செவ்வாய், 17 ஏப்ரல், 2018

BBC :ஹைதராபாத் மெக்கா மசூதி குண்டு வெடிப்பு குற்றவாளிகள் விடுதலை ..சாமியார் அசீமானந்த் ,தேவேந்...


ஹைதராபாத் மக்கா மஸ்ஜித் மசூதி குண்டு வெடிப்பு: குற்றம் சாட்டப்பட்ட
சாமியார் அசீமானந்த் தேவேந்திர குப்தா, லோகேஷ் சர்மா, பரத் பாய் , ராஜேந்திர சவுத்திரி  விடுதலை!
ஹைதராபாத் மெக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கில், குற்றஞ்சாட்டப்பட்ட ஐந்து பேரையும் தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றம் விடுவித்துள்ளது. போதிய ஆதாரங்கள் இல்லாததால் குற்றஞ்சாட்டப்பட்ட ஆசிமானந்தா, தேவேந்திர குப்தா, லோகேஷ் ஷர்மா, பரத் மோகன்லால் மற்றும் ராஜேந்தர் சௌத்ரி ஆகியோரை விடுதலை செய்வதாக நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இது தொடர்பாக குற்றஞ்சாட்டப்பட்ட 10 பேரில், ஒருவர் உயிரிழந்து விட்டார், மேலும் இருவர் மீது விசாரணை நடைபெற்று வருகிறது. >2007ஆம் ஆண்டு மே 18 அன்று மெக்கா மசூதியில் மதிய வழிபாடுகள் முடிந்த போது வெடிகுண்டு வெடித்ததில் ஐந்து பேர் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர். 58 பேர் படுகாயமடைந்தனர்.
வெள்ளிக்கிழமை என்பதால் சம்பவம் நடந்த அந்த நேரத்தில் குறைந்தது பத்தாயிரம் பேர் மசூதியில் வழிபட்டு கொண்டிருந்தனர்.11 ஆண்டுகள் வழக்கு விசாரணை பிறகு சிறப்பு நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
தீர்ப்புக்கு பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய ஆசிமானந்தாவின் வழக்கறிஞர் ஜே பி ஷர்மா, இது "ஜோடிக்கப்பட்ட வழக்கு" என்று கூறினார்.
இதனிடையே, இத்தீர்ப்பை வழங்கிய நீதிபதி ரவீந்தர் ரெட்டி தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். அவரது ராஜிநாமாவுக்கான காரணங்கள் இன்னமும் தெரியவில்லை.


தனது ராஜிநாமா குறித்த தகவலை அவர் உயர் நீதிமன்றத்துக்கு தொலைநகல் மூலம் அனுப்பியுள்ளார். g>பாதிக்கப்பட்டவர்கள் என்ன சொல்கிறார்கள்?<>தீப்தி, பிபிசி தெலுங்கு செய்தியாளர்
"நாங்கள் நினைத்ததற்கு நேர்மாறாக இந்தத் தீர்ப்பு வந்துள்ளது. சம்பவத்தில் உயிரிழந்த என் அண்ணன் மகனுக்கு நீதி கிடைக்கவில்லை" என்கிறார் 58 வயதான மொஹமத் சலீம். இவர் 2007ஆம் ஆண்டு மெக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பில் உயிரிழந்த ஷேக் நயீமின் மாமா.
இந்த தீர்ப்பில் பலருக்கு மகிழ்ச்சி இல்லை. "யார் என் சகோதர சகோதரிகளை கொன்றது?" என நீதிமன்ற வளாகத்திலேயே ஒருவர் கூறினார்
முன்னதாக இந்த குண்டு வெடிப்பு வழக்கில் பல முஸ்லிம் இளைஞர்களை சந்தேகத்தின் பேரில் போலீஸார் சுற்றி வளைத்தனர். அதில் பெரும்பாலானோர் கைது செய்யப்பட்டு பின்பு 2008ஆம் ஆண்டு விடுதலையாகினர்.
33 வயதான சயத் இம்ரான் கானை ஹைதராபாத் பொவனப்பள்ளியில் உள்ள அவரது வீட்டில் 2007ஆம் ஆண்டு போலீஸார் கைது செய்தனர். கைது செய்யப்படும்போது பொறியியல் படிப்பு படித்துக் கொண்டிருந்த அவருக்கு 21 வயது. தற்போது அவர் தனியார் அலுவலகத்தில் நிர்வாக மேலாளர் பணியில் உள்ளார்.
"18 மாதங்கள் சிறையில் இருந்த நான், வெளியே வந்து பொறியியல் படிப்பு முடித்தேன். ஆனால் எனக்கு யாரும் வேலை தரவில்லை. இப்போது அவர்களையும் விடுதலை செய்து விட்டார்கள். விசாரணை அமைப்புகள் இதற்கு பதில் சொல்ல வேண்டும். நான் செய்யாத தவறுக்கு என் வாழ்நாள் முழுவதும் தண்டனை அனுபவித்து வருகிறேன். இதற்கு யார் பொறுப்பு?" என்று கேள்வி எழுப்புகிறார் பிபிசியிடம் பேசிய சயத் இம்ரான்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக