வியாழன், 12 ஏப்ரல், 2018

சென்னை வரும் மோடிக்கு கறுப்பு கொடி... எங்கும் விடாது தொடரும் போராட்டம்


தெருமுனை முதல் ட்விட்டர் வரை: பிரதமருக்கு கறுப்புக் கொடி!மின்னபலம் :பிரதமர் மோடி இன்று (ஏப்ரல் 12) சென்னை வருவதை ஒட்டி காவல் துறையினரின் பாதுகாப்பு ஏற்பாடுகளும், போராட்டக்காரர்களின் கறுப்புக் கொடி ஏற்பாடுகளும் தீவிரம் அடைந்துள்ளன.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கச் சொல்லி பிப்ரவரி 16ஆம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் கெடு முடிந்ததும், ‘ஸ்கீம்’ என்ற வார்த்தைக்கு விளக்கம் கேட்டும், அவகாசம் கேட்டும் மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தை நாட, அந்த மனுவை உச்ச நீதிமன்றமும் ஏற்றுக்கொள்ள, இன்றுவரை காவிரி மேலாண்மை வாரியம் அமையவில்லை. பிப்ரவரி 16 முதல் இரண்டு மாதங்களாக இதுபற்றி ஒரே ஒரு வார்த்தைகூட பேசாத பிரதமர் மோடி இன்று சென்னை வருகிறார்.

இந்த நிலையில்தான் தமிழகத்தில் பாஜக, அதிமுக தவிர கிட்டத்தட்ட அனைத்துக் கட்சிகளும் பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்புக் கொடி காட்டும் போராட்டங்களை அறிவித்திருக்கின்றன. அதிமுகவோ பச்சைக் கொடி காட்டுவதாக அறிவித்தது.
வீதிகளில் கறுப்புக் கொடி
பிரதமர் மோடி தமிழகம் வரும் நாள் துக்க நாள் என்றும், இதற்காக அனைவரும் தங்கள் வீடுகளில் கறுப்புக் கொடியை ஏற்றிட வேண்டும் என்றும் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார். நேற்று இரவே சென்னை முழுவதும் பல்வேறு இடங்களில் கறுப்புக் கொடி ஏற்றப்பட ஆரம்பித்துவிட்டன.

மதிமுகவின் தலைமை அலுவலகமான தாயகத்தில் நேற்று இரவு 8 மணிக்கே கறுப்புக் கொடியை முன்னின்று ஏற்றினார் மதிமுகவின் துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா. ‘தமிழக மண்ணில் கால் பதிக்கும் வரையில்கூட காவிரி மேலாண்மை வாரியம் பற்றி பேசாத பிரதமருக்கு இன்று தமிழகத்தில் காட்டப்படும் எதிர்ப்பு, கட்சிகளின் எதிர்ப்பல்ல; ஒட்டுமொத்த தமிழக மக்களின் எதிர்ப்பு’ என்று நம்மிடம் குறிப்பிட்டார் மல்லை சத்யா. நேற்று இரவே சென்னை முழுவதும் பல்வேறு இடங்களில் கறுப்புக் கொடிகள் ஏற்றப்பட்டன. டூவீலர்களில் பலர் கறுப்புக் கொடியைக் கட்டி வைத்துவிட்டனர்.

கட்சிகளின் கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டங்கள்!
பிரதமருக்கு எதிரான கறுப்புக் கொடிப் போராட்டங்களை திமுக, மதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஒருபக்கம், தமிழ்நாடு கலை இலக்கிய பண்பாட்டுப் பேரவை சார்பில் இயக்குநர்கள் பாரதிராஜா, சீமான் உள்ளிட்டோர் ஒருபக்கம் என்று பல்வேறு தரப்புகளில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
திமுக சார்பில் இன்று காலை விமான நிலையத்தின் நீல நிற கேட் எதிரில் உள்ள டிரைடண்ட் ஹோட்டல் மற்றும் பெட்ரோல் பங்க் அருகே, மாவட்டச் செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான தா.மோ.அன்பரசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் திட்டமிடப்பட்டிருக்கிறது. இதில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், எம்.பி திருச்சி சிவா உள்ளிட்டோரும் பங்கேற்கின்றனர்.
கிண்டி காவல் நிலையம் அருகே, மாவட்டச் செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான மா.சுப்பிரமணியன் தலைமையில் கறுப்புக் கொடி ஆர்பாட்டம் நடக்கிறது.
சைதாப்பேட்டை கருணாநிதி பொன் விழா வளைவு அருகில் மாவட்டச் செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான ஜெ.அன்பழகன் தலைமையில் கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இதில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வைகோ கறுப்புக் கொடி!
‘தமிழ்நாட்டுக்கு வாழ்வாதாரமான காவிரிப் பிரச்சினையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத துரோகம் உட்பட தமிழ்நாட்டின் உரிமைகளுக்கும் நலன்களுக்கும் விரோதமாகச் செயல்பட்டுவரும் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் வருகையை எதிர்த்து தமிழக மக்களின் கொந்தளிப்பை உணர்த்தும் வகையில் 2018 ஏப்ரல் 12ஆம் அன்று காலை 10 மணி அளவில் தமிழ்நாட்டுக்கு வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு கண்டனம் தெரிவிக்கும் விதத்தில் சென்னை வேளச்சேரி சாலை, சின்னமலை, வி.எஸ்.டி. மோட்டார் அருகில் எனது தலைமையில் கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெறும்’ என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.
பாரதிராஜா, சீமான், தமிமுன் அன்சாரி
காவிரி உரிமை மீட்புக் குழு, தமிழர் கலை, இலக்கிய பண்பாட்டு பேரவை சார்பில் கறுப்புக் கொடி காட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. கறுப்புக் கொடியோடு காலை 9 மணிக்கு கிண்டி ரவுண்டானா அருகில் திரண்டு அங்கிருந்து விமான நிலையம் நோக்கிப் புறப்படத் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் கிண்டியில் இருந்து ஒரு குழுவினர் கிளம்பும் முன்னரே அதிகாலையில் விமான நிலையத்துக்கு எதிரில் உள்ள மைதானத்தில் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்த நாம் தமிழர் கட்சி சார்பில் சில முன்னெடுப்புகள் நடந்தன.
மூடப்படும் பட்டேல் சாலை
பிரதமரின் வருகையை ஒட்டி இன்று காலை 11 மணி முதல் பிற்பகல் 2.30 வரை போக்குவரத்தில் பெரிய மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.

சென்னை விமான நிலையத்தில் இருந்து அடையாறு செல்லும் வாகனங்கள் கிண்டி பாலம், ஹால்டா சந்திப்பு, சின்னமலை வழியாக ஆளுநர் மாளிகை, ஐ.ஐ.டி. வழியாக செல்ல இன்று அனுமதியில்லை. அதற்கு பதிலாக சின்னமலையில் இருந்து சைதாப்பேட்டை நோக்கித் திருப்பிவிடப்படுகின்றன.
அதேபோல அடையாறில் இருந்து கிண்டி செல்லும் வாகனங்கள் மத்திய கைலாஷ் சிக்னலோடு நிறுத்தி இடதுபுறம் ராஜீவ் காந்தி சாலையில் திருப்பிவிடப்படுகின்றன.
இதனால் காலை 11 மணி முதல் பிற்பகல் வரை ஆளுநர் மாளிகை, ஐ.ஐ.டி., புற்றுநோய் ஆராய்ச்சி நிலையம் அமைந்திருக்கும் சர்தார் வல்லபபாய் பட்டேல் சாலை கிட்டத்தட்ட மூடப்பட்டிருக்கும். இந்த சாலையில்தான் பிரதமர் பிற்பகல் புற்றுநோய் ஆராய்ச்சி நிலைய விழாவில் கலந்துகொள்கிறார்.
இதேபோல மாமல்லபுரம் - கோவளம் சாலை இன்று காலை முதலே போக்குவரத்து நிறுத்தம் செய்யபப்பட்டிருக்கிறது.
போலீஸார் குவிப்பு
தமிழகத்தின் ஒட்டுமொத்த போலீஸ் உயரதிகாரிகளும் சென்னை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள். 5 ஆயிரத்துக்கும் அதிகமான போலீஸார் சென்னையைக் கண்காணித்துக் கொண்டிருக்கிறார்கள். பிரதமரின் சாதாரணமான பயணம் என்றாலே பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்த்துப் பார்த்து செய்வார்கள். இன்று பல கட்சிகளும் இயக்கங்களும் பிரதமர் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கறுப்புக் கொடி காட்டுகிறார்கள் என்பதால் பாதுகாப்பு மேலும் மேலும் பலப்படுத்தப்பட்டிருக்கிறது.
மேலும் ஐபிஎல் எதிர்ப்புப் போராட்டத்தில் கிடைத்த பாடத்தால் குழு குழுவாக திடீர் திடீரென பிரதமருக்கு எதிரான கறுப்புக் கொடி போராட்டம் நடத்தப்படலாம் என்பதால் காவல் துறையினர் டென்ஷனில் இருக்கின்றனர்.
ஹாஷ்டேக் போராட்டம்
களத்தில் மட்டுமல்ல; இணையத்திலும் பிரதமர் மோடியின் வருகையை எதிர்த்துப் போராட்டங்கள் தொடங்கிவிட்டன. #modigoback #where is cmb உள்ளிட்ட ஹாஷ்டேக்குகள் இன்று பிரதமர் மோடிக்கு எதிராக ட்விட்டரில் தமிழர்களால் முன்னெடுக்கப்படுகின்றன. திமுகவின் ஐடி அணி சார்பில் இன்று காலை 8.30-க்கு மோடிக்கு எதிரான ஹாஷ்டேக் அறிவிக்கப்படுகிறது.
இன்று இந்திய அளவில் மோடிக்குத் தமிழகம் காட்டும் எதிர்ப்பே ட்விட்டரில் டிரண்டாக இருக்க வேண்டும் என்ற வகையில் இதற்கான ஏற்பாடுகளை செய்திருக்கிறார்கள் திமுக தகவல் தொழில்நுட்ப அணியினர்.
ஒருவேளை விமான, ஹெலிகாப்டர் பயணங்களால் தமிழர்களின் கறுப்புக் கொடிகள் பிரதமர் கண்ணில் படாமல் போய்விட்டாலும்... ட்விட்டரில் தமிழர்களின் கறுப்புக் கொடி நிச்சயம் பிரதமரின் பார்வையில் படும்.
இந்த வகையில் இன்று பிரதமர் மோடிக்குத் தமிழகத்தில் எங்கெங்கு காணினும் கறுப்புப் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக