செவ்வாய், 3 ஏப்ரல், 2018

ஸ்டாலின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதியவேண்டும் : தமிழிசை வேண்டுகோள்

மின்னம்பலம் :உச்ச நீதிமன்றம் சொல்லாத ஒன்றை அமைக்க வேண்டும் என
வலியுறுத்தி போராட்டத்தை முன்னெடுத்துள்ள ஸ்டாலின் மற்றும் காங்கிரஸ் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குப் பதிய வேண்டும் எனத் தமிழிசை சௌந்திரராஜன் கூறியுள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளன. ஆளும் அதிமுக சார்பில் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றுவருகிறது. திமுக சார்பில் 5ஆம் தேதி முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, பல்வேறு பகுதிகளிலும் நேற்று தொடங்கி திமுகவினர் போராட்டம் நடத்திவருகின்றனர்.
இந்தச் சம்பவங்களுக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் இன்று (ஏப்ரல் 3) செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ”காவிரியைப் பெற்றுத்தருவதில் பாஜக உறுதியாக இருக்கிறது.
காங்கிரஸால் மறுக்கப்பட்ட காவிரி, 5 முறை ஆட்சியில் இருந்த திமுகவால் மறுக்கப்பட்ட காவிரி, திமுக காங்கிரஸோடு 10 ஆண்டுகள் கூட்டணியில் இருந்தபோது மறுக்கப்பட்ட காவிரி, நிச்சயம் பாஜகவால்தான் வரும். காவிரி விவகாரத்தில் தீர்வு வராததற்கு சித்தராமையாதான் முழுமையான காரணம். அவருக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
காவிரி நதி நீர் வேண்டும் எனத் தமிழக மக்கள் அனைவரும் குரல் கொடுத்துவரும் நிலையில், மேகதாதுவில் அணை கட்ட ரூ. 6000 கோடி ஒதுக்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதற்கு ஸ்டாலின் என்ன பதில் கூறப்போகிறார்.
போராட்டம் நடத்திவிட்டேன் பணி முடிந்தது, ராஜிநாமா செய்துவிட்டேன் பணி முடிந்தது என்பதல்ல. காவிரியில் உரிமை பெற்றுத்தரும் வரை பாஜகவின் பணி முடியாது. போராட்டம் மட்டுமே தீர்வு கிடையாது. போராட்டங்கள் எல்லாம் கண் துடைப்புதான். சட்ட விதிகளுக்கு உட்பட்டுத்தான் தீர்வு கிடைக்கும். அதை நோக்கித்தான் மத்திய பாஜக அரசு நகர்ந்துகொண்டிருக்கிறது.
ஸ்கீம் என்பதற்கு என்ன பொருள் என்று உச்ச நீதிமன்றம் நேற்று தெளிவாகக் கூறிவிட்டது. ஆகவே, சொல்லாத ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்று கூறிவரும் காங்கிரஸ், ஸ்டாலின் மீதுதான் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரவேண்டும். தமிழக வளர்ச்சிக்கு எதிராக திமுக, காங்கிரஸ் போன்ற கட்சிகள் செயல்படுகின்றன” என்று குற்றஞ்சாட்டினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக