வெள்ளி, 30 மார்ச், 2018

வடநாட்டு லேகியம் சாப்பிட்டு இளைஞர் உயிரழப்பு ..... லேகிய வியாபாரிகளை அடித்து நொறுக்கிய பொதுமக்கள்

சென்னை அயப்பாக்கத்தில் லேகியம் சாப்பிட்டு பிரதீப் என்ற இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில் காவல் துறையினர் வட மாநிலத்தைச் சேர்ந்த ஒருவரைக் கைது செய்துள்ளனர்.
சென்னை அருகே உள்ள திருமுல்லைவாயல் அயப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த பிரதீப் (வயது 28) ரியல் எஸ்டேட் தொழில் செய்துவருகிறார். இவருக்கு இளம்வயதிலேயே உடல் பருமனாகி, சுமார் 100 கிலோ எடை இருந்ததனால், எடையைக் குறைக்கப் பல்வேறு முயற்சிகள் செய்துள்ளார். ஆனால் அவர் எதிர்பார்த்த அளவு எடை குறையவில்லை.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை பிரதீப்பின் குடியிருப்பு பகுதியில் சாலையோரமாக வடமாநிலத்தைச் சேர்ந்தவர் கடை அமைத்துப் பல்வேறு வியாதிகளுக்கு லேகியம் விற்றுக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பிரதீப் அதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார். பிரதீப்பிடம் அந்த லேகிய கடைக்காரர், “உங்களது உடல் எடையைக் குறைக்க என்னிடம் ஸ்பெஷல் லேகியம் இருக்கிறது, அதைச் சாப்பிட்டால் உடல் எடை குறைந்துவிடும்” என்று கூறியிருக்கிறார்.

இதை நம்பிய பிரதீப் முறையான மருத்துவப் பரிசோதனை மற்றும் மருத்துவரின் பரிந்துரையின்றி அவரிடமிருந்து லேகியம் வாங்கி நேற்று முன்தினம் இரவு சாப்பிட்டுள்ளார். இதையடுத்து, அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. கடுமையான வயிற்றுவலியால் அவதிப்பட்ட பிரதீப் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்துவந்த நிலையில், சிகிச்சை பலனின்றி பிரதீப் நேற்று (மார்ச் 29) உயிரிழந்தார்.
லேகியம் சாப்பிட்ட பின்னரே பிரதீப்பின் உடல்நிலை பாதிக்கப்பட்டதாக அவரது உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். லேகியம் விற்ற அந்த நபரைக் காவல் துறையினர் தீவிரமாகத் தேடிவந்தனர்.
இந்நிலையில் இன்று (மார்ச் 30) மீண்டும் லேகியம் விற்க வந்த வடமாநிலத்தவரைப் பிடித்து பொதுமக்கள் காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். காவல் துறையினர் அவரைக் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக