திங்கள், 5 மார்ச், 2018

பகல் கொள்ளை மின்னணு வாக்குமுறையை ஒழித்துக்கட்ட எல்லோரும் ஓரணியில்.....

Parthiban Pakirisamy : ஆகவே அரசியலாளர்களே.... உங்களிடம் ஒரு குறைந்தபட்ச நேர்மையும் அரசியலில் அறிவு நாணயமும் இருக்குமேயானால் முதலில் இந்த பகல் கொள்ளை மின்னணு வாக்குமுறையை ஒழித்துக்கட்ட எல்லோரும் ஓரணியில் திரளுங்கள். இங்கே எந்தவிதமான மாநில உரிமைகளும் இல்லாத நிலையில், உங்களுடைய குறைந்தபட்ச கட்சி செயல்திட்டங்கள் எல்லாம் நாங்கள் அறிந்ததே. அதுபற்றி மேலும் எந்த அறிவுரைகளையோ நாங்கள் வந்தால் அல்லது எங்கள் கட்சிக்கு மக்கள் ஒரேயொருமுறை வாய்ப்பளித்தால், நாங்கள் வானத்தை வில்லாக வளைப்போம் நீரின் மேல் நடந்துகாட்டுவோம் என்கிற பாட்டெல்லாம் ஒருபுறமிருக்கட்டும்; முதலில் தூங்குவது போன்று நடிப்பதை நிறுத்துங்கள்.
ஒன்றுக்கும் உதவாத இந்த மின்னணு வாக்கு முறையை வைத்துக்கொண்டும் தொடர்ந்து இந்த வகையான வாக்குமுறையினால் ஒட்டுமொத்த இந்திய துணைக்கண்டம் முழுவதிலும் சிறு நன்மை மருந்துக்காகக்கூட நடைபெறவில்லை என்பதை தெரிந்திருந்தும்; நீங்கள் எல்லோரும் அதாவது எல்லா தேர்தல் கட்சிகளும் அதுபற்றி ஒன்றுமே அறியாதது போலவும், தற்போதுதான்
வேற்றுகிரகத்தில் இருந்து வந்து இறங்கியது போன்ற மன நிலையில் வெறும் அடுத்தகட்ட கூட்டணி கட்சி கூட்டங்கள் என்பதை தாண்டி; காகித வாக்குமுறை வந்தால்தான் நாங்கள் எந்தக்கட்சியாயினும் முதலில் வேட்புமனுவையே தாக்கல்செய்வோம் அதுவரை பொதுமக்கள் யாரும் வாக்களிக்க வாக்குச்சாவடிக்கு வரமாட்டார்கள் என்று குறைந்தபட்சம் இந்த கருத்திலாவது ஒன்றிணைந்து பயணிக்காமல், எரிகிற வீட்டில் உருவினது இலாபம் என்கிற மனப்போக்கு மிகவும் ஆபத்தானது மட்டுமன்றி இது ஒட்டுமொத்த மக்களையும் அழித்துவிடும் என்க!
உலக தகவல் தொழில்நுட்பத்தையே விரல்நுனியில் வைத்திருக்கும் வல்லாதிக்க மேற்குலக நாடுகளே இந்த திட்டம் பாதுகாப்பற்றது என்று கைவிட்டு மீண்டும் காகித வாக்குமுறைக்கு (conventional voting system) திரும்பிவிட்ட நிலையில்; விஞ்ஞானத்தில் "கால் நொடி நின்றோம் நாம் ஆயிரம் காதம் பின்னடைந்தோம்" என்று மேற்குலக நாடுகளுடன் நமக்குள்ள தொழில்நுட்ப இடைவெளியை முனைவர் வ சே குழந்தைசாமி அவர்கள் 1990 களில் தினமணி கட்டுரையில் எழுதிய வாசகம்தான் தற்போது நமக்கு நினைவிற்கு வருகிறது. இந்த விடயத்தில் எல்லா கட்சிகளும் ஒரே மாதிரி சொல்லிவைத்தாற்போன்று கள்ள மௌனம் காப்பது நமது மொழி பண்பாடு இந்த இரண்டிற்கும் கேடு விளைவித்துவிடும் என்பதோடு, ஒரு இனத்தை அழிக்கவேண்டுமானால் அதன் மொழியையும் பண்பாட்டையும் அழித்தால் போதும் என்பதுதான்; தற்போதைய நம் கண்முன்னே நடக்கிற வங்கி முதல் பட்டம் பட்டய இன்னபிற மத்திய அரசு சார்ந்த சான்றிதழ் வரையிலான இந்தி திணிப்பு, அந்நிய பெருநிறுவனங்களின் ஆக்கிரமிப்பு, புதிய புதிய மக்கள் நலனிற்கெதிரான திட்டங்கள், வங்கி கொள்ளை, பெருநிறுவன கொள்ளை, வரலாற்றை திரித்து எழுதுவது, நீட் எனும் பகிரங்க கல்வி பறிப்பு இன்னபிற எல்லாமும்; நாம் நம்முடைய அதிகாரத்தை இழந்துவிட்ட நிலையில் நடக்கும் கொள்ளைகளே என்க!
சிரியாவை பற்றி கவலைப்படுவது தேவை அது எல்லோரிடத்திலும் இருக்கப்படவேண்டிய குறைந்தபட்ச மனிதநேயம் அதேநேரத்தில் இந்த மின்னணு வாக்குமுறை தொடர்ந்து ஆதரிக்கப்படுமானால் நம்முடைய நாடும் சிரியா சோமாலியா கிரீஸ் போன்று ஆவதற்கு இன்னும் ஒரு சில ஆண்டுகளே தேவையாய் இருக்கிறது என்பதை பசுமரத்தாணிபோன்று பதியுங்கள். இதற்காக நீங்கள் பெரிய தியாகம் எல்லாம் ஒன்றும் செய்யவேண்டாம். நீங்கள் இருக்கிற கட்சிசார்ந்த உங்களின் தலைவர்களிடமே இதை அழுத்தமான கோரிக்கையாக வையுங்கள் முதலில் உணர்ச்சிகளின் விளிம்பில் நிற்பதை தவிர்த்து வெளியில் வாருங்கள் உணர்ச்சிவயப்பட்ட நிலை நம்மை சிந்திக்கவிடாது, காரணம் ஆத்திரம் அறிவிற்கு எதிர்நிலையில் இயங்குவது!
ஒன்று..... ஏதேனும் ஒரு கூத்தாடிக்கு ரசிகன் என்கிறபெயரில் அடிமையாக இருப்பது, அல்லது ஏதேனும் கட்சித்தலைவர்களுக்கு தொண்டன் என்கிறபெயரில் அடிமைகளாக இருப்பது; இந்த கட்சியில் எங்கள் குடும்பம் இரண்டு தலைமுறைகளாக இருக்கிறது என்கிற பெருமைவேறு......! அடிமையாக இருப்பதற்கு என்ன பெருமை வேண்டியுள்ளது சொல்லுங்கள்? தேர்தல் அரசியலை முன்னெடுக்காத பெரியாரிய அம்பேத்காரிய மார்க்சிய சிந்தனைகள் மூலம் உண்மையான பொருள்முதல்வாதத்தை மக்களிடையே நிறுவி, மக்களை ஒன்றிணைப்பதுதான் அடுத்தகட்ட பொதுவுடைமை புள்ளியைநோக்கி நகர ஏதுவாக அமையும் இணையொத்த வேலைத்திட்டம் என்பது ஒருபுறம் இருப்பினும்; அதற்கு இன்றியமையாதது இந்த மக்களும் மண்ணும் மொழியும் பொருளாதாரமும்தான். நமது தற்போதைய குறைந்தபட்ச தேவையே உண்மையான மாநில உரிமைகளுடன் கொண்ட, மாநில மக்களின் சுமரியாதை பாதிக்காத மற்றும் எந்தவகையான மாநில உரிமைகளிலும் தலையீடற்ற கூட்டாட்சி என்கிற தற்போதைய மக்களாட்சி குறைந்தபட்சமேனும் சுதந்திரமாக நடைபெறவேண்டுமெனில்...... எல்லோரும் மின்னணு வாக்குமுறையிலிருந்து காகித வாக்குமுறைக்கு மாறுவதைத்தவிர வேறு பாதை இல்லை; இல்லவே இல்லை! இருப்பதை முதலில் தக்கவைப்பீர் மக்காள்....!
இன்னமும் சொல்வேன்,
பார்த்திபன் ப

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக