ஞாயிறு, 8 ஏப்ரல், 2018

திருச்சி இந்தி பிரச்சார சபா முற்றுகை ! மக்கள் அதிகாரம் தோழர்கள் சிறையிலடைப்பு !

vinavu :திருச்சி ”ஹிந்தி பிரச்சார சபா”வை முற்றுகையிட்டு மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்தவர்கள் நடத்திய போராட்டத்தில், ஹிந்தி பிரச்சார சபாவின் பெயர்ப்பலகையின் மீது கருப்பு மை வீசப்பட்டது. போராட்டத்தில் பங்கேற்ற அனைவரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தியிருக்கிறது போலீசு.
காவிரியைத் தடுக்கும் டெல்லியின் அதிகாரத்தை முடக்கு” என்ற முழக்கத்தின் கீழ் மக்கள் அதிகாரம், திருச்சி மண்டலத்தின் சார்பில் இன்று (07.04.2018) காலை 11 மணியளவில் இந்தி பிரச்சார சபா முற்றுகையிடப்பட்டது. முன்னதாக திருச்சி முழுவதும் பரவலாக சுவரொட்டி ஒட்டப்பட்டது. இதனால் அப்பகுதியில் காலை முதலே, நூற்றுக்கணக்கான போலீசை குவித்து பரபரப்பை ஏற்படுத்தியது அரசு.



பறையிசை, முழக்கங்களுடன் பேரணியாக வரும் வழியில் தோழர்களை போலீசு தடுத்து நிறுத்தியதால், அங்கேயே போராட்டம் நடத்தப்பட்டது. மோடியின் படத்தையும், பிஜேபி-யின் கொடியையும் எரிப்பதற்காக வெளியில் எடுத்ததை பார்த்தவுடன், அதிர்ச்சியடைந்த போலீசு பாய்ந்து பிடுங்க முயற்சித்தது. அதையும் மீறி, மோடியின் படத்தை செருப்பைக் கொண்டு அடித்ததுடன், எரிக்கவும் செய்தனர்.
தன் எஜமானின் படத்தை கிழித்ததைக் கண்டு ஆத்திரமடைந்த போலீசு, மக்கள் அதிகாரம் மண்டல ஒருங்கிணைப்பாளர் செழியன் உள்ளிட்டு அனைத்து தோழர்களையும் அடித்து தர தரவென இழுத்து கைது செய்தது.

ஹிந்தியின் மீது அடிக்கப்பட்ட கருப்பு மை
காவல்துறை, தோழர்களை வன்முறையாக கைது செய்து கொண்டிருந்த சூழலில், ஏற்கனவே திட்டமிட்டபடி இரண்டு தோழர்கள் பாலத்தின் மீதிருந்தபடி இந்தி பிரச்சார சபாவின் போர்டின் மீது கருப்பு மையை அடித்து மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்.
கீழே இருந்த மற்றொரு போர்டில் கருப்பு மை அடிக்க முயற்சித்த போது காவல்துறை தடுத்து நிறுத்தியதால் தோழர் சரவணன் தடுப்பு சுவர் மீது ஏறி போர்டை கிழித்து எறிந்தார். அதை பார்த்த இளைஞர்கள் விசில் அடித்தும், கை தட்டியும் ஆரவாரம் செய்தனர். இதைக் கண்டு பொறுக்காத அடிமை எடப்பாடியின் எடுபிடி போலீசு, அவரைக் கீழே தள்ளி, அடித்து – உதைத்து சித்ரவதை செய்தனர்.

இதைக் கண்ட பொதுமக்கள் “ அவரை அடிக்காதே, அடிக்காதே ” எனக் கத்தினர். இதனிடையே பத்திரிக்கையாளர்களுக்கும், காவல்துறைக்குமிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டதால் பத்திரிக்கையாளர்கள் சாலை மறியல் செய்தனர். ஹிந்தி எழுத்துக்களை அழித்ததை, பொதுமக்கள் நின்று வேடிக்கை பார்த்ததால் பாலத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. “இவங்க செய்வாங்கன்னு எதிர்பார்த்தோம். அதே மாதிரி செஞ்சிட்டாங்க” என போலீசுகாரர்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டனர்.
(படங்களைப் பெரிதாகப் பார்க்க, அவற்றின் மீது அழுத்தவும்)
போராட்டத்தில் பெண்கள் குழந்தைகள் உட்பட சுமார் 80-க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.  அனைவரின் மீதும் கடுமையான தாக்குதலை நடத்தி கைது செய்தது போலீசு. டில்லியின் அடிமை எடப்பாடி அரசின் உத்தரவின் பேரில், கைது போராட்டத்தில் பங்கெடுத்த அனைவரின் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியிருக்கிறது போலீசு. அனைவர் மீதும் கடுமையான பிரிவுகளில் வழக்குப் போட்டு சிறையில் அடைக்கத் துடிக்கிறது எடப்பாடி அரசு. தோழர்களோ சிறைக்கு அஞ்சாமல் தமது போராட்டத்தை தொடர்கின்றனர். கடைசிச் செய்தியின் படி 13 தோழர்களை ( 11 ஆண், 2 பெண்) சிறையில் அடைத்திருக்கின்றனர்.
தகவல்:
மக்கள் அதிகாரம்,
திருச்சி மண்டலம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக