வெள்ளி, 27 ஏப்ரல், 2018

11 MLA-க்கள் தகுதி நீக்க வழக்கில் இன்று பிற்பகல் தீர்ப்பு வெளியாகிறது.. ஓபிஎஸ், மாபா .....

தினகரன் : சென்னை: ஓ.பன்னீர்செல்வம், மா.பா.பாண்டியராஜன் உட்பட 11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் இன்று பிற்பகலில் தீர்ப்பு அளிக்கப்படுகிறது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஓ,பன்னீர்செல்வம் முதல்வராக பொறுப்பேற்று கொண்டார். இதை தொடர்ந்து, ஓ.பன்னீர்செல்வத்தை முதல்வர் பதவியில் இருந்து விலக கூறியதை தொடர்ந்து கட்சியை 2 ஆக உடைத்தார். எடப்பாடி பழனிசாமி முதல்வராக பதவியேற்று கொண்டார்.  அப்போதைய கவர்னர் வித்யாசாகர் ராவ் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட்டார். இதன் படி, கடந்த 2016 பிப்ரவரி 18ம் தேதி நடந்த எடப்பாடி பழனிசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின் போது, அரசுக்கு எதிராக வாக்களித்த ஓ.பன்னீர்செல்வம், மா.பா.பாண்டியராஜன் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் அரசு கொறடாவின் உத்தரவிற்கு எதிராக வாக்களித்தனர் என்றும் எனவே, அவர்களை தகுதி நீக்கம் செய்ய ேவண்டும் என்று கோரி திமுக கொறடா சக்கரபாணி மற்றும் டிடிவி தினகரன் ஆதரவு தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் வெற்றிவேல் உள்ளிட்ட 4 பேரும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.


இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி நீதிபதி சுந்தர் ஆகியோர் அடங்கிய முதல் டிவிஷன் பெஞ்சில் விசாரணைக்கு வந்தது. திமுக சார்பில் மூத்த வக்கீல் கபில் சிபல் உள்ளிட்டோர் ஆஜராகினர். கபில் சிபில் வாதிடும் போது அரசு கொறடாவின் உத்தரவிற்கு எதிராக அரசுக்கு எதிராக வாக்களித்த ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யுமாறு சட்டப்பேரவை தலைவருக்கு உத்தரவிட வேண்டும் என்று வாதிட்டார்.இரு தரப்பு வாதங்களை கேட்ட தலைமை நீதிபதி அடங்கிய டிவிஷன் பெஞ்ச் தீர்ப்பை தள்ளி வைத்து உத்தரவிட்டது. இந்நிலையில், மிகவும் எதிர்பார்ப்புக்கு உள்ளான இந்த வழக்கில் இன்று மதியம் 2.15 மணிக்கு தலைமை நீதிபதி அடங்கிய முதல் டிவிஷன் பெஞ்ச் தீர்ப்பு அளிக்கிறது. தமிழக அரசியலில் எதிர்பார்ப்பையும் மாற்றத்தையும் ஏற்படுத்த கூடிய வகையில் இந்த தீர்ப்பு அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தீர்ப்பு வழக்கு தொடர்ந்தவர்களுக்கு சாதகமாக இருக்கும் பட்சத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் பாண்டியராஜன் ஆகியோரின் பதவிகள் கேள்வி குறியாகும் என்று அரசியல் பார்வையாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது. ஏற்கனவே, குட்கா முறைகேடு வழக்கில் சிபிஐ விசாரணையை எதிர்கொள்ள இருக்கும் அதிமுக அரசுக்கு இன்று உயர் நீதிமன்றம் வழங்க உள்ள தீர்ப்பால் நெருக்கடி ஏற்பட வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக