திங்கள், 26 மார்ச், 2018

கனிமொழி கண்டனம்: தமிழகத்தின் அனைத்து உளவுத்துறை அதிகாரிகளும் கர்நாடகத்துக்கு மாற்றம் .. :கர்நாடகா தேர்தல்,,,

Kanimozhi Karunanidhi :ஞாயிறன்று டெலிகிராப் நாளிதழில் வந்துள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது. 500க்கும் மேற்பட்ட மத்திய உளவுத் துறையான இன்டெலிஜென்ஸ் ப்யூரொவின் கள அதிகாரிகள் இந்தியாவின் பல மாநிலங்களுக்கு மாற்றியடிக்கப்பட்டுள்ளனர். இதில் தமிழகத்தை சேர்ந்த அனைத்து அதிகாரிகளும் மாற்றப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக மத்திய உளவுப் பிரிவில் பணியாற்றிய அதிகாரிகள் ஒட்டுமொத்தமாக கர்நாடகத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதே போல கர்நாடகாவில் இருந்த அதிகாரிகள் பல்வேறு மாநிலங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். உளவுத்துறையின் பணியானது நாட்டின் பாதுகாப்புக்கு மிக மிக அவசியமானது. உளவுத்துறையின் பணியால்தான் பல்வேறு ஆபத்துகள் தவிர்க்கப்பட்டுள்ளன. ஆனால், கன்னடம் தெரியாத தமிழ் அதிகாரிகளை கர்நாடகாவுக்கு மாற்றி நியமித்தால் கன்னடம் தெரியாமல் இவர்கள் எப்படி தகவல் சேகரிப்பார்கள் என்பது மிகவும் வியப்பாக உள்ளது. மொழி தெரியாமல் உளவுத்துறையில் ஒரு அதிகாரி எப்படி பணியாற்ற முடியும்.
டெலிகிராப் நாளேட்டின்
செய்தி, கர்நாடக தேர்தலை மனதில் வைத்தே இந்த மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன என்று குறிப்பிடுகறது. தமிழகம் கர்நாடகா தவிர, குஜராத், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், மற்றும் டெல்லியில் பணியாற்றும் உளவுத்துறை அதிகாரிகளும் மாறுதலுக்கு ஆளாகியுள்ளார்கள். குஜராத் மற்றும் உத்தரப் பிரதேச இடைத்தேர்தல்களின் பிஜேபி சந்தித்த பின்னடைவுகள் இந்த மாறுதல்களின் பின்னணியில் இருக்கலாம் என்றும் டெலிகிராப் நாளேடு கூறுகிறது.
அரசியல் காரணங்களுக்காக, நாட்டின் முதுகெலும்பாக உள்ள மத்திய உளவுப் பிரிவையே சீர்குலைக்கும் அளவுக்கு மத்திய அரசு இறங்கியுள்ளது மிகவும் வேதனையையும் கவலையையும் ஏற்படுத்துகிறது.
அரசியல் காரணங்களை கவனத்தில் கொள்ளாமல், நாட்டின் பாதுகாப்பை மனதில் வைத்து, உடனடியாக இந்த மாறுதல் உத்தரவுகளை ரத்து செய்து உத்தரவிட வேண்டுமென்று மத்திய உள்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் அவர்களை கேட்டுக் கொள்கிறேன்</

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக