திங்கள், 2 ஏப்ரல், 2018

நாடாளுமன்றம் முன் சமூக நீதிப் போராட்டம்! வீரமணி தலைமையில் அனைத்துகட்சி தலைவர்களும்

மின்னம்பலம் :நீட் உள்பட சமூகநீதிக்காக டெல்லியில் ஏப்ரல் 3 ஆம் தேதி நாடாளுமன்றம்முன் (ஜந்தர் மந்தர்) ஆர்ப்பாட்டமும், தொடர்ந்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில் அனைத்துக் கட்சித் தலைவர்களும் பங்கேற்கும் கருத்தரங்கமும் நடைபெற உள்ளன. இதை திராவிடர் கழகம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டிலிருந்து பல்வேறு அமைப்புகளின் மாணவர்கள் பங்கேற்கும் இந்த சமூக நீதி ஆர்பாட்டத்தில், ஜனநாயக உரிமைப் பாதுகாப்புக் கூட்டமைப்புத் தலைவர்கள், அனைத் திந்திய அளவிலான நாடாளுமன்ற, சட்ட மன்ற உறுப்பினர்கள், கல்வியாளர்கள், சமூகநீதி ஆர்வலர்கள், மாணவர்கள், சமூகநீதி பாதுகாப்புக்கான பேரவையைச் சேர்ந்த மாணவர் அமைப்புகளின் பிரதி நிதிகள் பங்கேற்கிறார்கள்.

காலை பத்துமணிக்கு நடக்கும் இந்த ஆர்பாட்டத்தைத் தொடர்ந்து நாளை மாலை 3 மணிக்கு சமூகநீதிக் கருத்தரங்கமும் நடைபெற இருக்கிறது. நாடாளுமன்ற அருகே உள்ள அரசியல் சாசன கிளப்பில் அவைத் தலைவர் அரங்கத்தில் இந்த கருத்தரங்கம் நடைபெற இருக்கிறது.
கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மீட்டுக் கொண்டுவருதல், மருத்துவ உயர்கல்வி உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் இடஒதுக் கீட்டை முழுமையாக செயல்படுத்துதல், மருத்துவ மேற்படிப்பில் அரசு மருத்துவர்களுக்கான இட ஒதுக்கீடு, மத்திய பல்கலைக்கழக பேராசிரியர் நியமனங்களில் இட ஒதுக்கீடு போன்றவை பற்றி இந்த கருத்தரங்கத்தில் விவாதிக்கப்படும்.
இந்த ஆர்பாட்டத்திலும் கருத்தரங்கத்திலும் பல்வேறு அரசியல் தலைவர்கள்,அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கெடுக்கிறார்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக