திங்கள், 5 மார்ச், 2018

தமிழகத்தின் மீது உச்சநீதி மன்றத்தின் போர் .... காவிரி தீர்ப்பு!

காவிரி நதிநீர் பங்கீட்டு வழக்கில், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு தமிழகத்தின் மீதான டில்லியின் போரை பிரகடனப்படுத்தி இருக்கிறது. காவிரி தொடங்கி ஸ்டெர்லைட் வரை பல்வேறு பிரச்சினைகளிலும் தமிழகத்தை டில்லி புறக்கணித்துவருகிறது.
வினவு :உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமித்வராய், தீபக்மிஸ்ரா, கான்வில்கர்
கை நாடுகளை அழிக்கத் தண்ணீரை மறிப்பது, போர்களில் கடைப்பிடிக்கப்படும் தந்திரோபாயம். அது போன்று தமிழகத்திற்குக் கிடைக்க வேண்டிய நீரைத் தட்டிப்பறித்துவிட்டது, உச்ச நீதிமன்றம்.
காவிரி நதி நீர்ப் பங்கீட்டு வழக்கில், ஓராயிரம் ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியம் கொண்ட  தஞ்சை டெல்டா விவசாயத்தின் அழிவைத் துரிதப்படுத்தும் நோக்கில் தீர்ப்பளித்திருக்கிறது உச்ச நீதிமன்றம். காவிரி டெல்டா பகுதியைப் பெட்ரோலிய மண்டலமாக மாற்றத் துடிக்கும் மைய அரசின் திட்டத்தை எதிர்த்துப் போராடி வரும் தமிழகம், குறிப்பாக டெல்டா பகுதி விவசாயிகள் இந்தத் தீர்ப்பை வேறெப்படிக் கருத முடியும்?
ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு, குறுவைச் சாகுபடிக்கு உடனடியாகத் தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசிற்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது தமிழக அரசு. குறுவைச் சாகுபடிக்கு ஜூன் 12 அன்று மேட்டூரிலிருந்து தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்பது தமிழகத்தில் நிலவிவரும் நடைமுறை மட்டுமல்ல, அறிவியல்பூர்வமான அணுகுமுறையும்கூட.
ஆனால், உச்ச நீதிமன்ற நீதிபதிகளோ, இதற்கு இப்பொழுதென்ன அவசரம் எனக் கேட்டு, அந்த வழக்கை ஒத்தி வைத்தார்கள். டெல்டா விவசாயம் குறித்து உச்ச நீதிமன்றம் கொண்டிருக்கும் அக்கறையை மட்டுமல்ல, அவர்களின் அறிவையும் இந்த வழக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியது. இப்படிப்பட்ட நீதிமன்றத்திடமிருந்து காவிரி நதி நீர்ப் பங்கீட்டு வழக்கில் தமிழகத்திற்கு நியாயம் செய்யக்கூடிய தீர்ப்பு கிடைத்திருக்க ஒருக்காலும் வாய்ப்பு இல்லை.

காவிரி நடுவர் மன்றம் கர்நாடக அரசு தனது அணைகளிலிருந்து ஆண்டொன்றுக்கு 192 டி.எம்.சி. தண்ணீரைத் தமிழகத்திற்குத் தர வேண்டும் என அளித்த தீர்ப்பில், 14.75 டி.எம்.சி. நீரைப் பிடுங்கி கர்நாடகாவிற்குக் கொடுத்துவிட்டு, இது சமநிலையான தீர்ப்பு என நாக்கூசும் பொய்யைக் கூறியிருக்கிறார்கள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள். காவிரி டெல்டா பகுதியில் 20 டி.எம்.சி. அளவிற்கு நிலத்தடி நீர் இருக்கிறதென்றும், அதில் 10 டி.எம்.சி. நீரைச் சாகுபடிக்குப் பயன்படுத்த முடியும் எனக் கூறி, இத்திருட்டை  நியாயப்படுத்தியிருக்கிறார்கள்.
”காவிரி கிடைக்காது; கடல் தண்ணிய வாங்கிக்க..”  என சுப்பிரமணிய சுவாமி  கொழுப்பெடுத்துப் பேசியதற்கும், ”காவிரிக்குப் பதிலாக நிலத்தடி நீரைப் பயன்படுத்துங்கள்” என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அதிகாரத்தோடு உத்தரவிட்டிருப்பதற்கும் அதிக வேறுபாடில்லை. தமிழகத்தை வஞ்சிப்பதில் சு.சாமியைப் போலவே உச்ச நீதிமன்ற நீதிபதிகளும் சிந்திக்கிறார்கள்.
காவிரி டெல்டா மாவட்டமான தஞ்சாவூரில் நிலத்தடி நீர்மட்டம் தரைமட்டத்திலிருந்து 21.5 மீட்டருக்குக் கீழும், கடலூர் மாவட்டத்தில் 25.5 மீட்டருக்கும் கீழும் சென்றுவிட்டது. இம்மட்டம் நாகை மாவட்டத்தில் 6.5 மீட்டருக்குக் கீழும், திருவாரூர் மாவட்டத்தில் 9.2 மீட்டருக்கும் கீழும் உள்ளது. தஞ்சை, கடலூர் மாவட்டங்களைவிட நாகை, திருவாரூர் மாவட்டங்களில் நிலத்தடி நீர் தரைமட்டத்திலிருந்து அதிக ஆழத்தில் இல்லையென்றாலும், இம்மாவட்டங்களில் கடல் நீர் உட்புகுந்து நிலத்தடி நீர் விவசாயத்திற்குப் பயன்படுத்தத் தகுதியற்ற நிலையை எட்டியிருக்கிறது.
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஆழ்குழாய் மூலம் சாகுபடி நடந்துவந்த தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த திருவிடைமருதூர், திருப்பனந்தாள் பகுதிகளில் தற்பொழுது நிலத்தடி நீர் உவராகிவிட்டது. வெண்ணாற்றுப் பாசனப் பகுதியில் அமைந்துள்ள நன்னிலம், திருமருகல், திருவாரூர், திருத்துறைப்பூண்டி வட்டாரங்களிலும்; கல்லணைக்கு அருகேயுள்ள பூதலூர், மாரனேரி, விண்ணமங்கலம், கள்ளப்பெரம்பூர், சக்கரசாமந்தம் வட்டாரங்களிலும் கிடைக்கும் நிலத்தடி நீரைச் சாகுபடிக்குப் பயன்படுத்த முடியாது.
கல்லணை கால்வாய் பாசனப் பகுதிக்கு உட்பட்ட பட்டுக்கோட்டை, பேராவூரணி, சேதுபாவாசமுத்திரம் உள்ளிட்ட வட்டாரங்களில் நிலத்தடி நீர் 120 மீட்டருக்குக் கீழாகச் சென்றுவிட்டது. இப்பகுதிகளில் ஒரு ஆழ்குழாய் கிணறைத் தோண்டுவதற்கு ஏறத்தாழ 8 இலட்சம் வரை செலவு செய்ய வேண்டுமென்பதால், குறு, சிறு விவசாயிகள் ஆழ்குழாய் கிணறு தோண்டுவதை நினைத்துக்கூடப் பார்ப்பதில்லை.
இதுதான் காவிரி டெல்டா மாவட்டங்களில் நிலவிவரும் எதார்த்த நிலை. டெல்டா மாவட்டங்களில் நிலத்தடி நீரை எடுத்துச் சாகுபடிக்குப் பயன்படுத்தக்கூடிய வாய்ப்பு இருக்குமானால், 2016-ஆம் ஆண்டு வறட்சியின்போது அம்மாவட்டங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் ஏன் தற்கொலை செய்துகொண்டிருக்க வேண்டும்?  இந்த உண்மைகளை ஒரேயடியாக ஒதுக்கித்தள்ளிவிட்டு, சாகுபடிக்கு நிலத்தடி நீரை எடுத்துக்கொள்ளுங்கள் என உத்தரவிடும் நீதிபதிகளின் மண்டையில் இருப்பது மூளையா அல்லது களிமண்ணா?

தற்கொலை செய்துகொண்ட விவசாயிகள் (இடமிருந்து) தஞ்சை செல்வராஜ், திருவாரூர் கோவிந்தராஜ்
சாகுபடிக்கு நிலத்தடி நீரைப் பயன்படுத்தக் கூறும் இத்தீர்ப்பு அறமும், அறிவும் அற்றது மட்டுமல்ல, ஒருபக்கச் சார்பான ஓரவஞ்சனை கொண்டதாகும். தமிழகத்திற்கு ஒதுக்கும் நீரைக் குறைக்க வேண்டும் எனக் கோரிய கர்நாடகா அரசுதான் தமிழகத்தின் டெல்டா பகுதியில் ஏராளமான நிலத்தடி நீர் இருப்பதாக வாதாடியது.  நடுவர் மன்றத்தால் ஒதுக்கித் தள்ளப்பட்ட கர்நாடகா அரசின் இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள், கர்நாடகா மாநிலத்தில் கிடைக்கும் நிலத்தடி நீர் இருப்பைக் கணக்கில் எடுத்துக் கொள்ளவேயில்லை.
கர்நாடக அரசு நிலத்தடி நீர் குறித்து 2016-ஆம் ஆண்டில் வெளியிட்ட அறிக்கையொன்றில், அம்மாநிலத்தில் உள்ள கிணறுகளில் நீர்மட்டம் 66 சதவீதம் உயர்ந்திருக்கிறது; 97 சதவீத நிலத்தடி நீர்க் குடிப்பதற்கு உகந்தது எனக் கூறியிருக்கிறது. இதில் ஒரு சதவீதம்கூட எடுத்துப் பயன்படுத்துமாறு உத்தரவிடாத நீதிபதிகள், தமிழகத்திடமிருந்து 14.75 டி.எம்.சி. நீரைத் தட்டிப் பறித்து, இந்த ஓரவஞ்சகமான நடவடிக்கையை பெங்களூரு நகரின் குடிநீர்த் தேவை என்ற பெயரில் நியாயப்படுத்தியிருக்கிறார்கள்.
பெங்களூரு நகரின் குடிநீர்த் தேவைக்கு ஏற்கெனவே தினமும் 140 கோடி லிட்டர் நீர் காவிரியிலிருந்து எடுக்கப்படுகிறது. இப்படி எடுக்கப்படும் நீரில் 52 சதவீத நீர் தேவையற்ற விதத்தில் வீணடிக்கப்படுவதாக பெங்களூரு சமூகப் பொருளாதார ஆய்வுக் கழகம் கூறியிருக்கிறது.
இந்தக் குற்றத்தைச் செய்யும் கயவர்கள் யார்? பெங்களூருவைச் சுற்றி அமைந்துள்ள ஷாப்பிங் மால்கள், நீர்ப் பூங்காக்கள், கோல்ஃப் மைதானங்கள், குதிரைப் பந்தய மைதானங்கள், செயற்கை கடல்கள், ஆடம்பர ரிசார்ட்டுகள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள். இக்கார்ப்பரேட் நிறுவனங்கள் மட்டும் பெங்களூரு குடிநீர்த் தேவையின் பெயரில் எடுக்கப்படும் நீரில் 50 சதவீதத்திற்கும் மேலாக, 72 கோடி லிட்டர் நீரைப் பெறுகிறார்கள்.
இந்த கார்ப்பரேட் கும்பல் அடைந்திருக்கும் வளர்ச்சியைத்தான் பெங்களூரு நகர உலகத்தர அந்தஸ்தாக நீதிபதிகள் காட்டுகிறார்கள். இவர்களின் நீர்த் தேவைக்காகத் தமிழக விவசாயிகளின் நீர்த் தேவையைப் பலியிட்டிருக்கிறார்கள்.
* * *
உச்ச நீதிமன்றத்தின் ஓரவஞ்சனை இதோடு மட்டும் நின்றுவிடவில்லை. காவிரி நீரைப் பகிர்ந்துகொள்வதில் கர்நாடகத்திற்கு வரலாற்றுரீதியாகவே அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது எனத் தீர்ப்பில் எழுதி, கன்னட இனவெறியர்களின் குரலை எதிரொலித்திருக்கிறது. கர்நாடகம் தனது பாசனப் பரப்பை அதிகரிப்பதற்கு விதிக்கப் பட்டிருந்த வரம்பை ரத்து செய்துவிட்டது. இத்தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முடியாது என உத்தரவிட்டு தமிழகத்தின் மீது இரட்டைத் தாக்குதலை நடத்தியிருக்கிறது.

கர்நாடக இனவெறியர்களின் குரலில் உச்சநீதிமன்றம் பேசுகிறது
கர்நாடகத்தின் இழப்பு குறித்து மூக்கைச் சிந்தியிருக்கும் உச்ச நீதிமன்றம், 1974 தொடங்கி தமிழகத்திற்கு கர்நாடகம் இழைத்து வரும் அநீதி குறித்து வாய்திறக்கவில்லை. தமிழகத்தின் ஒப்புதல் இன்றி மூன்று அணைகளைச் சட்டவிரோதமாகக் கட்டி இயக்கிவருகிறது, கர்நாடகம். நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பு, அதன் இறுதித் தீர்ப்பு, உச்ச நீதிமன்ற உத்தரவுகள் இவை எதனையும் நடைமுறைப்படுத்தாமல், தமிழகத்தின் டெல்டா பகுதியை உபரி நீரை வெளியேற்றும் வடிகால் பகுதியாக மாற்றிவிட்டது. கர்நாடகம் இழைத்துவரும் இந்த அநீதிகளுக்கு உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பிலாவது முடிவு வரும் என எதிர்பார்த்திருந்த தமிழக மக்களின் முதுகில் குத்தியிருக்கிறது உச்ச நீதிமன்றம்.
கர்நாடகம் தனது பாசனப் பரப்பை அதிகரித்துக் கொள்வதற்கு விதிக்கப்பட்டிருந்த வரம்பை நீக்கியதன் மூலமும், கர்நாடகத்திற்கு 14.75 டி.எம்.சி. நீர் அதிகரித்துக் கொடுக்கப்பட்டிருப்பதாலும், அம்மாநிலத்தில் மேலும் 1 இலட்சம் ஏக்கர் நிலப்பரப்பு காவிரி பாசனப் பரப்பின் வரும் எனக் கூறப்படுகிறது. அதேபொழுதில் தமிழகத்தின் பங்கு குறைக்கப்பட்டிருப்பதன் காரணமாக ஏறத்தாழ 88,500 ஏக்கர் நிலப்பரப்பு தரிசாகும் அபாயம் எழுந்து நிற்கிறது.
சாகுபடி பரப்பு குறைவதோடு, காவிரியின் கடைமடை பகுதிகளில் கடல் நீர் உட்புகுவது மேலும் அதிகரித்து, சுற்றுப்புறச் சூழலுக்கும் கேடு ஏற்படும் என எச்சரிக்கிறார், நீரியல் நிபுணர் ஜனகராஜ்.
இந்த வஞ்சனைகளை மூடிமறைத்துத் தமிழகத்திற்கு ஏதோ நியாயம் வழங்கிவிட்டது போலக் காட்டுவதற்காகவே, காவிரி நீர்ப் பங்கீடு தொடர்பாக காலனிய ஆட்சிக் காலத்தில் செய்துகொள்ளப்பட்ட இரு ஒப்பந்தங்களும் செல்லத்தக்கவைதான், இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த ஆறு வாரங்களுக்குள் மைய அரசு ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும் எனத் தீர்ப்பில் உதார்விட்டிருக்கிறது, உச்ச நீதிமன்றம்.
சொத்துக்குவிப்பு வழக்கில் முதன்மைக் குற்றவாளி ஜெயா இறந்துபோனதைச் சாக்காகக் கொண்டு அவரை வழக்கிலிருந்தே விலக்கிவைத்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் ஊழல் குறித்து தத்துவஞான உபதேசமொன்றைப் பொளந்து கட்டியிருந்தார், நீதிபதி அமித்வா ராய். அதே நீதிபதி காவிரி வழக்கை விசாரித்த அமர்விலும் இருந்ததால், காவிரி நதி எந்தவொரு மாநிலத்திற்கும் சொந்தமானதல்ல, அது தேசியச் சொத்து என்ற உபதேசம் தமிழகத்திற்கு இலவச இணைப்பாகக் கிடைத்திருக்கிறது. இலவசங்கள் என்பதே வாடிக்கையாளனை ஏமாற்றும் வியாபாரிகளின் தந்திரம்தானே.
* * *
இத்தீர்ப்பை நடைமுறைப்படுத்த ஆறு வாரங்களுக்குள் ஓர் அமைப்பை உருவாக்க வேண்டும் எனத் தீர்ப்பில் சொல்லப்பட்டிருப்பதற்கு, ஆறு வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என பா.ஜ.க.வும், அ.தி.மு.க.வும், ஊடகங்களும் பொழிப்புரை எழுதுகின்றன. இந்தப் பொய்யுரையின் மூலம் வஞ்சனை நிறைந்த இத்தீர்ப்பைத் தமிழக மக்களும் விவசாயிகளும் ஏற்றுக் கொள்ளும் மனோநிலையை உருவாக்க முயலுகின்றன.
கடந்த ஆண்டில் இவ்வழக்கு விசாரணையின்போது காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்குமாறு மோடி அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டபோது, அதனை மறுத்து, ”அதற்கு நீதிமன்றத்திற்கு அதிகாரம் கிடையாது, நாடாளுமன்றத்தில் தனிச்சட்டம் இயற்ற வேண்டும்” என வாதிட்டு, கர்நாடகாவிற்குச் சாதகமாக நடந்து கொண்டது பா.ஜ.க. கூட்டணி அரசு. மைய அரசின் இந்த அடாவடித் தனத்தைக் கேள்விக்குள்ளாக்காமல் உச்ச நீதிமன்றமும் சமரசமாகிப் போனது.
இதனையடுத்து காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பதை நிரந்தரமாகவே முடமாக்கும் நோக்கில், ஒவ்வொரு நதி நீர்ப் பிரச்சினைக்கும் தனித்தனி மேலாண்மை வாரியங்களை அமைப்பதற்குப் பதிலாக, அனைத்திற்கும் பொதுவான பல்மாநில நதி நீர் மேலாண்மை வாரியம் அமைக்கும் சட்டவரைவை தயாரித்து, அதனை நிறைவேற்றிவிடத் திட்டம் போட்டது மோடி அரசு.
இந்நிலையில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி ஒரு ஒப்புக்குச் சப்பாணி அமைப்பை உருவாக்கக்கூட மோடி அரசு விரும்பாது. மேலும், கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், தீர்ப்பில் உள்ள உத்தரவை  முடக்குவதற்குத்தான் பா.ஜ.க. முயலுமேயொழிய, அதனை அமல்படுத்த ஒருபோதும் சம்மதிக்காது.  இன்னொருபுறமோ, கர்நாடக முதல்வர் சித்தராமையா, ”மேலாண்மை வாரியம் அமைப்பதை நாங்கள் எதிர்ப்போம்” என அறிக்கைவிட்டு, உச்ச நீதிமன்ற உத்தரவு வெறும் வெத்துவேட்டு எனக் காட்டிவிட்டார்.
உச்ச நீதிமன்ற உத்தரவின் மீது கர்நாடகத்தை ஆண்ட, ஆளும் முதல்வர்கள் சாணியடிப்பது இது முதன்முறையல்ல. நடுவர் மன்றம் தனது இடைக்கால உத்தரவை அறிவித்த காலந்தொட்டு இதுதான் நடந்துவருகிறது. நீதிமன்ற உத்தரவுகளை கால் தூசுக்கும் கீழாக மதித்து, அவற்றை மலக்காகிதம் போலத் துடைத்த போட்ட கர்நாடக மாநில முதல்வர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகூட உச்ச நீதிமன்றம் எடுத்ததில்லை. எனவே, இப்பொழுதும் தமது உத்தரவின் மீது வீசப்பட்டிருக்கும் சாணியைத் துடைத்துவிட்டு, மேலும் அவகாசம் கொடுப்பார்கள் அல்லது கண்டிப்பது போல நடிப்பார்கள். உச்ச நீதிமன்றம் நடத்திவரும் இந்த நாடகத்தைத் தமிழகம் இன்னும் எத்தனை காலத்துக்கு சகித்துப் போவது?
கெயில் குழாய் பதிப்பு, கூடங்குளம் அணு உலை, ஸ்டெர்லைட் ஆலை, நீட் தேர்வுக்கு எதிராகத் தமிழகம் தொடுத்திருந்த வழக்குகளிலெல்லாம், தமிழத்துக்கு எதிராகத் தீர்ப்பெழுதி, அதனை அதிகாரத்தோடு தமிழகத்தின் மீது திணித்த உச்ச நீதிமன்றம், காவிரி பிரச்சினையில் தனது உத்தரவுகளை மதிக்காத கர்நாடக அரசிடம் மென்மையாக நடந்துகொண்டிருப்பதோடு, இறுதித் தீர்ப்பில் கர்நாடகத்திற்கு அபரிதமான சலுகைகளை வாரி வழங்கியிருக்கிறது. தமிழகத்தின் நலன் தொடர்பான வழக்குகள் என்றாலே, அதனைக் காழ்ப்புணர்ச்சியோடும், ஓரவஞ்சனையோடும்தான் உச்ச நீதிமன்றமும் அணுகி வருகிறதே தவிர, அதனின் தீர்ப்புகளில், உத்தரவுகளில் நேர்மையோ, நியாயமோ, நடுநிலையோ இருந்ததே கிடையாது.
தமிழக விவசாயிகள் வறட்சியால் நட்டமடைந்தால் அதற்குரிய இழப்பீடு வழங்க மாட்டார்கள், தமிழக மீனவர்கள் இலங்கையால் சுடப்படுவதை, தாக்கப்படுவதை, கைது செய்யப்படுவதை வேடிக்கை பார்ப்பார்கள், நீட் தேர்வின் மூலம் தமிழகத்திலுள்ள மருத்துவக் கல்லூரி இடங்களை அபகரித்துக் கொள்வார்கள், ஜி.எஸ்.டி. மூலம் தமிழகத்தின் உரிமையைத் தட்டிப் பறிப்பார்கள், மைய அரசின் நிறுவனங்களிலும், அலுவலகங்களிலும் தமிழகத்துக்குரிய பங்கைத் தர மறுப்பார்கள், இந்தியைத் திணித்துத் தமிழை இரண்டாம்பட்சமாக்கி இழிவு செய்வார்கள், தமிழகத்திலிருந்து மின்சாரம், நிலக்கரி, மீத்தேன் உள்ளிட்ட இயற்கை வளங்களைக் கொள்ளையடித்துச் செல்வார்கள். இவை அனைத்தையும் தமிழகம் சகித்துக்கொண்டு இருந்துவருவதைப் பார்த்துதான், துணிந்து காவிரித் தீர்ப்பில் தமிழகத்துக்கு மாபெரும் அநீதியை இழைத்திருக்கிறார்கள்.
காவிரி நீரில் தமிழகத்தின் பங்கைப் படிப்படியாகக் குறைப்பது, அதனையும்கூட  வழங்காமல் டெல்டாவைப் பாலைவனமாக்குவது, அதன் மூலம் டெல்டாவை பெட்ரோலிய மண்டலமாக மாற்றியமைப்பது என்ற திட்டத்தின் ஒருபகுதியாகவே இத்தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
தேசிய ஒருமைப்பாடு என்ற பெயரில் தமிழகத்தின் மீது திணிக்கப்படும் அநீதிகளை இனியும் பொறுத்துக் கொண்டிருக்கக் கூடாது. தமிழகத்தின் உரிமைகளை ஒவ்வொன்றாகப் பறிகொடுத்துக்கொண்டே, ஒருமைப்பாட்டுக்கு ஜே போட்டுக்கொண்டிருக்க முடியாது என்பதை இந்திய ஆளும் வர்க்கங்களுக்கு, அவர்களுக்குப் புரியும் மொழியில் சொல்ல வேண்டிய தருணத்தில் தமிழகம் நின்று கொண்டிருக்கிறது.
– குப்பன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக