புதன், 14 மார்ச், 2018

உபி இடைதேர்தல்களின் சமாஜவாதி வெற்றி ...

யோகி ஆதித்யாநாத் கருத்து காங்கிரஸ் கட்சியை கட்டமைப்போம் Mayura Akhilan" Oneindia :  டெல்லி: உத்தரபிரதேசத்தில் கோரக்பூர் மற்றும் புல்பூர் லோக்சபா தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் சமாஜ்வாதி கட்சி வெற்றி பெற்றுள்ளது. பாஜக தோல்வியை தழுவியுள்ளது. காங்கிரஸ் கட்சி டெபாசிட்டை பறிகொடுத்துள்ளது.
யோகி ஆதித்யநாத்தின் கோட்டையாக கருதப்பட்ட கோரக்பூர் மக்களவைத் தொகுதியில் பாஜக தோல்வியடைந்துள்ளது. சமாஜ்வாதி வேட்பாளர் பிரவீண்குமார் வெற்றி பெற்றுள்ளார்.
அதேபோல் புல்பூர் லோக்சபா இடைத்தேர்தலில் பாஜக தோல்வி அடைந்துள்ளது. புல்பூர் இடைத்தேர்தலில் சமாஜ்வாதி வேட்பாளர் நாகேந்திர பிரதாப் சிங் வெற்றி பெற்றுள்ளார். சுமார் 59,000 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் கே.எஸ்.பட்டேலை தோற்கடித்துள்ளார். இந்த வெற்றியை சமாஜ்வாதி கட்சியினர் கொண்டாடி வருகின்றனர்.



டிவிட்டரில் ராகுல்காந்தி

இடைத்தேர்தல் முடிவுகள் பற்றி காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேச மக்கள் பாஜக மீது கோபத்தில் இருப்பது இடைத்தேர்தல் முடிவுகளில் தெரியவந்துள்ளதாக ராகுல் காந்தி கூறியுள்ளார்.



காங்கிரஸ் கட்சியை கட்டமைப்போம்

உ.பி.யில் பாஜக மீதான கோபம் காரணமாக மாறுதலுக்காக பாஜக அல்லாத சமாஜ்வாதி கட்சிக்கு மக்கள் வாக்களித்துள்ளனர் என அவர் கூறியுள்ளார். மேலும், உத்தரப்பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியை மீண்டும் வலிமையாக கட்டமைக்கும் பணியில் ஈடுபடுவோம் என ராகுல் தெரிவித்துள்ளார்.



காங்கிரஸ் டெபாசிட் காலி

உத்தரபிரதேசத்தில் கோரக்பூர் மற்றும் புல்பூர் லோக்சபா தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் பாஜக தோல்வியடைந்துள்ள போதிலும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் டெபாசிட்டை பறிகொடுத்துள்ளனர். பாஜகவிற்கு ஒட்டு போட மாட்டோம், அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சியையும் படுதோல்வியடையச் செய்வோம் என்று சொல்லாமல் சொல்லியுள்ளனர்.



யோகி ஆதித்யாநாத் கருத்து

இடைத்தேர்தலில் மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறேன் என்று யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். இடைத்தேர்தலில் பாஜகவின் தோல்வி குறித்து ஆராயப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் கூட்டணியை குறைவாக மதிப்பிட்டதே தோல்விக்கு காரணம் என்றும் ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக