புதன், 7 மார்ச், 2018

மம்தா பானர்ஜி :மார்க்சிஸ்ட் தொண்டர்களைத் தாக்கினால் பொறுக்க மாட்டேன்

tamilthehindu : மார்க்சிஸ்ட் கட்சித் தொண்டர்கள் மீது இனியும் பாஜகவினர் தாக்குதல் நடத்தினால் நான் பொறுமையாக இருக்கமாட்டேன் என்று மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் எதிரும் புதிருமாக இருந்தபோதிலும், இந்த ஆதரவை மம்தா பானர்ஜி அளித்துள்ளார்.
திரிபுரா மாநிலத்தில் சமீபத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றது. 25 ஆண்டுகளாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சியை அகற்றிவிட்டு பாஜக முதல் முறையாக ஆட்சி அமைக்க இருக்கிறது. இதற்கிடையே திரிபுராவின் தெற்கு மாவட்டத்தில், பெலோனியா நகரில் வைக்கப்பட்டு இருந்த கம்யூனிஸ்ட் புரட்சியாளர் லெனின் சிலைகளை பாஜகவினர் மண் அள்ளும் எந்திரம் கொண்டு அகற்றினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தொண்டர்கள் மீதும் தாக்குதல் நடத்தினர்.

இந்தத் தாக்குதல்களுக்கும், லெனின் சிலை அகற்றப்பட்டதற்கும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பங்குரா மாவட்டத்தில் இன்று நடந்த பொதுக்கூட்டத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி பேசியதாவது:
திரிபுராவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவாளர்கள் மீது பாஜகவினர் நடத்திய தாக்குதல்களை கடுமையாக கண்டிக்கிறேன். இனிமை இதுபோன்ற தாக்குதல்களை பார்த்துக்கொண்டு பொறுமையாக இருக்கமாட்டேன்.
கார்ல் மார்க்ஸ், கம்யூனிஸ்ட்புரட்சியாளர் லெனின் ஆகியோர் எனது தலைவர்கள் கிடையாது. ஆனால், இருவரும் ரஷ்யாவுக்கு நல்ல காரியங்கள் செய்து இருக்கலாம். இந்த உலகில் பல்வேறு நாடுகளுக்கு, பல்வேறு தலைவர்கள், பல்வேறு இடங்களில் இருந்திருக்கிறார்கள். ]
ஆனால், திரிபுராவில் ஆட்சிக்கு வந்தவுடன் லெனின், மார்க்ஸ் ஆகிய தலைவர்களின் சிலையை உடைப்பதற்கு பாஜகவினருக்கு யார் அதிகாரம் கொடுத்தது?
காந்திஜி, மார்க்ஸ், லெனின், சுவாமி விவேகானந்தர், நேதாஜி ஆகிய எந்த தலைவர்களின் சிலையையும் உடைக்க பாஜகவுக்கு யாரும் அதிகாரம் அளிக்கவில்லை. மார்க்சிஸ்ட் கட்சித் தொண்டர்கள் மட்டுமல்ல, எந்த கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள் மீதும் தாக்குதல் நடத்துவதை நான் பார்த்துக்கொண்டு இருக்கமாட்டேன்.
திரிபுராவில் பாஜகவினர் வன்முறையான சூழலை உருவாக்கிவிட்டார்கள். பாஜவினர் அனைத்தையும் இடித்து வன்முறையில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த வன்முறைக்கு எதிராக மற்ற கட்சிகள் குரல் கொடுக்கிறார்களோ இல்லையோ நான் தொடர்ந்து குரல் கொடுப்பேன்.
எனது கட்சிக்கும், மார்க்சிஸ்ட் கட்சிக்கும் இடையே சித்தாந்த ரீதியாக வேறுபாடுகள் இருக்கின்றன. இது தொடரும். சித்தாந்த ரீதியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைத் தாக்குவேன், பாஜகவையும் தாக்குவேன்.
ஆனால், இதுவரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தொண்டர்களை குறிவைத்து திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் ஒருபோதும் தாக்கியது கிடையாது.
அடுத்த இலக்காக பாஜக மேற்கு வங்கத்தை பிடிக்க முயற்சிக்கும் என்று தெரிவித்துள்ளது. ஆனால், எங்களின் அடுத்த இலக்கு, டெல்லியில் செங்கோட்டையில் அமர்வதுதான். நாங்கள் ஆட்சியைப் பிடிக்க ஆசைப்படவில்லை. பாஜக அல்லாத கட்சிகள் மத்தியில் ஆட்சிக்கு வர வேண்டும் என விரும்புகிறோம்.''
இவ்வாறு மம்தா பானர்ஜி பேசினார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக