திங்கள், 5 மார்ச், 2018

ஸ்டாலின் : பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற வேண்டும மகளிர் தினவிழாவில்


தினத்தந்தி :நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற பிரதமர் முன்வர வேண்டும் என்று மகளிர் தின விழாவில் மு.க.ஸ்டாலின் பேசினார். சென்னை, தி.மு.க. மகளிரணி, மகளிர் தொண்டரணி மற்றும் பிரசார குழு சார்பில் உலக மகளிர் தினவிழா சென்னையில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி., முன்னாள் மத்திய மந்திரியும், எம்.பி.யுமான ரேணுகா சவுத்ரி ஆகியோர் பேசினார்கள். விழாவில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
தி.மு.க. தலைவர் கருணாநிதி மற்றும் என்னுடைய சார்பில் தி.மு.க. மகளிரணிக்கு நான் ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். மகளிர் பாதுகாப்புக்காக உதவிமைய எண்ணை உருவாக்க வேண்டும். அதில் நீங்கள் உறுதியாக ஈடுபட வேண்டும். பெரும்பான்மையோடு மத்தியில் பா.ஜ.க. ஆட்சி இருக்கிறது. பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு மாநிலங்களவையில் தீர்மானம் நிறைவேற்றி இருந்தாலும், நாடாளுமன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட வேண்டும். ஆனால் பெரும்பான்மையோடு இருக்கும் மோடி அரசு இதுவரை நிறைவேற்றவில்லை. அதைப்பற்றி கவலைப்படவில்லை.


பெண்களுக்கு சமபங்கு அளிக்க வேண்டும் என்று போகும் இடமெல்லாம் மோடி பேசி வருகிறார். அப்படி பேசும் அவர் இதை நிறைவேற்ற முன்வருகிறாரா? நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற அவர் முன்வரவேண்டும். அதுதான் பிரதமர் மோடி, பெண்களுக்கு செய்யும் உண்மையான மரியாதையாக இருக்கும். நிறைவேற்ற முன்வரவில்லை என்றால், அதை கொண்டுவருவதற்கான சூழ்நிலையை உருவாக்க நாம் தயாராக இருக்க வேண்டும். கனிமொழி எம்.பி. பேசியதாவது.

பெண்களுக்கு எதிரான வன்முறை இந்த ஆட்சியில் அதிகரித்துக்கொண்டே வருகிறது. பெண்களுக்கு பாதுகாப்பே இந்த ஆட்சியில் இல்லை. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத இடமாக தமிழகம் இருக்கிறது. பெண்களுக்கு எதிரான வன்முறைகள் 10 ஆண்டுகளில் இரட்டிப்பாகியிருக்கிறது.

காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி மத்தியில் ஆட்சி செய்தபோது நிர்பயா பெயரில் ரூ.1,000 கோடி நிதி உருவாக்கப்பட்டு, வழங்கப்பட்டிருக்கிறது. அதில் இருந்து மாநிலங்கள் ஒரு தொகையை பெற்று பெண்களுக்கு பாதுகாப்பான விஷயங்களை உருவாக்குவதற்கு பயன்படுத்தலாம். ஆனால் தமிழக அரசு இதுவரை அந்த நிதியை பெறுவதற்கு ஒரு வரைவைகூட உருவாக்கவில்லை.

பெண்கள் இடஒதுக்கீட்டு மசோதாவை நிறைவேற்றுவோம் என்று கூறி ஆட்சிக்கு வந்த பா.ஜ.க. எதையும் செய்யவில்லை. பெண்களுக்கான உரிமை, சுயமரியாதையை மீட்டெடுக்க வேண்டுமென்றால் தி.மு.க. ஆட்சி உருவாக வேண்டும். தமிழகத்தை காப்பாற்ற வேண்டும் என்றால் வரக்கூடிய தேர்தலில் மு.க.ஸ்டாலினை முதல் -அமைச்சராக ஆக்குவோம் என்று பெண்கள் சூளுரை எடுக்கவேண்டும்.

ரேணுகா சவுத்ரி எம்.பி. பேசுகையில், ‘பெண்கள் முன்னேறி செல்லும் பாதையில் ஆண்கள் தோள்கொடுத்து வரவேண்டும். தமிழ்நாடு நல்ல முறையில் வழிநடத்துகிற முதல்-அமைச்சரை சீக்கிரத்தில் பெற இருக்கிறது. எந்த முதல்-அமைச்சர் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறாரோ அந்த மாநிலம் முன்னேறும். நம்முடைய உரிமையை நாம் பிச்சையாக கேட்கவில்லை. அரசியல் அமைப்பு சட்டத்தின்படி நம்முடைய உரிமையை பெற நமக்கு இடம் இருக்கிறது’ என்றார்.

நிகழ்ச்சியில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஜெ.அன்பழகன், எம்.கே.மோகன், பி.கே.சேகர்பாபு மற்றும் மகளிரணி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக