வெள்ளி, 27 ஏப்ரல், 2018

அழகிரியும் தயாநிதி மாறனும் நெருக்கம் ?

ஸ்டாலின்  எதிர்ப்பு:   இணையும் அழகிரி - தயாநிதி
மின்னம்பலம்:  திமுகவில் தயாநிதி மாறனுக்கும் அழகிரிக்கும் இடையே ஏற்பட்ட மோதலும் அதனால் ஏற்பட்ட விளைவுகளும் தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இந்த நிலையில் அண்மைக்காலமாக கருணாநிதியின் குடும்பத்துக்குள் ஏற்பட்டுவரும் மாற்றங்களின் ஒரு பகுதியாக தயாநிதி மாறனும் அழகிரியும் ஒரு புள்ளியில் ஒருங்கிணைவதாக ஒரு தகவல் உலவுகிறது.
ஏப்ரல் 25ஆம் தேதி அழகிரியின் மகன் துரை தயாநிதியின் குழந்தை ருத்ரனுக்கு முதலாமாண்டு பிறந்த நாள் விழா. இந்த விழாவை முதலில் மதுரையிலேயே நடத்த முடிவு செய்திருந்தார் அழகிரி. ஆனால், கோபாலபுரத்துக் குடும்பத்தினர் சிலர் அழகிரியிடம் போன் செய்து, ‘சென்னையிலேயே நடத்துங்கள். இங்கே இருப்பவர்கள் எல்லாம் திரண்டு வரவேண்டாமா?’ என்று அன்பு வேண்டுகோள் வைக்க, அதையடுத்து சென்னையிலேயே தன் பேரன் ருத்ரனின் முதலாமாண்டு பிறந்த நாள் விழாவைக் கொண்டாட முடிவு செய்தார் அழகிரி.

கடந்த வருடம் துரை தயாநிதியின் மனைவிக்கு வளைகாப்பு விழா சென்னை எம்.ஆர்.சி. நகரில் இருக்கும் லீலா பேலஸ் ஹோட்டலில்தான் நடந்தது. தனது குடும்பத்தினரின் வேண்டுகோளுக்கு இணங்க மீண்டும் சென்னையில் அதே ஹோட்டலிலேயே பேரன் பிறந்த நாள் விழாவைக் கொண்டாடினார் அழகிரி.
அவ்விழாவில் கலந்துகொண்ட குடும்பத்தினர், அழகிரிக்கும் தயாநிதிமாறனுக்கும் சமீப காலமாக ஏற்பட்டுவரும் நெருக்கத்தைச் சிலாகித்து வருகின்றனர். இதுபற்றி கோபாலபுர வட்டாரங்களில் விசாரித்தோம்.
“கடந்த வருடம் நடந்த வளைகாப்பு விழாவுக்கே தயாநிதி மாறனின் மனைவி உள்ளிட்ட குடும்பத்தினர் வருகை தந்து அழகிரியின் மருமகளுக்குக் கன்னத்தில் சந்தனம், குங்குமம் வைத்து சடங்குகளை செய்து கொண்டாடினர். அதேபோல கடந்த ஏப்ரல் 25 அன்று நடந்த பிறந்த நாள் விழாவிலும் தயாநிதி மாறன் குடும்பத்தினர் வந்து கலந்துகொண்டு அழகிரியின் பேரக் குழந்தையை வாழ்த்தினர். இந்த நிகழ்வில் ஸ்டாலின் குடும்பத்தினரோ, கனிமொழி குடும்பத்தினரோ கலந்துகொள்ளவில்லை” என்றனர்.
தொடர்ந்து சில குடும்ப அரசியல் விஷயங்களையும் நம்மிடம் பகிர்ந்துகொண்டனர்.
“திமுகவில் பெரும் பிரச்சினை ஏற்பட்டு கலைஞர் டிவி உண்டாக்கப்பட்டு அது 2ஜி விவகாரம் சென்றதற்கு மூல காரணமே தயாநிதி மாறன் - அழகிரி மோதல்தான். ஆனால், இப்போது மாறன் குடும்பத்தினரும் அழகிரி குடும்பத்தினரும் நெருக்கம் காட்ட ஆரம்பித்திருக்கிறார்கள். இதில் வேறு சில உட்கட்சி அரசியல் முடிச்சுகளும் இருக்கின்றன. தயாநிதி மாறன் தனக்கு கட்சியில் வலிமையான பொறுப்பு வேண்டும் என்று சில வருடங்களாகவே ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்து வருகிறார். வழக்கு எல்லாம் முடியட்டும் என்று பதில் சொல்லியே அதை தட்டிக் கழித்து வந்தார் ஸ்டாலின். இந்த நிலையில் தயாநிதி மீதான முக்கிய வழக்குகளான ஏர்செல் மேக்சிஸ், பி.எஸ்.என்.எல். இணைப்பு வழக்குகளில் அவர் விடுதலையாகிவிட்டார். அதன் பிறகும் கட்சிப் பதவிக்கான முயற்சியைத் தொடர்ந்தார் மாறன். இளைஞரணிச் செயலாளர் பதவி தரப்பட்டால் தன்னால் மிகச் சிறப்பாக செயல்பட முடியும் என்று ஸ்டாலினிடமே பேசியிருக்கிறார் தயாநிதி. ஆனாலும் அவருக்குப் பதவி வழங்குவது பற்றி ஸ்டாலின் யோசிக்கக்கூட இல்லை. இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலின் சமீபமாக கட்சியில் முன்னிறுத்தப்படுவது தயாநிதி மாறனுக்கும் பிடிக்கவில்லை, அழகிரிக்கும் பிடிக்கவில்லை.
இந்தக் குடும்ப அரசியல் பின்னணியில்தான் அழகிரியின் பேரன் பிறந்த நாள் விழாவில் தயாநிதி மாறனின் குடும்பத்தினர் கலந்துகொண்டிருக்கிறார்கள். அப்போது அழகிரியிடம், நீங்க மீண்டும் கட்சிக்கு வாங்க என்று அழைப்பு விடுத்திருக்கிறார்கள். அவர்களுக்கு எந்த பதிலும் சொல்லவில்லையாம் அழகிரி. இந்த விழாவில் நடந்த விஷயங்கள், கலந்துகொண்டவர்கள் பற்றிய விஷயங்கள் ஸ்டாலினுக்கும் தெரிய வந்திருக்கிறது” என்றனர்.
கோபாலபுரக் குடும்ப அரசியலில் அழகிரியும் தயாநிதி மாறனும் ஸ்டாலின் எதிர்ப்பு என்ற ஒரு புள்ளியில் ஒருங்கிணைகிறார்களோ என்ற விவாதத்தை அழகிரியின் பேரன் பிறந்த நாள் விழா ஏற்படுத்தியிருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக