வெள்ளி, 16 மார்ச், 2018

லாலு வழக்கில் இன்று தீர்ப்பு?

லாலு வழக்கில் இன்று தீர்ப்பு?மின்னம்பலம் : கால்நடை தீவன ஊழல் தொடர்பான தும்கா கருவூல மோசடி வழக்கின் தீர்ப்பு, இன்று (மார்ச் 16) ராஞ்சி சிபிஐ நீதிமன்றத்தில் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கால்நடை தீவன ஊழல் தொடர்பாக, பீகார் மாநில முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ் மீது ராஞ்சி சிபிஐ நீதிமன்றத்தில் ஐந்து வழக்குகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது. முதல் மூன்று வழக்குகளில் தீர்ப்பு வெளியாகி, அவற்றில் லாலுவுக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 1995-96ஆம் ஆண்டுகளில் தும்கா கருவூலத்தில் ரூ.3.13 கோடி மோசடி செய்யப்பட்டதாகத் தொடரப்பட்ட நான்காவது வழக்கின் விசாரணை கடந்த 5ஆம் தேதியன்று முடிவுற்றது.
இதனையடுத்து, நேற்று (மார்ச் 15) இந்த வழக்கில் தீர்ப்பு வெளியாகுமென்று ஏற்கெனவே அறிவித்திருந்தார் ராஞ்சி சிபிஐ நீதிமன்ற நீதிபதி சிவபால்சிங். ஆனால், இந்த வழக்கு விசாரணையில் பீகார் மாநில அக்கவுன்டென்ட் ஜெனரல் அலுவலகத்தின் விளக்கம் கேட்கப்படவில்லை என்று குற்றம்சாட்டியது லாலு தரப்பு. இதுதொடர்பாக, இரண்டு நாள்களுக்கு முன்பு சிபிஐ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

நேற்று, இரு தரப்பும் இதுகுறித்து நீதிமன்றத்தில் விவாதம் செய்தது. விவாதம் முற்றுப்பெறாத நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்தது. ஆனால், லாலு தரப்பின் மனு முழுமையாக விசாரிக்கப்படாதவரை, தீர்ப்பு வெளியாவதில் கால தாமதம் ஏற்படலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
ஏற்கெனவே, கால்நடைத் தீவன ஊழல் தொடர்பான மூன்று வழக்குகளில் லாலுவுக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், நேற்றும் அவர் ராஞ்சி சிபிஐ நீதிமன்றத்துக்கு வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஊழல் தொடர்பான ஐந்தாவது வழக்கு ராஞ்சி சிபிஐ நீதிமன்றத்திலும், மற்றொரு வழக்கு பாட்னா உயர் நீதிமன்றத்திலும் விசாரணையில் உள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக