செவ்வாய், 20 மார்ச், 2018

இராக்கில் 39 இந்தியர்களும் கொல்லப்பட்டனர்: சுஷ்மா சுவராஜ்

39 இந்தியர்களும் கொல்லப்பட்டனர்: சுஷ்மா சுவராஜ்மின்னம்பலம்: ஈராக்கில் ஐஎஸ் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டிருந்த 39 இந்தியர்களும் கொல்லப்பட்டதாக மாநிலங்களவையில் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இன்று(மார்ச் 20) தெரிவித்துள்ளார்.
சிரியாவின் பல பகுதிகளைக் கைப்பற்றிய ஐ.எஸ். தீவிரவாதிகள் கடந்த 2014ஆம் ஆண்டு ஈராக் மீது போர் தொடுத்தனர். இந்தப் போரின்போது ஈராக்கின் 2ஆவது பெரிய நகரமான மொசூல் நகரத்தில் ஜூன் 10ந் தேதியன்று 91 வெளிநாட்டவரை ஐ.எஸ். தீவிரவாதிகள் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றனர்.
இவர்களில் 40 பேர் இந்தியவர்கள். 51 பேர் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள். கடத்தப்பட்ட இந்தியர்களில் பெரும்பாலானோர் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கடத்தப்பட்ட 40 இந்தியர்களில் ஹர்மீத் என்பவர் 2015ஆம் ஆண்டு ஜூலை மாதம் தீவிரவாதிகளிடம் இருந்து தப்பித்துவந்தார். இவர் 39 இந்தியர்களையும் தீவிரவாதிகள் படுகொலை செய்ததாகத் தெரிவித்தார்.
ஆனால் மத்திய அரசு தரப்பில் இதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும் ஈராக் மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளிலும் கடத்தப்பட்டவர்கள் உயிருடன் இருப்பதாகத் தெரிவித்துவந்தனர்.
இந்நிலையில் 2017ஆம் ஆண்டு அவர்கள் அனைவரும் கொல்லப்பட்டதாக வெளிவந்த செய்தியை உறுதிப்படுத்த வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மறுத்துவிட்டார். உயிருடன் இருப்பவர்களை இறந்துவிட்டதாகக் கூறுவது பாவச்செயல் என்றும், நான் அதைச் செய்யமாட்டேன் என்றும் அமைச்சர் சுஷ்மா அப்போது தெரிவித்திருந்தார்.
அவர்களின் நிலை தற்போது வரை என்னவென்று தெரியாமல் இருந்தது. அதன் பின்னர், கடத்தப்பட்டவர்களின் உறவினர்களின் மரபணு மாதிரிகள் எடுக்கப்பட்டன. தற்போது அந்த மரபணுச் சோதனையின் அடிப்படையில் கடத்தப்பட்ட 39 இந்தியர்களும் கொல்லப்பட்டுவிட்டதாகத் தெரிந்தது.
இதையடுத்து, இன்று மாநிலங்களவையில் அமைச்சர் சுஷ்மா சுவராஜ், ஐ.எஸ். தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட இந்தியர்கள் 39 பேரும் கொல்லப்பட்டதாக உறுதிப்பட அறிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக