வியாழன், 1 மார்ச், 2018

ரூ.750 கோடி மோசடி.. சுபிக்ஷா நிறுவனத்தின் தலைவர் சுப்ரமணியன் வங்கிக் கடன்

சுபிக்ஷா சுப்ரமணியன் - ஒரு தொடர்கதை!மின்னம்பலம் :சுபிக்ஷா நிறுவனத்தின் தலைவர் சுப்ரமணியன் வங்கிக் கடன் பெற்று ரூ.750 கோடி மோசடி செய்துள்ளதாக அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். இவருடைய கடந்த காலம் பற்றிக் காண்போம்.
பெரும் தொழிலதிபர்கள் இந்திய வங்கிகளில் கோடிகளில் கடன் பெற்று வங்கியை ஏமாற்றி மோசடி செய்வது தொடர்கதையாகி விட்டது. லலித் மோடி, தீபக் தல்வார், சஞ்சய் பண்டாரி, ஜடின் மேத்தா, விஜய் மல்லையா ஆகிய பெரும் புள்ளிகள் பலர் வங்கிகளில் கோடிக்கணக்கில் மோசடி செய்துவிட்டு நாட்டை விட்டே பறந்துவிட்டனர். அண்மையில் இரண்டாவது பெரிய பொதுத் துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.12,700 கோடிக்கும் மேல் மோசடி செய்துவிட்டு மும்பையைச் சேர்ந்த வைர வியாபாரி நீரவ் மோடி நாட்டைவிட்டுத் தப்பியோடிய செய்தி நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தப் பரபரப்பு அடங்குவதற்குள் சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் சுபிக்ஷா சுப்ரமணியன் ரூ.750 கோடியை வங்கிகளில் கடனாகப் பெற்று மோசடி செய்துள்ளதாக அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த காலங்களில் சுப்ரமணியனின் செயல்பாடுகளும், அவர் மீதான குற்ற வழக்குகள் தொடர்பான நடவடிக்கைகள் குறித்தும் கீழே காண்போம்.
1997: சுபிக்ஷா வர்த்தக சேவைகள் நிறுவனம் தொடக்கம்.
2000: ஐசிஐசிஐ வென்சர் மேக்ஸ் நிறுவனம் சுபிக்ஷாவில் 15 சதவிகிதப் பங்குகளை ரூ.15 கோடிக்கு வாங்கியது. அதே ஆண்டில் வென்சர் மேக்ஸ் பாலா தேஸ்பந்தே நிறுவனம் சுபிக்ஷாவில் இணைந்தது. ரேணுகா ராம்நாத் சுபிக்ஷா வாரியப் பொறுப்பாளராக இரண்டாண்டுகளுக்குப் பின்னர் நியமிக்கப்பட்டார்.
2005: சுபிக்ஷா பொது நிறுவனமாக உருவெடுத்தது.
2008: ஐசிஐசிஐ வென்சர் நிறுவனத்தின் பங்குகளில் 10 சதவிகிதத்தை ரூ.250 கோடிக்கு அசிம் பிரேம்ஜியின் ஜாஸ் நிறுவனம் பெற்றது.
அதே ஆண்டு மே மாதத்தில் ஊழியர்களுக்கு ஊதியம் மற்றும் பி.எஃப் தொகை வழங்குவதில் காலதாமதம் செய்வதாக இந்நிறுவனத்தின் மீது குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு ஊடகங்களில் செய்தி வெளியானது.
அதே ஆண்டு நவம்பரில் நிறுவனத்தின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணப் பங்குதாரர்களுடனான சந்திப்பை சுப்ரமணியன் நடத்தினார்.
அந்த ஆண்டு டிசம்பரில் நிறுவனத்தின் நிதி நெருக்கடியைச் சமாளிக்க அசிம் பிரேம்ஜி இந்நிறுவனத்துக்கு ரூ.50 கோடி கடனுதவி அளித்தார்.
2009: ஜனவரியில் முக்கியப் பங்குதாரரான ஐசிஐசிஐ வென்சர் மற்றும் சில சுயாதீன முதலீட்டாளர்கள் சுபிக்ஷாவிலிருந்து வெளியேறினார்கள். இதையடுத்து 1,600 கிளைகள் வரை முடங்கியது.
கோடக் மகிந்திரா வங்கி இந்நிறுவனத்தின் மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குப் பதிந்தது.
2015: ஊழியர்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு ரூ.225 கோடி கடன் பாக்கி வைத்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு சுப்ரமணியன் கைது செய்யப்பட்டார். முன்னதாகவே இவருடைய முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டிருந்தது.
2016: வங்கி ஆஃப் பரோட்டா வங்கியில் ரூ.77 கோடி கடன் பெற்று திருப்பிச் செலுத்தவில்லை என சுப்ரமணியன் மீது சிபிஐ குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது.
சுப்ரமணியத்துக்குச் சொந்தமான விவசாய நிலங்கள், காலி மனைகள் அமலாக்கத் துறையால் பறிமுதல் செய்யப்பட்டது.
மரக்காணம் மற்றும் நீலாங்கரையில் இருந்த சுப்ரமணியத்துக்குச் சொந்தமான வீடுகள் அமலாக்கத் துறையால் கைப்பற்றப்பட்டன.
2018: தற்போது மூன்றாண்டுகளுக்குப் பிறகு 13 வங்கிகளில் ரூ.750 கோடி அளவுக்குக் கடன் பெற்று மோசடி செய்துள்ளதாக மீண்டும் அமலாக்கத் துறையால் சுப்ரமணியன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக