செவ்வாய், 6 மார்ச், 2018

மம்தா பானர்ஜி ஸ்டாலினுக்கு அழைப்பு .... மத்தியில் பலம்வாய்ந்த மூன்றாவது அணி

மு.க.ஸ்டாலினுக்கு, மம்தா பானர்ஜி அழைப்புதினத்தந்தி :தேசிய அளவில் பா.ஜனதா அல்லாத புதிய கூட்டணி அமைக்க மு.க.ஸ்டாலினுக்கு மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்து உள்ளார். இருவரும் 12 நிமிடம் தொலைபேசியில் இது தொடர்பாக பேசினர்.
புதுடெல்லி, நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இதற்காக பா.ஜனதாவுக்கு எதிராக வலுவான கூட்டணி அமைக்க காங்கிரஸ் கட்சி முயற்சி எடுத்து வருகிறது. மாநில கட்சிகள், கம்யூனிஸ்டு கட்சிகளை ஒருங்கிணைத்து தேர்தலை சந்திக்க காங்கிரஸ் வியூகம் மேற்கொண்டு உள்ளது.
இதனிடையே பா.ஜனதா, காங்கிரஸ் கட்சிகளுக்கு மாற்றாக தேசிய அளவில் 3-வது அணி அமைக்க வேண்டும் என்று தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி தலைவரும், தெலுங்கானா மாநில முதல்-மந்திரியுமான சந்திரசேகரராவ் சில நாட்களுக்கு முன்பு குரல் கொடுத்தார். இதற்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி ஆதரவு தெரிவித்து இருந்தார். தன்னுடைய முடிவுக்கு மேலும் பல கட்சிகள் ஆதரவு தெரிவித்து உள்ளதாக சந்திரசேகரராவ் கூறினார்.

இந்நிலையில் மம்தா பானர்ஜி நேற்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பா.ஜனதா அல்லாத புதிய அணி குறித்து 12 நிமிடம் பேசினார். இது குறித்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. டெரக் ஓ பிரெய்ன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

பா.ஜனதா அல்லாத கட்சிகளை ஒருங்கிணைப்பதில் மம்தா பானர்ஜி தீவிரம் காட்டி வருகிறார். நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடன் தெலுங்கானா ராஷ்டிர சமிதி, தெலுங்கு தேசம், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சி, தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்படுகின்றன. இந்த கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இருக்குமா? என்பதை சொல்ல விரும்பவில்லை.

சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரேயுடன், பல்வேறு விஷயங்கள் மம்தா பானர்ஜி தொடர்ந்து பேசி வருகிறார். இரு கட்சிக்கும் இடையே நல்ல நட்பு உள்ளது. அந்த வகையில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுடன், மம்தா பானர்ஜி இது தொடர்பாக நேற்று பேசினார். இரு மாநிலங்களிலும் கணிசமான எம்.பி.க்கள் எண்ணிக்கை இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

அப்போது பா.ஜனதாவுக்கு எதிரான புதிய கூட்டணி அமைக்க தங்களுடன் கைகோர்க்க வேண்டும் என்று மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்தார். இவ்வாறு அவர் கூறினார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக