ஞாயிறு, 1 ஏப்ரல், 2018

சு.சாமி :காவிரி நீர் தான் வேண்டும் என்றால் அழுது புலம்பிக்கொண்டே இருங்க ..

காவிரி நீர் தான் வேண்டும் என்றால் அழுது புலம்பிக்கொண்டே இருக்க வேண்டியது தான் - சுப்பிரமணியன் சாமி
தினத்தந்தி :காவிரி நீர் தான் வேண்டும் என்றால்
அழுது புலம்பிக்கொண்டே இருக்க வேண்டியது தான் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி கூறியுள்ளார். புதுடெல்லி, காவிரி நீர் பங்கீடு தொடர்பாக நடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, கடந்த பிப்ரவரி 16-ந்தேதி தீர்ப்பு வழங்கியது.< தனது தீர்ப்பில் கர்நாடகம் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீரின் அளவை குறைத்த சுப்ரீம் கோர்ட்டு, ஏற்கனவே நடுவர் மன்றம் வழங்கியுள்ள இறுதித்தீர்ப்பை நிறைவேற்ற ‘ஸ்கீம்’ (செயல்திட்டம்) ஒன்றை 6 வார காலத்துக்குள் ஏற்படுத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. இதற்காக எந்த சூழ்நிலையிலும், எந்த விதமான கால நீட்டிப்பும் வழங்கப்பட மாட்டாது என்றும் சுப்ரீம் கோர்ட்டு தனது தீர்ப்பில் குறிப்பிட்டு இருந்தது.
நடுவர் மன்றம் தனது இறுதித் தீர்ப்பில் நீர் பங்கீட்டை மேற்கொள்ள காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்குமுறை குழு ஆகியவற்றை அமைக்க வேண்டும் என்று கூறி இருந்ததால், இந்த இரு அமைப்புகளையும் ஏற் படுத்த வேண்டும் என்பதைத்தான் ‘ஸ்கீம்’ என்று சுப்ரீம் கோர்ட்டு தனது தீர்ப்பில் குறிபிட்டுள்ளது என்பது பெரும்பாலானோரின் கருத்து.

இதன் அடிப்படையிலேயே, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று தமிழக அரசும், அரசியல் கட்சிகளும் மத்திய அரசை வற்புறுத்தி வருகின்றன. இந்த கோரிக்கையை வலியுறுத்தி விவசாய அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளன.

இதைத்தொடர்ந்து, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் விளக்கம் கோரி மத்திய அரசின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் நேற்று ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது பற்றி 3 மாதம் அவகாசம் கேட்டு இருக்கிறது.

இந்தநிலையில் காவிரி மேலாண்மை வாரியம் குறித்து பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன்சாமி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

தமிழக மக்களுக்கு தண்ணீர் வேண்டும் என்றால், கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் மூலம் உதவ நான் தயார். காவிரி நீர் தான் வேண்டும் என்றால் அழுது புலம்பிக்கொண்டே இருக்க வேண்டியது தான் என கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக