சனி, 10 மார்ச், 2018

ரங்கராஜ் பாண்டேயால் நொறுங்கி போன தந்தி டிவியின் வரலாற்று பெருமை


Shankar A : பாண்டேவின் அரசியல்.
ஒரு இடத்தில் வேலைக்கு சென்றால், தன்னை விட உயர்ந்தவர் யாருமே அங்கே இருக்கக் கூடாது என்பதே பாண்டேவின் உயரிய நோக்கம். பணி புரியும் இடத்தில் முன்னேற வேண்டும் என்பது அனைவரும் விரும்பும் விஷயம்தான். ஆனால் அதற்காக அரசியல் செய்து, ஒருவரை காலி செய்து, அந்தப் பதவியை அடைய வேண்டும் என்பது சரியான அணுகுமுறை அல்ல.
தந்தி டிவி தொடங்கிய சமயத்தில், சீப் எக்சிக்யூட்டிவ் ஆபிசராக இருந்தது ராஜீவ் நம்பியார். சிஓ வாக இருந்தது சந்துரு . ராஜீவ் நம்பியாரை அந்தப் பதவியில் இருந்து காலி செய்தால், அந்தப் பதவிக்கு நாம் வந்து விடலாம் என்பதே பாண்டேவின் திட்டம். பாலசுப்ரமணிய ஆதித்தனிடம் நைச்சியமாக பேசி, ராஜீவ் நம்பியாரை காலி செய்தார் பாண்டே.
சிஓஓவாக இருந்த சந்துரு பாண்டேவை விட சிறந்த அரசியல்வாதி. பாண்டே சிஇஓவாக வந்தால், அடுத்து நமக்குத்தான் வேட்டு வைப்பார் என்பதை உணர்ந்து, பாலசுப்ரமணிய ஆதித்தனிடம் பேசி, பாண்டேவுக்கு அந்தப் பதவி கிடைக்காமல் பார்த்துக் கொண்டார்.
இந்த நிலையில், சிஓஓ சந்துரு, அவராகவே முறைகேட்டில் ஈடுபட்டு, வசமாக சிக்கிக் கொண்டு தந்தி டிவியில் இருந்து வெளியேறினார்.
சிஓஓ பதவிக்கு பாலசுப்ரமணி ஆதித்தனின் உறவினரான விஜயன் ஆதித்தன் நியமிக்கப்படுகிறார். விஜயன் வெளிப்படையாக பேசக் கூடியவர். அதனால், பாண்டேவின் நிகழ்ச்சிகளில் சில விமர்சனங்களை கூறியிருக்கிறார்.
பாலசுப்ரமணி ஆதித்தனிடம் பேசி, அவர் உறவினரான விஜயன் ஆதித்தனையே ஓரங்கட்டினார். உறவினர் என்பதால், விஜயன் ஆதித்தன் வேலையை விட்டு அனுப்பாமல், தந்தியின் எப்எம் சேனலை பார்த்துக் கொள்ளுமாறு தந்தி டிவியை விட்டு அனுப்பப்பட்டார்.
சரி இப்போதாவது சிஓஓ பதவியை கைப்பற்றலாம் என்று பாண்டே நினைத்த சமயத்தில், பிரசன்ன ஜோதி என்பவர் சிஓஓவாக நியமிக்கப் படுகிறார். பிரசன்ன ஜோதி பணியில் சேர்வதற்கு முன்பாகவே பாண்டேவின் வரலாறை அறிந்தவர். பாண்டேவை பகைத்தால், தெருவுக்குத்தான் போக வேண்டும் என்பதை நன்றாக அறிந்தவர்.
பணியில் சேர்ந்தது முதலாக வேலையை ஆரம்பித்தார். பாண்டே ஒரு ஷோவை முடித்ததும் நேராக பாண்டே அறைக்கு செல்வார். இது போல ஒரு ஷோவை நான் பார்த்ததே இல்லை. கலக்கிட்டீங்க. உங்களை மாதிரி ஆளு நேஷனல் சேனல்ல இருக்கணும் என்ற ரீதியில் பாராட்டு மழைகளை பொழிய, பாண்டே குளிர்ந்து போவார்.
இந்த சிக்கல்களுக்கெல்லாம் காரணம், பாலசுப்ரமணியன் ஆதித்தன்தான். நான்காவது ஐந்தாவது தலைமுறை வாரிசு முதலாளிகள் போலவே, தன்னை சுற்றி வெறும் கைத்தடிகளை மட்டுமே வைத்துள்ளார். சேனலில் நடப்பது என்ன என்று நேர்மையான விமர்சனங்களையோ, கருத்துக்களையோ அவர் கேட்க விரும்புவது இல்லை.
நல்ல முதலாளியாக இருந்தால், விஜயேந்திரர் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்காமல் இருந்த செய்தி, மற்ற சேனல்களில் ஒளிபரப்புகிறதே. நமது சேனலில் ஏன் இந்த செய்தி ஒளிபரப்பாகவில்லை என்று அன்றே பாண்டேவை கேள்வி கேட்டிருக்க வேண்டும். ஆனால் அவர் கேட்கவில்லை.
நான்கு நாட்களுக்கு அரசு கேபிளில் தந்தி டிவி இருட்டடிப்பு செய்யப்பட்ட பிறகுதான், மிகவும் தாமதமாக பாண்டேவால் எத்தனை சிக்கல் என்பதை உணர்கிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக