செவ்வாய், 6 மார்ச், 2018

சீமான் : எம்.ஜி.ஆர் நல்லாட்சி கொடுத்ததை ரஜினி பார்த்தாரா?

சீமான்மலையரசு, விகடன் :  எம்.ஜி.ஆர் நல்லாட்சி கொடுத்ததை ரஜினி பார்த்தாரா என சீமான் கூறியுள்ளார்.
சென்னை  வேலப்பன் சாவடியில் நேற்று நடைபெற்ற விழாவில் கலந்துகொண்ட நடிகர் ரஜினிகாந்த், எம்.ஜி.ஆர் சிலையைத் திறந்து வைத்தார். பின்னர் விழாவில் பேசிய அவர், அரசியல் வருகை, ஆன்மீக அரசியல் போன்று இத்தனை நாள் தன்னைப் பற்றி வெளியான கேள்விகளுக்குப் பதிலளிக்கும்விதமாகப் பேசியிருந்தார். அதில், "எம்.ஜி.ஆர் கொடுத்த நல்ல ஆட்சியை என்னால் கொடுக்க முடியும் என்றும், தமிழக அரசியல்வாதிகள் சரியாகச் செயல்படாததால்தான் நான் அரசியலுக்கு வந்துள்ளேன்" என்றும் பேசினார். இவரது பேச்சு தமிழக அரசியலில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
 இதற்கிடையே, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அவரிடம், ரஜினிகாந்த்தின் பேச்சு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், "தலைமைக்கு வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளது ஒட்டுமொத்த தமிழர்களையும் அவமதிக்கும் செயல். ஆங்கிலத்தில் பயின்றால்தான் முன்னேற முடியும் என்பதில்லை. தாய் மொழியில் பயின்று சாதனைபடைத்தவர்கள்தான் அப்துல் கலாம், மயில்சாமி அண்ணாதுரை உள்ளிட்டோர்.
ஊடங்கங்கள்தான் ரஜினியை பெரிதுபடுத்திக் காண்பிக்கின்றன. எம்.ஜி.ஆர் கொடுத்த நல்ல ஆட்சியை நான் கொடுப்பேன் என்கிறார். எம்.ஜி.ஆர் நல்லாட்சி கொடுத்தார் என்பதை  இவர் பார்த்தாரா? மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் மாற்றம் கொண்டு வரவேண்டும். வாக்குப் பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்துதான் பா.ஜ.க வெற்றிபெற்று வருகிறது. ஹெச். ராஜாவின் நோக்கமே தன்னைப் பற்றி பரபரப்பாகப் பேச வேண்டும் என்பதுதான். பெரியார் சிலையை முதலில் அவர் தொட்டுப் பார்க்கட்டும். அதன்பிறகு என்ன நடக்கும் என்பது அவருக்குத் தெரியும்" என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக