வியாழன், 8 மார்ச், 2018

குறும்பட லக்ஷ்மியின் மகளிர் தின வாழ்த்தும் சிந்தனைகளும்


lakshmi-priya.- Oneindia Tamil: சென்னை: இன்று மகளிர் தினம் கொண்டாடப்படுவதை அடுத்து குறும்பட லட்சுமி சந்தோஷமில்லாத மகளிர் தினம் என்ற ஒரு கருத்துடன் பெண்களுக்கு உண்மையான எதிரி யார் என்பதை வீடியோவாக எடுத்து பதிவு செய்துள்ளார்.
இன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நடிகை லட்சுமி பிரியா ஒரு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார்.
இவர் குறும்படம் லட்சுமி என்பதில் நடித்ததன் மூலம் பிரபலமானவர். அந்த வீடியோவில் பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு எப்போதும் ஆண்களே காரணமா என்றும் இதற்கு என்னதான் தீர்வு என்றும் கேட்டு ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது: ஒரு பெண்ணாக பிறந்தால் ஆதிக்கம் செலுத்தும், கொடுமை செய்யும், குறை காணும் இந்த ஆண்களால் எவ்வளோ பிரச்சினைகள். நம்மை ஒழுங்காக நடத்துமாறு எவ்வளவு வருஷமா கேட்டுக் கொண்டிருக்கிறோம்.



பக்கத்து வீட்டு பெண்

தலைமுறை தலைமுறையா நாம் புகார் மட்டுமே தெரிவித்து வருகிறோம். ஆனால் தீர்வு? கொஞ்சம் இருங்க. ஒரு பெண்ணுக்கு ஆண்களால் மட்டும்தான் பிரச்சினையா? ஒரு அம்மாவாக, பக்கத்துவீட்டு பெண்ணாக, உடன் பணிபுரியும் பெண்ணாக, மாமியாராக, மருமகளாக இன்னொரு பெண்ணை நாம் எப்படி நடத்துகிறோம். அவர்களின் மனதை எவ்வளவு காயப்படுத்துகிறோம்? யோசிக்க வேண்டிய விஷயம் இல்லையா? ஆண்- பெண் சமம், பெண்ணியம் என்று வாய் கிழிய பேசுகிறோம். ஒரு பையன் அழுது கொண்டிருந்தால் ஏன்டா பொம்பள மாதிரி அழுது கொண்டிருக்கிறேனு கேட்போம்.



பெண்கள்தான் செய்ய வேண்டுமா?

அப்படின்னா பெண்கள் பலவீனமானவர்கள் என்பதை நாமே ஒப்புக் கொள்கிற மாதிரிதானே அர்த்தம். இதை நான் ஏன் சொல்கிறேன்னா நாம் மாறாமல் மாற்றத்தை எப்படி எதிர்பார்க்க முடியும். பாலின பாகுபாடு எங்கே ஆரம்பிக்கிறது தெரியுமா? ஒரு அம்மாவுக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். வீட்டுக்கு விருந்தாளிகள் வந்தபோது அந்த அம்மா அவரது மகளிடம் போய் காபி எடுத்துகொண்டு வா, சாப்பாடு பரிமாறு, தட்டுகளை கழுவி வை என்று அது இது என்று அத்தனை வேலைகளை கொடுப்பார்கள்.



பையன் மனதில் ஆழமாக பதிந்துவிடும்

ஆனால் அவங்க பையனை தான் சாப்பிட்ட தட்டை கூட கழுவ சொல்ல மாட்டார்கள். சமூகத்துக்காக பெண்ணை அப்படி வளர்கிறோம் என்றெல்லாம் சொல்லாதீங்க. நீங்கள்தானே அந்த சமூகம். சின்ன வயதிலேயே அந்த பையன் மனதில் பெண்கள்தான் இந்த வேலைகளை செய்ய வேண்டும் என்பது ஆழமாக பதிந்து விடும்.



இன்னொரு பெண்ணா?

அவனுக்கு திருமணம் ஆனவுடன் அவனது பொண்டாட்டியைதான் எல்லா வேலைகளையும் செய்ய வைப்பான். தட்டை கூட கழுவாமல், இதற்கெல்லாம் யார் காரணம்? ஒரு அம்மா நினைத்தால் அவங்க குடும்பத்தில் பாலின சமத்துவத்தை எளிதாக கொண்டு வரமுடியும். செய்றாங்களா ? அவங்க வளர்த்த பையனை கல்யாணம் செய்து கொள்ள போவது இன்னொரு பெண்தான் என்பதை கொஞ்சமாவது யோசிக்கிறார்களா?



கண்டபடி பேச்சு

வீட்டுக்குள் இப்படி ஒரு பிரச்சினைன்னா வீட்டை விட்டு வெளியே வந்தால் நாம் தொப்புள் தெரியும் படியோ உள்ளாடைகள் தெரியும் படியோ துணிகளை போட்டால் மற்ற பெண்கள் நம்மை பார்த்து குறை கூறுவர். பக்கத்து வீட்டு பெண்கள் நம்மை தப்பா பேசுவாங்க என்று நினைத்தே பாதி டிரஸ்களை போடுவதில்லை. ஆபிஸ் போனால் பெண்களுக்கிடையே பனிப்போர், பொறாமை, ஈகோ இவையெல்லாம் இருக்கு. இவ இப்படி டிரஸ் செய்றாளே மேனேஜரை அட்ஜெஸ்ட் செய்யாமலா ப்ரமோஷன் வாங்கியிருப்பாள் என்று பேசுவார்கள்.



பெண்கள் தான் காரணம்

நமக்கு பிடித்த பையனை மற்ற பெண்ணுக்கு பிடித்துவிட்டால் போதும் அவனிடம் அந்த பெண்ணை பற்றி மோசமாக பேசி இமேஜை டேமேஜ் செய்துவிடுவார்கள். இதுபோல் நண்பர்களிடமும் தேவையில்லாத மனப்பான்மைகள் ஏற்படுகிறது. திருமணம் ஆனதும் திருமணமாகாதவர்களுடனான நட்பை துண்டித்து கொள்கிறோம். இதற்கு முழு காரணம் பொறாமைதான். திருமணத்துக்கு அழைக்கவில்லை, காதலித்ததை தன்னிடம் சொல்லவில்லை, குழந்தைக்கு என்ன பெயர் வைப்பது என்பதை தன்னிடம் கேட்காமல் இன்னொரு பெண்ணிடம் கேட்டது என இரு பெண் நண்பர்களுக்கிடையே நடக்கும் பிரச்சினைகளுக்கு அந்த பெண்களேதான் காரணம்.

ஆதரவாக இருப்போம்

நம்முடைய அன்றாட வாழ்க்கையில் பெண்களால் ஏற்படும் பிரச்சினைகள் வராமல் போனால் பாதி வாழ்க்கை நிம்மதியாக இருக்கும். நாம் மற்ற பெண்களை பார்த்து பொறாமை படாவிட்டால், தப்பா பேசாவிட்டால், குறையே கூறவில்லைன்னா, வாழ்க்கை சிறப்பாகதானே இருக்கும். ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள் இனி நாம் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருப்போம். பெண்கள் தின நல்வாழ்த்துகள் என்ற அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக