செவ்வாய், 6 மார்ச், 2018

எச்சரிக்கையோடு இருப்போம்!: காலா, ரவிக்குமார் சர்ச்சை குறித்து வன்னி அரசு

thetimestamil :சமீபத்தில் வெளியான காலா படத்தின் டீசர் குறித்து ரவிக்குமார் கூறிய கருத்து சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்களுள் ஒருவரான வன்னி அரசு பதிவொன்றை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
“தோழர்களே!
நாம் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டிய தருணம் இது. ஒடுக்கப்பட்ட தலித்துகள் மற்றும் பழங்குடி மக்களை அமைப்பாய்த் திரட்டுவதும் அரசியல் சக்தியாய் வளர்த்தெடுப்பதும் லேசுபட்ட காரியமல்ல. அந்த முயற்சியில் நமது ‘தமிழ்த் தேசியப் பெருந்தலைவர்’ அண்ணன் தொல்.திருமாவளவன் கால் நூற்றாண்டுக்கும் மேலாக போராடி வருகிறார்.
நமது இந்த முயற்சியை முறியடிக்க,தொடர்ச்சியாக தலித் விரோத இந்துத்துவ சக்திகள் முயற்சி செய்துகொண்டே இருக்கின்றன.
ஒருசில தற்குறி தலித்களை வைத்து ‘லெட்டர் பேடு’ அமைப்புகளை உருவாக்கி தங்களது அடிமைகளாக வைத்துக்கொள்வதை நாம் அறிவோம். மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்தாமல் அதிகார வர்க்கத்துக்கு ஆதரவாக போஸ்டர் போடுவது, நமது அமைப்புக்கு எதிராகப் பேசுவது என பச்சைத்துரோகத்தைச் செய்து வருகிறார்கள். அவர்களிடம் நாம் மிகவும் கவனமாகவும் விழிப்பாகவும் இருக்க வேண்டும்.

இன்று தலித்துகளுடைய இந்தத் திரட்சி நமது போராளித்தலைவர் அண்ணன் தொல்.திருமாவளவன்
அவர்களின் தலைமையில் வெற்றிகரமாக ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் சாதிய- இந்துத்துவ
சக்திகள் கவனமாக உள்ளனர். இதற்கென கோடிக்கணக்கில் செலவு செய்து நம்முடைய அணி திரட்சியை சீர் குலைக்க முயற்சிக்கின்றனர்.
அதில் ஒன்று தான் சினிமாவைப் பயன்படுத்தும் உத்தியாகும். தலித் மக்களின் கதை போல அடையாளப்படுத்தும் முயற்சியாகும். இதனை நாம் எச்சரிக்கையாக அணுகவேண்டும்.
இந்த எச்சரிக்கை உணர்வோடு தான் நம்முடைய கட்சியின் பொதுச்செயலாளர் அண்ணன் ரவிக்குமார் அவர்கள் ‘காலா’ படத்தின் பின்னணி அரசியல் குறித்து எழுதினார்.இது இயக்குநர் ரஞ்சித்துக்கு எதிரானது என்று நமது தோழர்கள் புரிந்துகொண்டதுதான் வேதனைக்குரியதாகும்.
அண்ணன் ரவிக்குமார் அவர்கள் நமது இயக்கத்துக்கு கிடைத்திருக்கிற ஒரு அறிவுச்சொத்து.
எழுச்சித்தமிழரின் தோளோடு தோள் நிற்கும் நம்பிக்கைக்குரிய தோழமை. மிகச்சிறந்த
தலித் ஆளுமை. அப்படிப்பட்டவரைப் புரிந்து கொள்ளாமல் விமர்சிப்பது தவறான அணுகுமுறையாகும்.
தலித் விடுதலை பயணம் இன்னும் இன்னும் போராடி பெற வேண்டியிருக்கிறது. ரத்தம் சிந்த வேண்டியிருக்கிறது.அதை நோக்கி பயணம் செய்வோம். ரசிக மன நிலை தலித் விடுதலைக்கு
எதிரானது. சினிமாவை சினிமாவாக பார்ப்போம், ரசிப்போம்!”

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக