ஞாயிறு, 22 ஏப்ரல், 2018

கன்னியாகுமரி கடற்கரை கிராமங்களில் தண்ணீர் புகுந்தது,,, கடலோர மக்களுக்கு எச்சரிக்கை

Aravamudhan - Oneindia Tamil  :சென்னை: தமிழக கடற்பகுதி கடும் சீற்றத்துடன் காணப்படும் என்பதால் மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டது. இந்த நிலையில், கன்னியாகுமரியின் சில கிராமங்களில் கடல் நீர் புகுந்துள்ளது. கடல் சீற்றத்துடன் காணப்படுவதால், கடலோர கிராம மக்களுக்கு மீண்டும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடலில் ஏற்பட்டுள்ள தொலைதூர சலனங்கள் மற்றும் இயற்கை மாற்றத்தால் கடல் சீற்றத்துடன் காணப்படும் என கடல்சார் தகவல் மையம் தெரிவித்திருந்தது. இதன் காரணமாக 2 நாட்களுக்கு கடலில் அதிக சீற்றத்துடன் அலைகள் எழும்பும். அதனால் மீனவர்களும், பொதுமக்களுக்கும், கடலுக்கு செல்ல வேண்டாம் என கடல்சார் தகவல் மையம் எச்சரிக்கை விடுத்தது.
 இந்த எச்சரிக்கையை அடுத்து பாம்பன் பகுதி நாட்டுப் படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.150-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குள் செல்வதை தவிர்த்துள்ளனர். சுற்றுலா பயணிகள் தனுஷ்கோடிக்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரம் அக்னிதீர்த்தம் மற்றும் தனுஷ்கோடி பகுதிகளில் பக்தர்கள் இல்லாததால் வெறிச்சோடி காணப்பட்டன. பலத்த காற்று, கடல் சீற்றத்தால் 11 அடி உயரத்திற்கு அலைகள் எழும் என்றும் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
கடலோர பகுதிகளில் 40 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடல் சீற்றத்தால் ராமேஸ்வரம், கன்னியாகுமரி கடற்பகுதிகள் அதிகம் பாதிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கன்னியாகுமரியில் மார்த்தாண்டம் அருகே கடல் கடும் சீற்றத்துடன் உள்ளது. 
மேலும் கிராமங்களுக்குள் கடல் நீர் புகுந்துள்ளது கடல்நீர் வீட்டுக்குள் புகுந்ததால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, மாற்று இடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரி முழுவதும் கடலோர பகுதிகளில் அரசு அதிகாரிகள் முகாமிட்டு ஆய்வு நடத்தி வருகின்றனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக