ஞாயிறு, 22 ஏப்ரல், 2018

வன்கொடுமை தடுப்பு சட்டத்தை நீர்த்து போகசெய்யும் உச்சா நீதிமன்ற தீர்ப்பை பாமக ராமதாஸ் ஆதிரிக்கிறார்

மின்னம்பலம்: பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமைத் தடுப்புச்
சட்டத்தைத் திருத்தும் வகையில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மத்திய அரசு செயல்படுத்த வேண்டுமெனத் தெரிவித்துள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ். நாடு முழுவதும் அந்த தீர்ப்புக்கு எதிராகப் போராட்டங்கள் முன்னெடுத்துவரும் நிலையில், அதன் எதிர்த்திசையில் அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.
1989ஆம் ஆண்டு பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தைத் திருத்தும் வகையில், கடந்த மார்ச் 20ஆம் தேதியன்று தீர்ப்பொன்றை வெளியிட்டது உச்ச நீதிமன்றம். இந்த சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்துவதாகக் கூறி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இந்தத் தீர்ப்பை வழங்கியிருந்தது நீதிபதிகள் ஏ.கே.கோயல், யு.யு.லலித் ஆகியோர் அடங்கிய அமர்வு. இது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை நீர்த்துப்போகச் செய்யும் என்று எதிர்ப்பு தெரிவித்தன காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள்.
இதை எதிர்த்து, கடந்த ஏப்ரல் 2ஆம் தேதியன்று பாரத் பந்த் நடத்தின சில தலித் அமைப்புகள். இதனால் வடஇந்திய மாநிலங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. அன்று முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களில் ஏற்பட்ட வன்முறையின்போது 11 பேர் பலியாயினர்.
இதன் தொடர்ச்சியாக, தமிழகத்திலும் பல போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. கடந்த 16ஆம் தேதியன்று சென்னையில் இந்தத் தீர்ப்புக்கு எதிரான அனைத்துக்கட்சி போராட்டத்தை முன்னெடுத்தார் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன். இதில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகள் கலந்துகொண்டன.
இதன் தொடர்ச்சியாக, மத்திய அரசின் வழியில் கேரளாவும் தமிழகமும் உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக மறு சீராய்வு மனு அளித்துள்ளன. இந்த நிலையில், இந்த விவகாரத்தைப் பொறுத்தவரை உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மத்திய அரசு செயல்படுத்த வேண்டுமெனக் கூறியுள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ். இதுகுறித்து, நேற்று (ஏப்ரல் 21) அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதில், உச்ச நீதிமன்றத் தீர்ப்பை சீராய்வு செய்ய மத்திய அரசு கோரியிருப்பது கண்டிக்கத்தக்கது என்று கூறியுள்ளார். அது மட்டுமல்லாமல், உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு விமர்சிக்க முடியாத ஒன்றாகும் என்றும் தெரிவித்துள்ளார்.
1989ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட வன்கொடுமைத் தடுப்புச் சட்டம், தவறானவர்களின் கைகளில் சிக்கி அப்பாவி மக்களைப் பழிவாங்கும் கருவியாக மாறிவிட்டதாகக் கூறியுள்ளார். மேலும், இச்சட்டத்தில் போதிய திருத்தங்கள் செய்ய வேண்டும் என்று தொடர்ந்து பாமக வலியுறுத்தி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார் ராமதாஸ்.
“இந்த விஷயத்தில் மத்திய அரசின் நிலைப்பாடு முன்னுக்குப்பின் முரணாக உள்ளது. வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்படி வழக்குத் தொடர்வதற்கு முன்பாக முதற்கட்ட விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தன்னிச்சையாக முடிவெடுத்துவிடவில்லை. மாறாக, மத்திய அரசு தாக்கல் செய்த புள்ளி விவரங்கள், முன்வைத்த கோரிக்கைகள் ஆகியவற்றின் அடிப்படையில்தான் உச்ச நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.
2015ஆம் ஆண்டில் வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தின்படி மொத்தம் 45,039 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாகவும், அவற்றில் 15-16% வழக்குகள் விசாரணை நிலையிலேயே மூடப்பட்டன; 75% வழக்குகளில் குற்றம்சாற்றப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டு விட்டனர்; மற்றவர்கள் மட்டுமே தண்டிக்கப்பட்டதாகவும் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்த மத்திய அரசு, வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் மிகவும் தவறாகப் பயன்படுத்தப்படுவது உண்மைதான் என்றும் ஒப்புக்கொண்டது. ஆனால், இப்போது சில கட்சிகள் போராடுவதைக் காரணம் காட்டி, மத்திய அரசு அதன் நிலைப்பாட்டை மாற்றுவது சரியல்ல.
அதேபோல், இந்த வழக்கு விசாரணையின்போது, வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின்படி ஒருவர் மீது வழக்குத் தொடரப்பட்டால், அவர் முன்பிணை பெறுவதற்கு அச்சட்டத்தின் 18ஆவது பிரிவு தான் தடையாக இருப்பதாகவும், அது திருத்தப்பட வேண்டும் என்றும் மத்திய அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் மணீந்தர்சிங் வாதிட்டார். ஆனால், இப்போது அதே மத்திய அரசு வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்படி வழக்குத் தொடரப்பட்டவர்களுக்கு முன்பிணை வழங்கப்பட்டால் அவர்கள் சாட்சிகளைக் கலைத்துவிடுவர் என்று கூறுவது சட்டத்தையும் நீதியையும் கேலிக்கூத்தாக்கும் செயல் என்பதைத் தவிர வேறொன்றுமில்லை.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பால் பட்டியலினத்தவருக்கும், பழங்குடியினருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது என்பதுதான் உண்மை. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகார் மீது வழக்குப் பதிவு செய்வதில் தாமதமானால், அதேசட்டத்தின்படி இழப்பீடு கிடைக்கவும் தாமதமாகும் என்பதுதான் மத்திய அரசும், மற்றவர்களும் கூறும் காரணமாகும். ஆனால், வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று கட்டாயமில்லை என நீதிபதிகள் தீர்ப்பில் தெளிவாகக் கூறியிருக்கின்றனர். அதுமட்டுமின்றி, இவ்வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் முன்பிணை கோரினாலும், அவர்கள் மீதான புகாருக்கு ஆதாரங்கள் இருந்தால் முன்பிணை வழங்கப்படாது; அவர்கள் உடனடியாக கைது செய்யப்படுவர் என்பதால் இதுகுறித்த தீர்ப்பால் தலித்துகளுக்கு பாதிப்புகள் இல்லை.
நிறைவாக, உச்ச நீதிமன்றத் தீர்ப்பு மறு ஆய்வு செய்யப்பட வேண்டும்; இல்லாவிட்டால் அவசரச் ச்சட்டம் பிறப்பிக்கப்பட வேண்டும் என்று கோரி போராட்டம் நடத்தும் திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும், எந்தத் தவறும் செய்யாத அப்பாவி தமிழர்கள் பொய் வழக்கில் கைது செய்யப்படுவதை ஆதரிக்கின்றனவா என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும். அதேநேரத்தில் இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்தத் தீர்ப்பை மத்திய அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும்; இவ்வழக்கில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை செல்லாததாக மாற்றும் வகையில் அவசரச் சட்டம் பிறப்பிக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும்” என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள சீராய்வு மனுவையும் உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும் என்று கூறியுள்ளார். நாடெங்கும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்துக்கு எதிராகப் போராட்டங்கள் நடந்துவரும் நிலையில், ராமதாஸின் கருத்து அதற்கு எதிர்த்திசையில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக