வெள்ளி, 30 மார்ச், 2018

நெடுமாறன் தலைமையில் மறைந்த.நடராஜனின் படத்திறப்பு நினைவேந்தல்

திருமாவளவன் : அண்ணன் நடராஜன் அவர்களும் சசிகலா அவர்களும் இல்லையென்றால் ஜெயலலிதா இல்லை என்பதுதான் வரலாறு
வீரமணி :அரசியலில் மிகப்பெரிய விஞ்ஞானத்தைப் படைத்தவர் அவர். நினைத்தால் அரசுகளை மாற்றியமைக்கும் ஆற்றல் அவருக்கு இருந்தது
நடராஜன் படத்திறப்பு: தலைவர்களின் உரை!மின்னம்பலம்: மறைந்த ம.நடராஜனின் படத்திறப்பு நினைவேந்தல் நிகழ்வு இன்று (மார்ச் 30) தஞ்சை தமிழரசி திருமண மண்டபத்தில் நடந்தது. நடராஜனின் நெடுநாள் தோழர் பழ. நெடுமாறன் நிகழ்வுக்குத் தலைமை தாங்க, கம்யூனிஸ்டு கட்சி மூத்த தலைவர் நல்லக்கண்ணு படத்தைத் திறந்து வைத்தார். நடராஜன் நினைவு மலரை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட திவாகரன் பெற்றுக் கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் திமுக சார்பில் கலந்துகொள்வதாக அறிவிக்கப்பட்டிருந்த எல்.கணேசன் உடல் நலக் குறைவு காரணமாக கலந்துகொள்ளவில்லை. ஆயினும் அவர் அனுப்பியிருந்த உரை நிகழ்வில் வாசிக்கப்பட்டது. முன்னாள் குடியரசுத் தலைவரும் நடராஜனின் நெருங்கிய நண்பருமான பிரணாப் முகர்ஜி தன் சார்பாக தனது மைத்துனரை இந்த நிகழ்வுக்கு அனுப்பி வைத்திருந்தார்.

நிகழ்வில் கலந்துகொண்டவர்களின் உரை விவரம்...
டிடிவி தினகரன்
நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் அனைவருக்கும் கழகப் பொதுச் செயலாளர் சின்னம்மா சார்பாகவும், எங்கள் குடும்பத்தின் சார்பாகவும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். சின்னம்மாவுக்கு 19 வயது நடந்துகொண்டிருக்கும்போது அவருக்கு திருமணம் செய்ய வேண்டும் என்பதற்காக மாப்பிள்ளை பார்க்கும் படலம் நடந்துவந்தது. அப்போது என் தந்தையாரும், மாமா டாக்டர் வினோதகனும் பல வரன்களைப் பார்த்து கடைசியில் சித்தப்பாவை( நடராஜன்) மிகவும் பிடித்துப் போய் அவர் வீட்டுக்குப் போய் அவரது ஜாதகம் கேட்டார்கள். ஆனால் அவருக்கு ஜாதகம் இல்லை என்று சொல்லிவிட்டார்கள். ஆனாலும் அவருக்குத்தான் முடிக்க வேண்டும் என்று முடிவெடுத்தனர். எங்கள் குடும்பத்தில் ஜாதகம் பார்க்காமல் அதற்கு முன்னும் திருமணம் நடந்ததில்லை, பின்னும் நடந்ததில்லை.
பழ.நெடுமாறன்
சாதி, மத வேறுபாடுகளுக்கு அப்பால், எல்லோரிடமும் நடராஜன் நட்பு பாராட்டி வந்தார் என்பதற்கு இந்த மேடையில் வீற்றிருப்பவர்களே சான்று. நண்பன் நடராஜன், எந்தப் பதவிக்கும் ஆசைப்படாத, மற்றவர்கள் பதவிகளில் ஏறி அமர்வதற்கு ஏணியாக, தன்னுடைய கடமையை செய்யும் கர்ம வீரராக வாழ்ந்து மறைந்துள்ளார். ஈழத்தமிழர் பிரச்சினையில் அவர் காட்டிய ஈடுபாடு என்பது உள்ளார்ந்த உணர்வுடன் கூடியது. எதற்கும் ஆசைப்பட்டு, எதையும் விரும்பி அவர் அதில் ஈடுபடவில்லை. தமிழீழத்தில் மறைந்த மாவீரர்கள் அனைவருக்கும் அமைக்கப்பட்ட நினைவு சின்னங்களை தகர்த்தனர் என்ற செய்த வந்தபோது துடித்துபோனோம். அங்கே அழித்தாலும் தமிழ்நாட்டு மண்ணில் மாவீரர்களுக்கு நினைவுச் சின்னம் அமைக்க வேண்டும் என நாங்கள் முடிவு செய்தபோது எல்லா வகையிலும் தோள் கொடுத்தவர் நடராஜன். தூண் மட்டுமே நிறுவ நாங்கள் திட்டமிட்டோம். ஆனால், அதை விரிவாக்கி, முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் அமைப்பதற்குக் காரணமாக இருந்தவர் நடராசன்.
நல்லகண்ணு
கடந்த 10 ஆண்டுகளாக நடராஜனும், நானும் நெருங்கிய நட்பு பழகியவர்கள். மொழிக்காக தன்னை அர்ப்பணித்தார். உலக நாடுகள் தமிழர்களையும், நம் நாடு பற்றியும் சிந்திக்க வைக்க இவர் அறிஞராக வாழ்ந்தார்.முள்ளிவாய்க்கால் முற்றத்திற்கு எதை எங்கு வைப்பது. எப்படி சிலைகள் அமைக்க வேண்டும் என்று அவர் கலந்து பேசி செய்தார். கல்லணைக்கு வரும் மக்கள், பெரியகோவிலுக்கு வரும் மக்கள், முள்ளிவாய்க்கால் முற்றத்திற்கும் வருகிறார்கள். இதுவே அவரது வரலாற்று சின்னமாக அமைந்துள்ளது.
புதிய பார்வை இதழில் அரசியல் கருத்துகளையும், இலக்கிய கருத்துகளையும் வேறுபாடு பார்க்காமல் படைத்தார். அவர் எழுதிய பல எழுத்துக்கள் பல நூலக பதிப்பாகி எத்தனையோ தலைவர்களிடத்தில் உள்ளது. உலக தமிழ் மக்களின் வரலாறு. மொழி வரலாறு போன்று மக்களின் உணர்வு பூர்வமான அவரது நூல் தொகுப்புகள் நான் இங்கு வரும் போதெல்லாம் என்னிடத்திலும் கொடுத்துள்ளார். எனது வயதுக்கும் அவருக்கும் வித்தியாசம் உண்டு. இருந்தாலும் அவரது நூல்களும், முள்ளி வாய்க்கால் முற்றமும் அவர் மறைந்த பிறகு அவருடைய அடையாளமாக உள்ளது.
கி.வீரமணி
நடராஜன் ஒரு பகுத்தறிவு வாதியாக, திராவிடர் கழகத்தில் இருந்து தனது வாழ்க்கையைத் தொடங்கி யவர். அவருக்குக் கொள்கையிலும், குருதியிலும் இணைந்த உறவாகத் திகழ்ந்தவர் சசிகலா. நேரடியான, மிகப்பெரிய இழப்புக்கு ஆளாகியுள்ளவரும், எதையும் தாங்கும் இதயம் உடையவருமான சகோதரி சசிகலா இதையும் தாங்கித்தான் ஆக வேண்டும். மனிதன் தானாகவும் பிறக்கவில்லை தனக்காகவும் பிறக்கவில்லை என்ற பெரியாரின் சொல்லுக்கு இலக்கணமாக வாழ்ந்துகாட்டியவர், படமாக மட்டும் மாறாமல் பாடமாகவும் திகழ்ந்துகொண்டு இருப்பவர் நடராசன். அவர் வாழ்நாள் முழுவதும் போராளியாக இருந்துள்ளார். எத்தனையோ பேருக்கு அவருடைய தோள் பயன்பட்டுள்ளது. எந்தப் பதவிக்கும் ஆசைப்பட்டு அவர் போனதில்லை என்றபோதும், எல்லாப் பதவிகளையும் நிர்ணயிக்கும் இடத்தில் அவர் இருந்தார்.
அரசியலில் மிகப்பெரிய விஞ்ஞானத்தைப் படைத்தவர் அவர். நினைத்தால் அரசுகளை மாற்றியமைக்கும் ஆற்றல் அவருக்கு இருந்தது. இது அத்தனையையும் திராவிடம் என்னும் வட்டத்துக்குள் வைத்தது. தமிழ் இனம் என்ற உரிமைக்குள் அடைத்தது. நடராஜன் மறையவில்லை நம்மோடு உறைந்துவிட்டார். நடராஜனை நம்மிடமிருந்து பறித்துக்கொண்டது இயற்கையின் கோணல்புத்தி என்றுதான் சொல்ல வேண்டும். முள்ளிவாய்க்கால் முற்றம் என்றைக்கும் அவரை நினைவுபடுத்தும். எப்போதும் போராளியாக திகழ்ந்த அவர் வாழ்க்கையின் கடைசி காலத்திலும் நோயோடு போராடிக்கொண்டிருந்தார். திராவிடத்தின் வீரம், ஆற்றல் ஆகிய அனைத்தையும் உள்ளடக்கியவர். நடராசனை ஜாதகம் பார்க்காமல் மாப்பிள்ளை ஆக்கிக்கொண்ட குடும்பம் தங்களது என்று தினகரன் பேசும்போது குறிப்பிட்டார். பகுத்தறிவின் வெற்றி அங்குப் பளிச்சிட்டது. மனிதர்களில் மனிதம் பொங்கிய மாமனிதர் ம.நடராஜன்.

திவாகரன்
அன்பு அத்தான் நடராஜன் படத்திறப்பு நிகழ்வில் கலந்துகொண்டுள்ள அனைவரும் நன்றி. நாங்கள் அவருக்கு அருகிலேயே இருந்ததால் அவருடைய அருமை எங்களுக்குத் தெரியவில்லை. என்னுடைய அப்பாவுக்கு எந்த அளவுக்குப் பயப்படுவேனோ அந்த அளவுக்கு நடராஜனுக்கும் பயப்படுவேன். அவர் ஒரு மறைக்கப்பட்ட சரித்திரம். என்னென்ன காலகட்டங்களில் அவர் என்னென்ன செய்தார் என்பது எனக்கு ஓரளவுக்குத் தெரியும்.
அவர் இறந்த பிறகு முள்ளி வாய்க்கால் முற்றத்தின் உள்ளே அவரது உடலை அடக்கம் செய்யலாம் என்று முடிவு எடுத்தோம். ஆனால் அது ஒரு டிரஸ்டு. அதற்கு பழ.நெடுமாறன் தலைவராக இருக்கிறார். அதனால் அவரிடம் சென்று அனுமதியெல்லாம் கேட்க வேண்டும். எனவே நாங்கள் முள்ளிவாய்க்கால் முற்றம் எதிரே அவரது உடலை அடக்கம் செய்தோம். இன்று அவரது சமாதியில் 50 பேர் மொட்டை போட்டு கொண்டனர். இதை பார்த்த பின்பு தான் தெரிகிறது. அவர் அற்புதமான வாழ்க்கையை வாழ்ந்து மறைந்தார்.
நானும் திராவிட இயக்கத்தைச் சார்ந்தவன்தான். எங்களுடைய சகோதரி சசிகலாவுக்கு துன்பத்திற்கு மேல் துன்பம் வந்துகொண்டுள்ளது. கடந்த 35ஆண்டுகளாக அவர் நிம்மதியாகவே இல்லை. அதனை அவர் எப்போதோ தொலைத்துவிட்டார்" என்று கூறினார். கண்கலங்கியபடியே பேசிக் கொண்டிருந்த திவாகரனுக்கு சசிகலா பற்றிய பேச்சை எடுத்தவுடன் அழுகை வந்துவிட்டது. அதனைக் கட்டுப்படுத்திக் கொண்டு தனது பேச்சை முடித்தார்.
தா.பாண்டியன்
மொழிப்போர் பற்றி எரிகிற நேரத்தில் மொழி குறித்த திமுகவின் நிலைப்பாட்டுக்கும், கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாட்டிற்கும் நிறைய முரண்பாடுகள் இருந்தன. அந்த நேரத்தில் நான் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பேசச் சென்றேன். நான் பேசி முடித்த பிறகு என்னை அடிக்க ஐம்பது பேருடன் தடியுடன் காத்திருந்தவர்தான் அன்பு நண்பன் நடராஜன். இந்தச் சம்பவம் எனக்குத் தெரியவில்லை. 'உன்னை அடிக்கத் தடியோடு காத்திருந்தவன்தான் நான். ஆனால் நீ பேசிய தமிழால் உன்னை அடிக்கவில்லை' என்று நடராஜன் பின்னாட்களில் என்னிடம் சொல்லத் தெரிந்துகொண்டேன்.

ஈழத் தமிழர்கள் பிரச்னைக்காக முதல்வர்களோடு சென்று நான் பிரதமரை சந்தித்து வரும் நேரத்தில் என்ன நடந்தது என்று என்னிடம் அக்கறையோடு விசாரிப்பார். இலங்கைத் தமிழர்களுக்காக இரண்டு மாநாடுகளும் ஊர்வலமும் லண்டனில் நடைபெற்றது. அதில் நானும் தமிழகத்தைச் சேர்ந்த தலைவர்களும் கலந்து கொண்டோம். அங்கேயும் இருந்தார் உலகம் சுற்றும் வாலிபர் நடராஜன். நீங்கள் இங்கே எப்படி வந்தீர்கள் என்றேன். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களில் நானும் ஒருவன் என்று எங்களிடம் கூறினார்.
திருமாவளவன்
அண்ணன் நடராஜன் அவர்களும் சசிகலா அவர்களும் இல்லையென்றால் ஜெயலலிதா இல்லை என்பதுதான் வரலாறு. ஜெயலலிதாவை எம்.ஜி.ஆரின் இறுதி ஊர்வல ராணுவ வண்டியில் இருந்து தள்ளிவிட்டபோது அவரை அரசியலில் இருந்து விழாமல் காத்தவர் நடராஜனும், சசிகலா அம்மையாரும்தான். ஜெயலலிதா அரசியலே வேண்டாம் என்று விலகியபோது அவரை தேற்றி மீண்டும் அரசியலுக்குக் கொண்டு வந்து எம் ஜிஆர் ஆட்சியை அமைத்தவர் நடராஜன் தான்.
நடராஜனும், சசிகலா அம்மையார் அவர்களும் தங்கள் இல்லற வாழ்க்கையை நடத்தியதே இல்லை என்பது பெரும் சோகம். அண்மையில் நடராஜன் அவர்கள் நோய்வாய்ப்பட்டிருந்தபோது தன்னைச் சந்தித்த நலம் விரும்பிகளிடம் என்ன சொன்னார் தெரியுமா? ‘அம்மாவும் இப்போது இல்லை. இனிமேலாவது சசியை போயஸ் கார்டனில் இருந்து கூட்டி வந்து நானும் சசியும் ஒன்றாக ஒரே வீட்டில் வாழ வேண்டும்’ என்று சொன்னார் நடராஜன். ஆனால் அவரது ஆசை நிறைவேறவில்லை. நாட்டு நலனுக்காக தனது சொந்த குடும்ப நலனை தியாகம் செய்தவர்கள் நடராஜனும் சசிகலா அம்மையாரும். சசிகலா அம்மையார் இல்லையென்றால் ஜெயலலிதா இல்லை.
தமிமுன் அன்சாரி
எந்தத் தஞ்சை பொங்கல் விழாவில் நடராஜன் பேசினாரோ, அந்தப் பேச்சால்தான் நடராஜன் குடும்பத்தினருக்கு இந்த நிலை ஏற்பட்டது. தமிழ்நாட்டை பேராபத்து சூழ்ந்திருக்கிறது. டெல்லியின் கொடுங்கரங்களில் தமிழ்நாடு சிக்கியிருக்கிறது. இதற்கு முன்னால் இருந்த டெல்லி ஆட்சிகளோடு தமிழகத்துக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டாலும் அதில் டெல்லியிடம் பொது நேர்மை இருந்தது. ஆனால் இப்போது திராவிட இயக்கத்தின் மீதும், தமிழகத்தின் மீதும் டெல்லியின் வன்மம் வெளிப்படையாகத் தெரிகிறது.
இத்தகைய நிலையில் திராவிடக் குடும்பங்களையும், தமிழ்த் தேசிய குடும்பங்களையும் இணைக்க வேண்டிய பெரும் பொறுப்பு இங்கே வீற்றிருக்கும் பெரியோர்களுக்கு இருக்கிறது. இதுவே நடராஜன் அவர்களுக்கு நாம் செய்யும் அஞ்சலியாகும்.

சீமான்
இந்தித் திணிப்பால் எங்கே தமிழ்மொழி அழிந்துவிடுமோ என்ற அச்சத்தில் களத்தில் பாய்ந்த எண்ணற்ற வீர மறவர்களில் நடராஜனும் ஒருவர். முள்ளிவாய்க்கால் முற்றம் திறப்பு நிகழ்வு மூன்று நாட்கள் நடைபெற்றது. அதில் நானும் என்னுடைய துணைவியாரும் கலந்துகொண்டோம். நிகழ்வின் இறுதி நாளில் கொடையாளர்களும், தலைவர்களும் 2 லட்சம், 3 லட்சம் நிதி வழங்குகிறோம் என்று வழங்கினார்கள். நான் அமைதியாக இருந்தேன். ஏனெனில் என்னிடம் அப்போது பணம் இல்லை. இது நடராஜனுக்குத் தெரிந்துவிட்டது. உடனே என்னை மேடைக்கு அழைத்துச் சென்று எல்லோரும் நிதி அறிவித்துவிட்டார்கள். நீ அறிவிக்கவில்லை என்றால் நன்றாக இருக்காது. நீ ஐந்து லட்சம் ரூபாய் நிதி அளிக்கிறாய். நான் அந்த பணத்தை நெடுமாறன் ஐயாவிடம் கொடுத்துவிடுகிறேன் என்றார். வேண்டாம் என்றேன். அதற்கு நான் சொல்கிறேன் நீ நிதி வழங்குவதாய் அறிவிக்கிறாய் என்றார் கண்டிப்புடன். அந்த சமயத்தில் என் தன்மானத்தைக் காத்த தகப்பன் ஐயா நடராஜன். நிகழ்வு முடிந்த பிறகு என்னைக் கட்டாயம் வீட்டுக்கு மனைவியுடன் உணவருந்த வர வேண்டும் என்று அழைத்துச் சென்று, உணவு பரிமாற அத்தனை பேர் இருந்தும் தன் கையாலேயே உணவு பரிமாறிய தாய் ஐயா நடராஜன்.
கவிஞர் வைரமுத்து
இந்தி எதிர்ப்பு போராட்டம் தீவிரமாக நடைபெற்ற காலகட்டத்தில் இந்தி ஒழிக, தமிழ் வாழ்க என்று கூறிக்கொண்டே ஊர்வலம் சென்ற ஒரு கூட்டத்தில் இந்தி ஒழிக, பக்தவச்சலம் ஒழிக என்று ஒரு சாரர் முழக்கமிடுகின்றனர். உடனே அவர்களைத் தடுத்த நடராஜன், தனிநபர்கள் மீது நமக்கு எந்தப் பகையுமில்லை. நமக்குத் தத்துவங்களோடுதான் தகராறே தவிர தனி மனிதர்களோடு அல்ல என்று போர் குணத்தின் உச்சத்திலும் கூட பண்பாடு காத்தவர் அண்ணன் நடராஜன்" என்று பேசினார்.
தங்க தமிழ்ச்செல்வன்
சிறையில் நடக்கும் கொடுமைகள் பற்றி சின்னம்மாவிடம் பேசிக் கொண்டிருந்தேன். சிறையில் குடிக்க தண்ணீர் கொண்டு வைப்பார்களாம். அதில் சிலர் சோப்பைக் கரைப்பார்களாம். சாப்பாடு கொண்டு வைப்பார்களாம், அதில் பல்லி வால் கிடக்குமாம். இத்தகைய தியாகத் தலைவி சின்னம்மாவின் கணவர் பெரியவர் நடராஜன் அவர்களின் இழப்பு துயரமானது.
தியாகக் குடும்பம் என்பது சின்னம்மா குடும்பம்தான். இந்தக் குடும்பத்தால்தான் அரசியலில் பல பேர் முன்னேற்றம் அடைந்திருக்கிறார்கள். இவர்கள் செய்த தவறே பலரை முன்னேற்றிவிட்டதுதான். இன்று நல்லவர்கள் அனைவரும் தியாகத் தலைவி பக்கம் சின்னம்மா பக்கம் வந்திருக்கிறார்கள். அனைத்துக் கட்சித் தலைவர்கள் வந்திருக்கிறார்கள். தமிழகம் எங்கள் பக்கம்தான் என்பதை விரைவில் நிரூபிப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக