ஞாயிறு, 22 ஏப்ரல், 2018

உச்ச நீதிமன்றத்தைக் காக்கவே தீபக் மிஸ்ரா மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு...

தலைமை நீதிபதிக்கு எதிர்ப்பு: உச்ச நீதிமன்றத்தைக் காக்கும் போராட்டமே!மின்னம்பலம் :உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது காங்கிரஸ், கம்யூனிஸ்டு, சமாஜ்வாதி, முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த 64 எம்.பி.க்கள் பதவி நீக்கத் தீர்மானத்தை துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுவிடம் ஏப்ரல் 20-ம் தேதி கொடுத்தனர் .
இந்நிலையில் நாடு முழுதும் இதுபற்றிய விவாதங்கள் நடந்து வரும் நிலையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் சொலிசிட்டர் ஜெனரலாக இருந்த மூத்த வழக்கறிஞர் மோகன் பராசரன் இந்த விவகாரம் குறித்து இன்று (ஏப்ரல் 22) சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பதவி நீக்கத் தீர்மானம் பற்றி விரிவாகப் பேசினார்.
“ உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பதவிக்கு தீபக் மிஸ்ரா வருவதற்கு முன்பே அவர் மீது புகார்கள் இருந்தன.
தீபக் மிஸ்ரா பெயரில் ஒரு முன்னாள் ஒரு ஒடிசா உயர் நீதிமன்ற நீதிபதி பணம் வாங்கியதாகவும், அந்த பணம் யாருக்குச் சென்றது என்று தெரியவில்லை என்றும் ஒரு புகார் எழுந்தது. உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு எந்த வழக்கை எந்த அமர்வுக்கு அனுப்ப வேண்டுமென்று முடிவெடுக்கிற அதிகாரம் உண்டு. அந்த அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததாக புகார் எழுந்தது.

உச்ச நீதிமன்றத்தின் நான்கு நீதிபதிகள் பத்திரிகையாளர் சந்திப்பே நடத்தினார்கள். அவர்களுக்கு தலைமை நீதிபதி மீது பல மன வருத்தங்கள் இருந்தன. முக்கியமாக அடுத்த தலைமை நீதிபதியாக வர இருக்கிற ரஞ்சன் கோகாய் அவர்கள், நீதிபதி லோயா இறந்த வழக்கை குறிப்பிட்ட அமர்விடம் கொடுத்தது பற்றி கேள்வி கேட்டிருந்தார். இதை வரைமுறை செய்ய வேண்டும் என்று சொல்லியிருந்தார். இது இந்த தீர்மானத்துக்கு முக்கியக் காரணம். இந்திய வரலாற்றிலேயே உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீது பதவி நீக்கத் தீர்மானம் கொண்டுவரப்படுவது இதுதான் முதல்முறை.
தீபக் மிஸ்ரா என்ற தனிநபரை மறந்துவிடுங்கள். நாங்கள் உச்ச நீதிமன்றம் என்ற நம் நாட்டின் மிக உயர்ந்த அரசியல் சாசன அமைப்பின் நம்பகத் தன்மை பற்றியே கவலைப்படுகிறோம். நான் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவன் கிடையாது. எனவே நான் காங்கிரஸ் கட்சி சார்பில் பேசவில்லை.
ஆனால் நான் சமீப காலங்களாகவே எனது நல்ல நண்பர் கபில் சிபல் உள்ளிட்ட பலருடனும் பேசிக் கொண்டுதான் இருக்கிறேன். அவர்களும் உச்ச நீதிமன்றம் என்ற அரசியல் சாசன அமைப்பின் ஒருமைப்பாட்டின் மீதும், நம்பகத் தன்மை பற்றியும் அக்கறை கொண்டிருக்கிறார்கள். எனவே அவர்கள் உச்ச நீதிமன்றத்துக்கு எதிராக சண்டையிடவில்லை. அவர்கள் உச்ச நீதிமன்றம் என்ற அரசியல் சாசன அமைப்பின் நம்பகத்தன்மைக்காகவும், மக்கள் நீதிக்காகவுமே போராடுகிறார்கள். இதுபற்றி என்னிடமே கூட கபில் சிபல் பேசினார்.
ஆக இப்போது எம்.பிக்கள் கொடுத்திருக்கிற இந்த தலைமை நீதிபதி மீதான பதவி நீக்கத் தீர்மானத்தை துணை குடியரசுத் தலைவர் அவர்கள் ஏற்றுக் கொண்டபிறகுதான் இது தொடர்பான அடுத்த கட்டம் பற்றிய கேள்விகள் எழும்.
இப்போது பேசப்படுகிறவர் இந்தியாவின் தலைமை நீதிபதி. அதாவது உச்ச நீதிமன்றம் பற்றி நாம் பேசிக் கொண்டிருக்கிறோம். இது தொடர்பான விவாதங்கள் நாடாளுமன்றத்தில் நடக்கும்போதுதான் இதுபற்றிய கருத்துகளை முறைப்படி தெரிக்க வேண்டும். எனவே இப்போதே இந்தத் தீர்மானம் பற்றி அதிகமாக விவாதித்துக் கொண்டிருக்கக் கூடாது. அது உச்ச நீதிமன்றம் என்ற நிறுவனத்துக்குதான் கெடுதலாக அமையும்’’ என்று குறிப்பிட்டார் மோகன் பராசரன்.
மன்மோகன் சிங், ப.சிதம்பரம் ஆகியோர் ஏன் இந்தத் தீர்மானத்தில் கையெழுத்திடவில்லை என்று கேட்கப்பட்டபோது,
’’தீபக் மிஸ்ரா உச்ச நீதிமன்ற நீதிபதியாக வந்தபோது மன்மோகன் சிங் பிரதமராக இருந்தார். அதனால் அவர் இதில் கையெழுத்திடவில்லை. ப.சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரம் மீது உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. அந்த காரணத்தைக் கருதி அவர் கையெழுத்திடவில்லை’’ என்றார் மோகன் பராசரன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக