திங்கள், 2 ஏப்ரல், 2018

சி.பி.எஸ்.இ வினாத்தாள் வெளியானது பாஜக மாணவர் தலைவர் சதீஷ் பாண்டே கைது : சி.பி.எஸ்.இ. அதிகாரி பணியிடை நீக்கம்

tamil.news18.com :DS Gopinath: சிபிஎஸ்இ கேள்வித்தாள் கசிந்தது தொடர்பாக பாஜகவின் 
மாணவர் பிரிவான ஏபிவிபி அமைப்பின் தலைவர் உள்ளிட்ட 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் சிபிஎஸ்இ பள்ளிகளில் அண்மையில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வுகளில் இரு பாடங்களுக்கான கேள்வித் தாள்கள் முன்கூட்டியே கசிந்தன. குறிப்பாக, கடந்த 28-ஆம் தேதி நடைபெற்ற பத்தாம் வகுப்பு கணிதத்  தேர்வின் கேள்வித்தாளும், பிளஸ் 2 பொருளாதாரத் தேர்வின் கேள்வித்தாளும் கசிந்தன. இதையடுத்து,  இந்த இரு தேர்வுகளும் ரத்து செய்யப்படுவதாக சிபிஎஸ்இ அறிவித்தது.< தொடர்ந்து, பிளஸ் 2 பொருளாதாரப் பாடத்துக்கான மறுதேர்வு ஏப்ரல் 25- ஆம் தேதி நடைபெறும் என்று அறிவித்த சிபிஎஸ்இ, பத்தாம் வகுப்பு கணிதப் பாடத்தின் மறுதேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அறிவித்தது.


இந்நிலையில், கேள்வித்தாள் கசிந்தது தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்ட போலீஸார் இதுவரை 12 பேரை கைது செய்துள்ளனர்.

இதுதொடர்பாக, ஜார்கண்ட் மாநிலம், சத்ரா மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அகிலேஷ் பி.வாரியர் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

இந்த விவகாரம் தொடர்பாக, இதுவரை 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 9 பேர் மாணவர்கள். இவர்கள் அனைவரும் ஹஸாரிபாக் பகுதியில் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு கேள்வித் தாளை கசியவிட்டதற்காக சதீஷ் பாண்டே என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர், ஏபிவிபி அமைப்பின் சத்ரா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆவார். சதீஷ் பாண்டே உள்பட்ட 3 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது என்றார் அகிலேஷ் பி.வாரியர்.
சி.பி.எஸ்.இ. கேள்வித்தாள்கள் வெளியான விவகாரத்தில் சி.பி.எஸ்.இ. மேற்பார்வை அதிகாரி கே.எஸ்.ரானா நேற்று அதிரடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

கேள்வித்தாள்கள் வெளியான விவகாரம்: சி.பி.எஸ்.இ. அதிகாரி பணியிடை நீக்கம் புதுடெல்லி: சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு பொருளாதார தேர்வு மற்றும் 10-ம் வகுப்பு கணித தேர்வு ஆகியவற்றின் கேள்வித்தாள்கள் தேர்வு நடைபெறுவதற்கு முன்பாகவே வெளியான விவகாரத்தில் சி.பி.எஸ்.இ. மேற்பார்வை அதிகாரி கே.எஸ்.ரானா நேற்று அதிரடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். டெல்லியில் உள்ள எண் 859-வது தேர்வு மையத்தை மேற்பார்வையிட்டதில் அவர் கவனக்குறைவாக செயல்பட்டதன் காரணமாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக சி.பி.எஸ்.இ. நிர்வாகம் தெரிவித்து உள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டு மந்திரி பிரகாஷ் ஜவடேகர் இந்த விவகாரத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக கல்வித்துறை செயலாளர் அனில் சுவரூப் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக