சனி, 10 மார்ச், 2018

கையெடுத்து கும்பிட்ட அத்வானி; கண்டு கொள்ளாத மோடி: திரிபுரா பதவி ஏற்பு விழாவில்


tamilthehndu :திரிபுராவில் இன்று பாஜக புதிய அரசு பதவி ஏற்பு விழா நடந்தது. அப்போது, மேடையில் மூத்த தலைவர் எல்.கே. அத்வானி கையெடுத்து கும்பிட்டபோது, அதை கண்டுகொள்ளாமல் பிரதமர் மோடி சென்றது மிகப்பெரிய அவமானமாக அமைந்துவிட்டது.
திரிபுராவில் நடந்த சட்டப்பேரவைத்தேர்தலில் பாஜக கூட்டணி கட்சி அமோக வெற்றி பெற்றது. 25ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சி முடிவுக்கு வந்து, இன்று திரிபுராவில் புதிய ஆட்சி பதவி ஏற்றது. முதல்வராக பிப்லாப் தேப் பதவிஏற்றார்.
இந்த விழாவுக்கு பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், திரிபுரா முன்னாள் முதல்வர் மாணிக் சர்க்கார் உள்ளிட்டோர் வந்திருந்தனர். இவர்கள் அனைவரும் விழா மேடையில் இருந்தனர்.
அப்போது, பிரதமர் மோடி மேடைக்கு வந்தபோது, முரளி மனோகர் ஜோஷி, அமித் ஷா, ராஜ்நாத் சிங் என ஒவ்வொரு தலைவராக எழுந்து கைகூப்பி வணக்கம் தெரிவித்தனர். பிரதமர் மோடியும் பதிலுக்கு வணக்கம் செலுத்திச் சென்றார்.

மேடையின் நடுவில் இருந்த மாணிக் சர்க்காரின் கையைப் பிடித்து சிறிது நேரம் பேசிவிட்டு நாற்காலியில் மோடி அமர்ந்தார்.
ஆனால், பிரதமர் மோடி நடந்து வரும்போது, மூத்த தலைவர் அத்வானி வணக்கம் செலுத்திய போது, அவரை கண்டுகொள்ளாத பிரதமர் மோடி, அவருக்கு பதில் வணக்கமும் செலுத்தாமல், அவரை பார்க்கக்கூட மனமில்லாதவாறு கடந்து சென்றார். இதை சற்றும் எதிர்பாராத அத்வானியின் முகம் சுருங்கி, அவமானத்துக்கு உள்ளானார்.
இந்த காட்சி செய்தி நிறுவனங்களில் பதிவு செய்யப்பட்டு சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. ட்விட்டரிலும் பகிரப்பட்டது. ஏராளமானோர், பிரதமர் மோடியின் அசட்டையான செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.
பாஜகவில் மூத்த தலைவர்களுக்கு இதுதான் மரியாதை என்றும், பிரமதர் மோடி அத்வானியை பார்த்து வணக்கம் செலுத்தி இருக்கலாம், திமிராக செல்லக்கூடாது என்றும் தெரிவித்தனர்.
இன்னும் ஒரு சிலர் அத்வானி குஜராத் மாநிலத்தில் பிரசாரம் செய்யவந்தபோது, அவருக்கு மைக் பிடித்தவர்தானே இப்போது பிரதமர் மோடி என்று கடுமையாகக் கூறி அதற்குரிய படத்தையும் பதிவிட்டனர். இந்த வீடியோ சமூக ஊடங்களில் வைரலாகி வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக