வியாழன், 1 மார்ச், 2018

பொன்முடி நண்பர் லெனின் பாண்டியன் கொலை! பட்டப்பகலில் விழுப்புரம்

மின்னம்பலம் :விழுப்புரம் நகரத்தில் திமுகவைச் சேர்ந்த லெனின் என்பவர் பட்டப்பகலில் கொலை செய்யப்பட்ட சம்பவம், அந்த மாவட்டத்தையே அதிரவைத்துள்ளது. இவர், முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடி குடும்பத்தினருக்கு நெருக்கமானவர் என்று தெரியவந்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக, விழுப்புரம் மாவட்டத்தில் அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கொலையாவது தொடர்கதையாகி வருகிறது. நேற்று (பிப்ரவரி 28) மதியம் 11.45 மணியளவில், திமுகவைச் சேர்ந்த மாவட்டப் பிரதிநிதி லெனின் பாண்டியன் என்பவர் விழுப்புரம் பை-பாஸ் சாலையில் மோட்டார் பைக்கில் வந்தபோது தாக்குதலுக்கு உள்ளானார். திருவாமத்தூர் பகுதி அருகே வந்தபோது, அவர் கத்தியால் குத்தப்பட்டார்.


ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து லெனின் சப்தமிட்டதால், அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்திருக்கின்றனர். லெனின் தண்ணீர்கேட்டு எடுத்து வருவதற்குள் அவரது உயிர் பிரிந்துவிட்டது. இதையடுத்து, லெனின் கொலை குறித்து போலீஸாருக்குத் தகவல் சொல்லப்பட்டது.
2016ஆம் ஆண்டு செப்டம்பர் 14ஆம் தேதியன்று, நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது கொலை செய்யப்பட்டார் விழுப்புரம் திமுக நகரச் செயலாளரான செல்வராஜ். இவரும் லெனின் பாண்டியனும் நெருக்கமான நண்பர்கள். இது மட்டுமல்லாமல், இருவரும் சேர்ந்து சில கூட்டுத்தொழில்களும் செய்து வந்தனர். மேலும், கொலை செய்யப்பட்ட செல்வராஜும் லெனினும், முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடி குடும்பத்தினருக்கு நெருக்கமானவர்கள்.

செல்வராஜ் பொன்முடிக்கு உதவியாளராக இருந்தவர். பொன்முடியின் மூத்தமகன் கெளதம் சிகாமணிக்கு நெருக்கமான நண்பராக இருந்தவர் லெனின். 2006-2011 காலகட்டத்தில், ரியல் எஸ்டேட் வணிகத்தில் செல்வராஜும் லெனின் பாண்டியனும் கொடிகட்டிப் பறந்துள்ளனர்.

கொலையான லெனின் பாண்டியன் பற்றி, விழுப்புரம் காவல் துறையைச் சேர்ந்த ஓர் அதிகாரி நம்மிடம் பேசினார். “2005ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் தேதியன்று பத்தர் செல்வம் என்பவரைக் கொலை செய்தார் ரவுடி ஆர்.கே.சிவாவின் தம்பி அறிவழகன். அவரது தலையைத் துண்டித்து, காந்தி சிலை முன்பு காலால் பந்தாடினார் என்று சொல்வார்கள். அப்போது, அறிவழகனுக்குப் பண உதவி செய்தது திமுக நகரச் செயலாளர் செல்வராஜ்தான் என்ற தகவல் வெளியானது.
இது தெரிந்து, பத்தர் செல்வத்தின் ஆதரவாளரான இருசப்பன், 2016ஆம் ஆண்டு செப்டம்பர் 14ஆம் தேதியன்று செல்வராஜை கொலை செய்தார். அப்போது, இருசப்பன் கடலூர் மத்திய சிறையில் இருந்தார். அப்போதே, அடுத்த குறி லெனின்தான் என்று பரவலாகப் பேச்சு எழுந்தது. பத்தர் செல்வத்தைக் கொலை செய்வதற்காக, அறிவழகனுக்கு லெனின் மூலமாகத்தான் செல்வராஜ் பணம் கொடுத்தார் என்று சொன்னார்கள்.

பத்தர் செல்வம் கொலையின் தொடர்ச்சியாகத்தான் தற்போது லெனின் கொலையானாரா அல்லது ரியல் எஸ்டேட் கொடுக்கல் வாங்கல் தகராறு ஏதும் காரணமா என்று விசாரித்து வந்தோம். இந்த நிலையில்தான், விழுப்புரம் முத்தோப்பு பகுதியைச் சேர்ந்த தாமோதரன் போலீஸிடம் சரண்டர் ஆனார்.
சீட்டு பிடித்துவரும் தொழில் நடத்திவந்த தன்னிடம் இருந்து, ரியல் எஸ்டேட் தொழிலுக்காக லெனின் அடிக்கடி பணம் வாங்கிவந்தார் என்றும், பல லட்சம் பாக்கியைச் செட்டில் செய்யும் விதமாக தனக்குச் சொந்தமான தானந்தோப்பு பிளாட் ஒன்றை எழுதிக் கொடுக்க லெனின் சம்மதித்ததாகவும், அந்த இடத்தைப் பார்ப்பதற்காக பைக்கில் வரும்போது இருவருக்குள்ளும் தகராறு ஏற்பட்டதாகவும், அப்போது ஏற்பட்ட மோதலில் சாவிக்கொத்தில் இருந்த சிறு கத்தியால் லெனின் வயிற்றில் குத்தியதாகவும் வாக்குமூலம் அளித்தார் தாமோதரன்.
ஆனாலும், தாமோதரன் கொடுத்த ஒப்புதல் வாக்குமூலத்தை நம்பாமல் வேறு கோணத்திலும் விசாரித்து வருகிறோம்” என்று தெரிவித்தார் அந்த அதிகாரி.
நகரச் செயலாளர் செல்வராஜ், மாவட்ட பிரதிநிதி லெனின் பாண்டியன் ஆகியோர் கொலை செய்யப்பட்டது முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கும் அவரது மகன் கெளதம் சிகாமணிக்கும் பெரும் பின்னடைவை ஏற்படுத்துமென்று நினைக்கின்றனர் விழுப்புரம் மாவட்ட திமுகவினர்.
இதுபற்றிப் பேசிய திமுக பிரமுகர் ஒருவர், “விழுப்புரம் பகுதியைப் பொறுத்தவரை, பல அரசியல் பிரமுகர்கள் பொன்முடியால் பாதிக்கப்பட்டு ஒதுங்கியிருக்கிறார்கள். குறிப்பிட்ட சமுதாயத்தை மட்டுமே அரசியலில் அவர் வளர்த்து வருகிறார். ஆனால், மாவட்ட திமுகவினரில் பெரும்பாலானவர்கள் வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இதுவும் விழுப்புரம் மாவட்ட திமுகவில் புகைச்சலை உண்டாக்கியுள்ளது” என்று தெரிவித்தார்.
விழுப்புரம் மாவட்ட திமுக பிரதிநிதி லெனின் கொலையில் ஒருவர் சரணடைந்த நிலையில், இதுதொடர்பான விசாரணை மேலும் தொடர்ந்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. உண்மையான குற்றவாளிகளைப் பிடிப்பதால் மட்டுமே குற்றங்களைத் தடுக்க முடியும் என்றும், விழுப்புரம் மாவட்டக் காவல் துறை உயர் அதிகாரிகள் நேர்மையாக இருந்தாலும் கீழ்மட்டத்தில் உள்ளவர்கள் பணத்துக்கு ஆசைப்பட்டு அப்பட்டமான பொய் வழக்குகளைப் பிணைப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
நேர்மையான விசாரணை மட்டுமே, இதுபோன்ற குற்றச்சாட்டுகளுக்குப் பதிலாக அமையும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக