ஞாயிறு, 25 மார்ச், 2018

திமுக மாநாட்டில் இறுதி எச்சரிக்கை! காவிரி மேலாண்மை . மிகப்பெரும் போராட்டம் வெடிக்கும் ... ஸ்டாலின்.!


மின்னம்பலம்: ‘காவிரி மேலாண்மை வாரியத்தைத் தவிர வேறு எதை அமைத்தாலும், விவசாயிகளையும் பொதுமக்களையும் திரட்டி திமுக மிகப் பெரிய போராட்டம் நடத்தும்’ என்று திமுக மாநாட்டில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
திமுக மாநாட்டில் இறுதி எச்சரிக்கை!மாநில சுயாட்சி, சமூக நீதி, மத நல்லிணக்கம் உள்ளிட்டவற்றை வலியுறுத்தி திமுக மண்டல மாநாடு நேற்று ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று வாகை சந்திரசேகர், மனுஷ்யபுத்திரன், திருச்சி சிவா உள்ளிட்டோர் பேசினர்.
இன்றைய நாள் மாநாடு இன்னிசை நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது. அசன் முகமது ஜின்னா பேசி முடித்த பிறகு ‘தமிழை மத்திய ஆட்சி மொழியாக ஆக்குவோம்’ என்ற தலைப்பில் பேசிய புலவர் இந்திரகுமாரி, “தளபதி ஆட்சிக்கு வந்தால் தமிழ் மத்திய மொழி ஆகும். தளபதி ஆட்சிக்கு வந்ததும், கலைஞரின் நூல்களை நாட்டுடைமை ஆக்கும் கோப்பில் முதல் கையொப்பம் இட வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தார். அதனைத் தொடர்ந்து கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் பேசினார்.
காவிரி மேலாண்மை வாரியத்துக்குப் பதில் காவிரி மேற்பார்வை ஆணையம் அமைக்க வேண்டும் என்று நீர்வளத் துறை அமைச்சகம் மத்திய அமைச்சரவைக்கு வரைவு ஒன்றை அனுப்பியுள்ள நிலையில், இதுகுறித்து மண்டல மாநாட்டில் சிறப்புத் தீர்மானம் ஒன்று கொண்டு வரப்பட்டது.

சரியாக 11.20 மணிக்கு இதுகுறித்த தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய திமுக செயல்தலைவர் ஸ்டாலின், “காவிரி பிரச்சினையில் மத்திய, மாநில அரசுகளுக்கு இறுதி எச்சரிக்கை. தமிழ்நாட்டின் உயிர்நாடிப் பிரச்சினையாகக் காவிரி பிரச்சினைக்கு திமுக தொடர்ந்து போராடி வருகிறது. கருணாநிதி முதல்வராக இருந்தபோது மத்தியில் சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் பிரதமராக இருந்தார். அப்போது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புபடி கலைஞரின் வலியுறுத்தலின்பேரில் காவிரி நடுவர் மன்றத்தை மத்திய அரசு அமைத்தது. நடுவர் மன்ற இடைக்கால தீர்ப்பு, இறுதி தீர்ப்பு கிடைக்க திமுக அரசு தொடர்ந்து பாடுபட்டதுடன், அண்டை மாநிலங்களுடன் நல்லுறவை மேம்படுத்தி காவிரி நீர் கிடைக்கவும் ஆவணம் செய்தது. நடுவர் மன்றம் இறுதி தீர்ப்புப்படி காவிரி மேலாண்மை வாரியமும் ஒழுங்காற்றுக் குழு அமைப்பதும் கட்டாயம் என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது” என்று குறிப்பிட்டார்.

மேலும், “இதைச் துச்சமென மதித்து தமிழகத்தை வஞ்சித்திடும் வகையில் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல், மத்திய அரசு காலம் தாழ்த்தி வருகிறது . தமிழ்நாடு அரசு இதில் உரிய அழுத்தத்தை மத்திய அரசுக்கு வழங்க வேண்டும் என அரசியல் கருத்து வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு திமுக ஒத்துழைப்பு வழங்கி வருகிறது. இந்த நிலையில் காவிரி மேலாண்மை வாரியத்துக்குப் பதில் ஒன்பது பேர் கொண்ட காவிரி மேற்பார்வை ஆணையம் அமைப்பது என மத்திய அரசு முடிவு எடுத்திருப்பது தமிழ்நாட்டின் நதிநீர் உரிமைகளை முறித்துப் போடுகிற எதிர்மறை செயல்பாடு ஆகும். ஏற்கெனவே இருந்த காவிரி நதிநீர் ஆணையத்தைப் பல் இல்லா ஆணையம் என விமர்சித்தவர் ஜெயலலிதா. இன்று கர்நாடக தேர்தல் என்கிற குறுகிற அரசியல் நோக்குக்காகக் பல் இல்லாதது மட்டுமல்ல, உயிரற்ற காவிரி மேற்பார்வை ஆணையம் என ஒன்றை அமைத்தால் மாநில அரசு அதனை எதிர்க்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
“காவிரி பிரச்சினையில் தமிழ்நாடு அரசு விட்டுக்கொடுத்து தெண்டனிட்டு கிடந்தால் விவசாயிகளையும் பொதுமக்களையும் திரட்டி திமுக கடுமையான போராட்டங்களை நடத்தும் என இந்த மாநாடு இறுதி எச்சரிக்கை விடுக்கிறது” என்று குறிப்பிட்டார். இதைத் தொடர்ந்து மாநாட்டுக்கு வந்திருந்தவர்கள் அனைவரும் தங்கள் கைகளை உயர்த்தி தீர்மானத்தை நிறைவேற்றினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக