செவ்வாய், 27 மார்ச், 2018

பெரியாரா ? ஈவேராவா ?" என்னடா அம்பி வீரபாண்டியன்,எப்படியிருக்கே?

ராகவன் கோபம் நியாயம்! -சுப. வீரபாண்டியன் .
பாஜக செயலாளர்களில் ஒருவரான திரு கே.டி. ராகவன் அவர்கள், தொலைக்காட்சிகளில் பேசும்போது, தந்தை பெரியார் அவர்களை, ஈ.வி. ராமசாமி என்றுதான் குறிப்பிடுவார். கலைஞரைக் கூட, கலைஞர் என்று குறிப்பிடுவார். ஆனால் பெரியாரை மட்டும் அப்படிக் கூறவே மாட்டார். திரு ஹெச்.ராஜாவும் அப்படித்தான். அது குறித்து நம் நண்பர்கள் சிலர் தேவையில்லாமல் கோபப்படுகின்றனர். இது தேவையற்றது. அய்யாவின் பெயர் ராமசாமிதானே! அவர் பெயரைச் சொல்லி அவரை அழைப்பதில் என்ன தவறு இருக்க முடியும்?
அப்படியானால், சங்கராச்சாரியார்களை, ஜெயேந்திரன், விஜேயேந்திரன் என்று அவர் பெயர் சொல்லி அழைப்பதில்லையே என்கின்றனர். தேவையில்லை, அது அவரவர் விருப்பம். நாம் பெரியாரால் பயன் பெற்றோம். அதனால் அவரை அப்படி அழைக்கின்றோம். அவர்கள் சங்கராச்சாரியார்களால் பயன் பெற்றார்கள். எனவே அவர்கள் அப்படி அழைக்கின்றனர்.
அவர்கள் பெரியாரால் பயன் பெறவில்லை என்பது மட்டுமில்லை. தாங்கள் பெற்றிருந்த சமூக அதிகாரத்தையும், பாவம், இழந்தார்கள். அந்தக் கோபம் அவர்களுக்கு இருக்கத்தானே செய்யும். நினைத்துப் பாருங்கள் என் தாத்தா அவர் தாத்தாவைச் 'சாமி' என்றுதான் அழைத்திருப்பார். அவர் தாத்தாவைப் பார்த்ததும் என் தாத்தா, துண்டை எடுத்துக் கக்கத்தில் வைத்திருப்பார்.

ஆனால் இன்றோ, நான் அவரைச் சாமி என்று அழைப்பதில்லை. நண்பர் ராகவன் என்று அழைக்கிறேன். அவருக்குச் சமமாக ஒரே இருக்கையில் அமர்கிறேன். இதுவெல்லாம் அவர்களுக்குக் கோபத்தை ஏற்படுத்தத்தானே செய்யும்! பெரியார் மாதிரி ஒருவர் பிறக்காதிருந்தால், திரு ராகவன் சோபாவில் அமர்ந்திருக்க, இந்நேரம் நானும், அருள்மொழி போன்றவர்களும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தரையில் அமர்ந்துதானே வாய்பொத்திப் பேசியிருப்போம். தொலைகாட்சி நெறியாளரும், அவாளாக இல்லையென்றால், எங்கள் பக்கத்தில் தரையில்தான் அமர வேண்டியிருக்கும்!
அந்தக் காலமாக இருந்தால், ராகவன் என்னைப் பார்த்து, வயது வித்தியாசம் எல்லாம் ஒரு பொருட்டென்று கருதாமல், "என்னடா அம்பி வீரபாண்டியன்,எப்படியிருக்கே?' என்றுதானே கேட்டிருப்பார். இப்போது 'அண்ணன் எப்படியிருக்கீங்க?' என்று அன்போடு (?) கேட்கிறாரே! இத்தனை மாற்றங்களுக்கும் இந்தப் பெரியார்தான் காரணம் என்கிறபோது, அவருக்குக் கோபம் வரத்தானே செய்யும்? அதில் என்ன தவறு?
இவ்வளவு சமூகப் பெருமைகளையும் தாங்கள் இழப்பதற்குக் காரணமாக இருந்த ஒருவரைப் போய் அவர் பெரியார் என்று அழைக்க வேண்டும் நாம் எதிர்பார்ப்பது வன்முறை இல்லையா? ஆனாலும் என்ன ஒரு பெரிய இடைஞ்சல் என்றால். நம் அய்யாவின் பெயரிலேயே 'சாமி' இருக்கிறது. அதனால் வேறு வழியின்றி. நம் அய்யாவை அவர்கள் இப்போது சாமி, சாமி என்று அழைக்க வேண்டியிருக்கிறது. அதனையும் விட்டுத் தொலைக்க ஏதேனும் வழி கண்டு பிடித்து விடுவார்கள்.
ராகவன் கெட்டிக்காரர், புத்திசாலி. எப்படியாவது இந்தப் பெயரை ஒலிக்காமல் இருக்க ஒரு வழி கண்டுபிடித்து விடுவார். இல்லையானால், சாமி என்று அழைப்பதை விட, பெரியார் என்றே சொல்லித் தொலைத்து விடலாம் என்ற முடிவுக்கு வந்தாலும் வந்துவிடுவார்.
அவர் உடல்மொழியில் ஓர் ஆணவம் இருக்கிறது. கேலியும், கிண்டலுமாகப் பேசுகின்றார் என்கின்றனர். எல்லாவற்றையும் இழந்துவிட்ட பிறகு, அவைகளைக் கூட அவர் வைத்துக் கொள்ளக் கூடாதா? இதெல்லாம் என்ன நியாயம்? அவர் மனநிலையை, அவர் கோபத்தை, அவர் பக்கம் உள்ள நியாயத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
தங்கள் தாத்தா காலத்தில் இருந்த நிலைமை, மீண்டும் தங்கள் பேரன்கள் காலத்திலாவது வந்துவிடாதா என்று அவர்கள் ஏங்குகின்றனர். அந்த ஏக்கம் அவர்களுக்கு இருக்கக் கூடாதா என்ன?
சரி, ராமரவி என்று ஒருவர் வேறு ராமசாமி நாயக்கர் என்று தொலைக்காட்சிகளில் பேசுகிறாரே, அது ஏன் என்று கேட்கின்றனர். ஐயோ அவர் ஒரு அப்பாவி, நம் பிள்ளை அவர். நாய்க்கர் என்பது ஆள் பெயரா, சாதி பெயரா என்று கூடத் தெரியாமல், விவாதங்களில் விழிக்கின்றார். அவர் விழிப்பதில் இருந்தே தெரியவில்லையா, அவர் நம் பிள்ளை என்று. நண்பர் ராகவனிடம் இருப்பது போல, ராமரவியிடம் அந்த எள்ளல், ஏகடியம் எல்லாம் இருக்கிறதா பாருங்கள். ஏதோ உணர்ச்சி வயப்பட்டு அல்லது வயப்பட்டதைப் போல ஒரு தோற்றம் இருக்கும், அவ்வளவுதான். உண்மையில் ராகவன் கோபத்தில் இருக்கும் நியாயம், ராமரவி கோபத்தில் இல்லை.அதில் ஒரு நன்றியுணர்ச்சி மட்டும் குறைகிறது. மற்றபடி தப்பு ஏதும் இல்லை.
"கணவனை இழந்ததாலே கண்ணகி கோபம் நியாயம்" என்பார் கவிஞர் தணிகைச் செல்வன். அனைத்தையும் இழந்ததால், ராகவன் கோபம் நியாயம், நியாயம் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.
இருக்கட்டும், சங்கராச்சாரியார் போன்றவர்களால்தானே நாம் சமூக இழிவைப் பெற்றோம். அப்படியிருக்க, நண்பர் ராகவனைப் போல, நீங்களும் அவர்கள் பெயர்களைக் குறிப்பிடும்போது, சங்கரன், விஜேயேந்திரன் என்று குறிப்பிட வேண்டியதுதானே, பாரதியார் என்று ஏன் சொல்ல வேண்டும், அவர்களைப் போலவே கவிஞர் சுப்பிரமணி என்று சொல்ல வேண்டியதுதானே என்று நண்பர்கள் கேட்கின்றனர். அது எப்படி முடியும்? நாம் நாகரிகம் தெரிந்தவர்களாயிற்றே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக