அய்யாக்கண்ணு போராட வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி சென்னை மெரினா கடற்கரையில் 90 நாள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதி அளிக்க உத்தரவிட வேண்டும் என விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவுக்கு பதிலளித்த சென்னை மாநகர காவல்துறை, மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்த யாருக்கும் அனுமதி இல்லை என கூறியிருந்தது. அதிகளவில் பொதுமக்கள் கூடும் போது பாதுகாப்பு அளிப்பது இயலாத காரியம் என பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இவ்வழக்கில் இன்று தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்றம் மெரினாவில் போராட்டம் நடத்த அய்யாக்கண்ணுவுக்கு  ஒருநாள் அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல், அமைதியான முறையில் போராட்டம் நடத்த உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது. 


இந்த நிலையில், மெரினாவில் அய்யாக்கண்ணு போராட்டம் நடத்த அனுமதி அளித்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு மேல் முறையீடு செய்தது. இந்த மனு அவசர வழக்காக இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன், மெரினாவில் போராட்டம் நடத்த 2003ம் ஆண்டில் இருந்து யாரையும் அனுமதிப்பதில்லை. முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் சேப்பாக்கத்தில் தான் உண்ணாவிரதம் இருந்தனர். தனி நீதிபதி உத்தரவு தவறான முன் உதாரணம் ஆகிவிடும். உண்ணாவிரதத்திற்கு அனுமதித்தால் நாளை 25 அமைப்புகள் போராட்டம் நடத்த காத்திருக்கிறது.

போராட்டத்திற்கு அரசு அனுமதி மறுக்கவில்லை; இடத்தை தான் தீர்மானிக்கிறோம். போராட்டத்தை நடத்தும் இடம் குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் காவல்துறை ஆணையரிடம் மட்டுமே உள்ளது. சென்னை மாநகராட்சி மூலம் மெரினா கடற்கரை பராமரிக்கப்பட்டு வருகிறது. மக்கள் அதிகம் பயன்படுத்து இடம் மெரினா, ஒருவரை அனுமதித்தால் ஒவ்வொருவராக வருவார்கள். 
2017ல் அனுமதியின்றி கூடிய சிலரால் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து பெரிய கூட்டமாக மாறியது. உண்ணாவிரத போராட்டம் நடத்த வள்ளுவர் கோட்டத்தை மனுதாரர் தேர்ந்தெடுக்கலாம். போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கூடுவார்கள் என்று தான் மனுதாரர் குறிப்பிட்டுள்ளார் என வாதாடினார்.

இதையடுத்து தீர்பளித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மணிகுமார், பவானி சுப்புராயன் அமர்வு, மெரினாவில் அய்யாக்கண்ணு போராட தடை விதித்தது. இந்த வழக்கு தொடர்பாக தனி நீதிபதி அளித்த உத்தரவை ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் மாற்று இடத்தில் உண்ணாவிரதம் நடத்த அனுமதி கோரினால் பரிசீலிக்கலாம் என கூறினர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக