புதன், 7 மார்ச், 2018

எதிர்கட்சிகளை ஒன்றிணைக்கும் சோனியா காந்தி .... விருந்துக்கு அழைத்துள்ளார்

எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் சோனியாமின்னம்பலம் : காங்கிரஸ் மற்றும் பாஜக அல்லாத மூன்றாவது அணி குறித்த பேச்சு வலுப்பெற்றுள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் அனைத்தையும் சோனியா காந்தி விருந்துக்கு அழைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் இந்த ஆண்டே நடத்தப்படலாம் என்று கூறப்படும் நிலையில், தேர்தலுக்கான பணிகளையும் அரசியல் கட்சிகள் தொடங்கியுள்ளன. இந்த நிலையில், தெலங்கானா முதல்வரும் தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சித் தலைவருமான சந்திரசேகர் ராவ் மூன்றாவது அணி தொடர்பான கருத்தை அண்மையில் தெரிவித்திருந்தார். ‘தற்போதுள்ள சூழ்நிலையில் நாட்டுக்கு ஓர் அரசியல் மாற்றம் தேவைப்படுகிறது’ என்று தெரிவித்திருந்த அவர், ‘மொரார்ஜி தேசாய், பி.வி.சிங், தேவகவுடா ஆகியோரின் சிறப்பான ஆட்சியை யாராலும் மறக்க முடியாது. அதேபோன்று ஒரு சிறப்பான ஆட்சியை காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா அல்லாத ஓர் அணியால் தரமுடியும். மூன்றாவது அணிக்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. தற்போதைய அரசியலில் இருந்து ஒரு மாற்றத்தை மக்கள் விரும்புகின்றனர். அந்த மாற்றத்தைக் கொண்டு வருவதற்கு நான் தயாராகவே இருக்கிறேன்’ என்று கூறியிருந்தார்.

அவரது கருத்துக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சொரன் ஆகியோர் வரவேற்பு தெரிவித்திருந்தனர். மூன்றாவது அணிக்கு ஆதரவு அளிக்குமாறு திமுக தலைவர் ஸ்டாலினை மம்தா பானர்ஜி சமீபத்தில் தொலைபேசியில் தொடர்புகொண்டு கோரிக்கையும் வைத்திருந்தார்.
இதற்கிடையே, தற்போதைய நிலையில் பாஜக வலுவானதாக உள்ளது. அதை எதிர்கொள்ள அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என்ற எண்ணமும் சில கட்சிகளிடம் உள்ளன. இது தொடர்பாக சிபிஎம் தலைவர்களுள் ஒருவரான அச்சுதானந்தன், ‘நாடு இப்போது மிகவும் ஆபத்தான சவால்களை எதிர்கொண்டு வருகிறது. நாடு சந்திக்கும் சவால்களை உணர்ந்து, சங் பரிவார் அமைப்புகளை எதிர்த்து போரிட மதச் சார்பற்ற சக்திகள், கட்சிகள் அனைவரும் ஒன்றுசேர்ந்து, ஒரே அணியாகச் செயல்படுவது இந்தத் தருணத்தில் அவசியமாகும்’ எனத் தனது விருப்பத்தைத் தெரிவித்திருந்தார்.
மூன்றாவது அணி உருவாவதை காங்கிரஸும் விரும்பவில்லை என்றே கூறப்படுகிறது. இந்த நிலையில், பாஜக தவிர்த்த அனைத்துக்கட்சிகளையும் சோனியா காந்தி விருந்துக்கு அழைத்துள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. மார்ச் 13ஆம் நடைபெறவுள்ள இந்த விருந்துக்கு திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உட்பட பல்வேறு கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான கட்சிகள் விருந்தில் கலந்துகொள்ள சம்மதம் தெரிவித்துள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா ஊடகம் தெரிவித்துள்ளது. பாஜக கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசக் கட்சியும் இந்த விருந்தில் கலந்துகொள்ள உள்ளது எனவும் கூறப்படுகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக