புதன், 28 மார்ச், 2018

தலைமன்னார்- தனுஷ்கோடி கடலை ஏடிஜிபி சைலேந்திரபாபு:உட்பட 10 போலீசார் நீந்தி கடந்தனர்

tamilthehindu :எஸ். முஹம்மது ராஃபி - ராமேசுவரம் தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடிக்கு நீந்தி வந்த ஏடிஜிபி சைலேந்திர பாபு மற்றும் நீச்சல் வீரர்கள். இலங்கையில் உள்ள தலைமன்னாரில் இருந்து இந்தியாவில் உள்ள தனுஷ்கோடி வரையிலான பாக் ஜலசந்தி கடலை தமிழக காவல் துறை ஏ.டி.ஜி.பி. சைலேந்திர பாபு 12 மணி நேரம் 24 நிமிடங்களில் நீந்திக் கடந்தார்.
இந்தியாவையும், இலங்கையையும் பிரிக்கும் பகுதி பாக் ஜலசந்தி கடல் ஆகும். ராமேசுவரம் தீவும், அதைத் தொடர்ந்துள்ள 13 மணல் திட்டுகளான ஆதாம் பாலமும் பாக் ஜலசந்தி கடல் பகுதியை மன்னார் வளைகுடாவில் இருந்தும் பிரிக்கிறது. தமிழகத்திலேயே மிகவும் ஆழம் குறைந்த அதே சமயம் நீரோட்டங்கள் நிறைந்தது. பாறைகளும், ஆபத்தான ஜெல்லி மீன்கள், கடல் பாம்புகளையும் உள்ளடக்கிய கடல் பகுதியாகும்.

1954-ம் ஆண்டில் இலங்கை வல்வெட்டித் துறையைச் சேர்ந்த நவரத்தினசாமி என்ற தமிழர், 1971-ம் ஆண்டில் வல்வெட்டித் துறையைச் சேர்ந்த வழக்கறிஞர் குமார் ஆனந்தன், 1994-ம் ஆண்டில் பன்னிரெண்டே வயதான குற்றாலீசுவரன் ஆகியோர் பாக். ஜலசந்தியை நீந்திக் கடந்துள்ளனர்.
சென்னையை சேர்ந்த கல்லூரி மாணவர் ராஜஈஸ்வர பிரபுவும், கடந்த ஞாயிற்றுக்கிழமை விஜயவாடாவைச் சேர்ந்த தலைமை காவலர் துளசி சைதன்யாவும் பாக் ஜலசந்தியை நீந்தி கடந்தனர்.
இதன் தொடர்ச்சியாக பாக். ஜலசந்தி கடலை நீந்திக் கடப்பதற்காக ஏடிஜிபி சைலேந்திரபாபு ராமேசுவரத்தில் இருந்து தலைமன்னாருக்கு ஒரு விசைப்படகு, பைபர் படகில் காவல் துறையின் நீச்சல் பிரிவு வீரர்கள் 10 பேருடன் திங்கட்கிழமை சென்றனர்.
ஏடிஜிபி சைலேந்திர பாபு தலைமையில் 10 நீச்சல் பிரிவு வீரர்களும் தலைமன்னாரில் இருந்து நேற்று அதிகாலை 1.30 மணிக்கு நீந்த தொடங்கினார். இவர்கள் தனுஷ்கோடி அரிச்சல்முனைக்கு பகல் 1.44 மணிக்கு வந்தனர்.
இவர்களை ராமநாதபுரம் காவல் கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் மீனா, கடலோரப் பாதுகாப்புக் குழுமத்தினர், இந்திய கடலோரக் காவல் படையினர் வரவேற்றனர்.
இது குறித்து ஏடிஜிபி கூறியதாவது: காவல் துறை நீச்சல் வீரர்களுடன் 6 ஆண்டுகளாக பயிற்சி செய்கிறேன். இதில் உள்ள வீரர்கள் தேசிய நீச்சல் போட்டிகளில் பல பரிசுகளை வென்றவர்கள். சென்னையில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டபோது தமிழக காவல்துறையின் நீச்சல் வீரர்கள் பொதுமக்கள் பலரை காப்பாற்றி உள்ளனர். இந்த வீரர்கள் 10 பேருடன் இலங்கையின் தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரை 28.7 கி.மீ. தொலைவை 12 மணி நேரம் 24 நிமிடங்களில் நீந்தி கடந்திருக்கிறோம். பாக் ஜலசந்தி கடலை ஒரு குழுவாக நீந்திக் கடப்பது இதுவே முதல்முறை என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக