ஞாயிறு, 11 பிப்ரவரி, 2018

இந்து அறநிலையத்துறையை ஒழிக்கும் பார்ப்பனிய சதி ! கோவில்களுக்கு தீவைக்கும் RSS குண்டர்கள்

வினவு :அரசு மருத்துவமனையில் வசதிகள் இல்லை என்று அதை அப்பல்லோவாக்கு என முழக்கம் வைப்பதற்கும், இந்து அறநிலையத்துறையை கலைத்துவிட கோருவதற்கும் வேறுபாடு இல்லை.
ந்துக்களின் கோவில்களில் மதச்சார்பற்ற அரசுக்கு என்ன வேலை?” என்பது புதிய முழக்கமல்ல. தொண்ணூறுகளின் துவக்கத்தில் இருந்தே சங்கப்பரிவார அமைப்புகள் – குறிப்பாக இந்து முன்னணி, இந்த முழக்கத்தை எழுப்பி வந்துள்ளது. கடந்த 2-ம் தேதி (பிப்ரவரி, 2018) மதுரை மீனாட்சியம்மன் கோவில் வளாகத்தில் “ஏற்பட்ட” தீ விபத்தைத் தொடர்ந்து தற்போது இக்கூச்சல் காதை அடைக்கிறது.
சொல்லப் போனால், கடந்த காலங்களில் கருவறைத் தீண்டாமை கேள்விக்குட்படுத்தப்பட்ட அனைத்து சந்தர்ப்பங்களிலும் – குறிப்பாக, ம.க.இ.க நடத்திய கருவறை நுழைவுப் போராட்டம், சிதம்பரம் கோவிலில் தமிழ் பாடும் உரிமைக்கான போராட்டம், இந்துசமய அறநிலையத் துறை சிதம்பரம் கோவிலுக்கு நிர்வாக அதிகாரியை நியமித்த போது – என எல்லா சந்தர்ப்பங்களிலும் மேற்படி எதிர்க் கோரிக்கையை இந்துத்துவ அமைப்புகள் எழுப்பி வந்துள்ளன. மதுரை மீனாட்சியம்மன் கோயில் தீ விபத்து   உண்மையில் விபத்தா இல்லை சங்கிகள் சதியா? சமீபத்தில் கேரள அரசு அர்ச்சகர் நியமனம் செய்ததை அடுத்து தமிழகத்தைச் சேர்ந்த இந்துத்துவ அமைப்புகள் மீண்டும் தமது பழைய கோரிக்கையை முன்னிறுத்த துவங்கினர் – இப்போது மதுரை மீனாட்சியம்மன் கோவில் தீ விபத்தை அடுத்து ஒரு புதிய உத்வேகத்தை அடைந்துள்ளனர்.

இதனடிப்படையில் சில வாதங்களை இந்துத்துவ கும்பல் முன்வைக்கின்றன. முதலாவதாக, இசுலாமியர்கள் கிறிஸ்தவர்கள் சீக்கியர்கள் உள்ளிட்ட பிற மதங்களைச் சேர்ந்தவர்களின் வழிபாட்டிடங்கள் அவர்களாலேயே நிர்வகிக்கப்படும் நிலையில் இந்துக் கோவில்களின் நிர்வாகத்தில் அரசு தலையிடுவது இந்துக்களுக்கு இழைக்கப்படும் அநீதி என்பது ஆர்.எஸ்.எஸ் மற்றும் பார்ப்பனர்கள் முன்வைக்கும் முக்கியமான வாதம்.
இசுலாமிய வழிபாட்டுத்தலங்களின் சொத்துக்களை நிர்வகிக்கும் “மத்திய வக்பு வாரியம்” என்பது இந்திய வக்பு சட்டம் 1954-ன் கீழ் அமைக்கப்பட்டது என்பதும், அதன் தலைவராக மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் இருக்கிறார் என்பதும், மத்திய வக்பு வாரியத்தின் கீழ் மாநில வக்பு போர்டுகள் இயங்குகின்றன என்பதும் யாரும் மறுக்க முடியாத உண்மைகள்.
தற்போது மத்திய வக்பு போர்டின் தலைவராக இருப்பவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த முக்தார் அப்பாஸ் நக்வி. கிறிஸ்தவ தேவாலயங்கள் சொந்த முறையில் இயங்குகின்றன என்பது எந்தளவுக்கு உண்மையோ அதே அளவுக்கு ஒவ்வொரு தேவாலயங்களும் அதன் உறுப்பினர்களால் ஜனநாயகரீதியில் தெரிவு செய்யப்பட்ட கமிட்டியினரால் நிர்வகிக்கப்படுகின்றன என்பதும் உண்மை. வரலாற்று ரீதியில் இந்து மற்றும் இசுலாமிய வழிபாட்டிடங்கள் அரசு (மன்னர்கள்) பணத்தில் அமைக்கப்பட்டதைப் போல் அன்றி கிறிஸ்தவ தேவாலயங்கள் வெளிநாட்டு மிஷனரிகளின் நிதியால் அமைக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
எனினும் அனைத்து மத நிறுவனங்களும் மக்கள் சொத்துக்களை அடிப்படையாக வைத்து செயல்படுவதால் அவை முழுக்க அரசு கட்டுப்பாட்டில் கொண்டு வரவேண்டும் என்ற கோரிக்கையை நாங்கள் வரவேற்கிறோம். பல ஆண்டுகளுக்கு முன்னரும் கூட ம.க.இ.க பிரச்சாரங்களில் இந்த கருத்து முன்வைக்கப்பட்டிருக்கிறது. இதில் இந்து முஸ்லீம் கிறித்தவம் என்ற வேறுபாடு இல்லை. எனினும் இந்தியாவில் ‘இந்துக்களும்’ இந்து கோவில்களின் சொத்துக்களும் பெரும்பான்மையாக இருப்பதால் சிறுபான்மை மத சொத்துக்களின் முறைகேடுகள் – சர்ச்சைகள் பெரிய அளவிற்கு எழவில்லை.

கோவில் ‘மீட்பு’ப் போராட்டத்தைத் துவங்கியிருப்பதாக கூப்பாடு போடும் ஹெச்.ராஜா!
இந்துக் கோயில்கள் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சி ஏற்படுவதற்கு முன்பு அரசர்கள், குறுநில மன்னர்கள் மற்றும் பாளையக்காரர்களின் பராமரிப்பிலும் கட்டுப்பாட்டிலுமே இருந்து வந்தன. மக்களின் வரிப்பணத்தையும் உழைப்பையும் கொண்டு தான் கோவில்கள் உருவாக்கப்பட்டன. கம்பெனி ஆட்சியின் கீழ் Regulation XIX of Bengal Code, 1810 மற்றும் Regulation VII of Madras Code, 1817 ஆகிய இரண்டு சட்டங்கள் ஏற்படுத்தப்பட்டு அதன்படி இந்துக் கோவில்கள் மற்றும் இசுலாமிய மசூதிகள் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டன.
அதன் பின் 1839-42 காலகட்டத்தில் கிறிஸ்தவர்கள் இந்து வழிபாட்டிடங்களை பராமரிப்பதற்கு எதிராக ஐரோப்பாவில் உள்ள கிறிஸ்தவ மத தலைவர்கள் (போப் உள்ளிட்டு) ஆட்சேபணை தெரிவித்து இங்கிலாந்து மன்னருக்கு பல புகார் மனுக்களை அனுப்புகின்றனர். இந்த நடைமுறையில் ஈடுபட வேண்டாமென இந்தியாவில் இருந்த தமது அதிகாரிகளுக்கு பிரிட்டிஷ் நீதித்துறை 10.08.1840-ல் ஒரு கடிதம் எழுதுகின்றது. இதனடிப்படையில் கோவில்கள் மற்றும் மசூதிகளின் மேல் அரசுக்கு இருந்த கட்டுப்பாட்டை இந்தியாவிலிருந்த வெள்ளை அதிகாரிகள் தளர்த்துகின்றனர். (ஆதாரம் – ஆய்வு நூல்; State and religious endowments in Madras / Chandra Mudaliar.(University of Madras, 1976))
1845-ல் இருந்து 1872 வரை உள்ளூர் பிரமுகர்களின் கட்டுப்பாட்டில் இருந்த கோவில் நிர்வாகத்தில் ஏகப்பட்ட முறைகேடுகளும் குளறுபடிகளும் நடந்துள்ளன. இவையனைத்தும் புகார்களாகவும், வழக்குகளாகவும் பதியப்பட்டுள்ளன. இந்த புகார்கள் அனைத்தும் சாட்சாத் ‘உயர்சாதி’ இந்துக்களால் பதியப்பட்டவை என்பது முக்கியம். இதில் கிறித்தவ முஸ்லீம் ‘சதி’ ஏதுமில்லை. அதைத் தொடர்ந்து 1872-ல் கோவில்களின் மீதான கட்டுப்பாட்டை மீண்டும் நிலைநாட்ட ஆங்கிலேய அரசு முயன்றது. எனினும், உள்ளூர் அதிகாரிகளின் ஒத்துழைப்பின்றி அந்த முயற்சி தோல்வியுறுகின்றது.
இதற்கிடையே கோவில்களில் பக்திமான்கள் அடிக்கும் கொள்ளைகள் வரைமுறையின்றிச் செல்லத் துவங்கின. கோவில் சொத்துக்களை ஆக்கிரமித்துக் கொள்வது, நகைகளைக் களவாடுவது, சிலைகளைக் கடத்தி விற்பது, வசூலாகும் நன்கொடையைத் திருடிக் கொள்வது, கோவிலைப் பராமரிப்பின்றி சீரழிய விடுவது என “பக்திமான்களின்” லீலைகள் அதிகரித்துச் சென்ற நிலையில் சர். டி.சதாசிவ அய்யர், பனகல் ராஜா ஆகியவர்கள் முயன்று 1927-ஆம் வருடத்தில் இந்துமத தர்ம பரிபாலன சட்டத்தை நிறைவேற்றினார்கள்.
அச்சட்டப்படி தர்மகர்த்தாக்கள் அடங்கிய வாரியம் ஒன்று ஏற்படுத்தப்பட்டு, கோயில் சொத்துகள் நிர்வகிக்கப்பட்டன. இச்சட்டம் நிறைவேறுவதை சத்தியமூர்த்தி அய்யர் முதல் எம்.கே.டி. ஆச்சாரி வரை அனைத்துப் பார்ப்பனிய சக்திகளும் கடுமையாக எதிர்த்தனர். இன்றைக்கு சங்கபரிவாரங்கள் முன்வைக்கும் அதே கோரிக்கையை இவர்கள் முன்வைத்தனர். ஆனால் அவர்களிடத்தில் ஊழல் முறைகேடுகள் ஏன் நடந்தன, யார் செய்தார்கள், அவர்களுக்கு என்ன தண்டனை என்ற விவரம் இல்லை. சொல்லப்போனால் முறைகேடுகள் செய்த ஆதிக்க உயர் சாதியினரின் அதிகாரம் பறிக்கப்படுவதே இவர்களின் கவலையாக இருந்தது.
1951-இல் அன்றைய தமிழக முதல்வரான ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், இந்து சமய அறநிலையத் துறை எனும் அரசுத்துறையை உருவாக்கும் சட்டத்தைக் கொண்டு வந்தார். அதற்காக அவரை சுதேசமித்திரன் போன்ற பார்ப்பனப் பத்திரிகைகள், ’வெளியே ஒரு கருப்புச்சட்டை ராமசாமி (பெரியார்), உள்ளே ஒரு கதர்ச்சட்டை ராமசாமி’ என திட்டித் தீர்த்தன.

தில்லையில் வீழ்ந்தது பார்ப்பனியம், வென்றது மகஇக
“1951க்கு முன்பு தர்மகர்த்தாக்கள் வேண்டுமென்றே நிலத் தீர்வையையோ அல்லது போர்டாருக்குச் செலுத்தவேண்டிய தொகையையோ செலுத்தாது வைத்து, கோவில் நிலங்களை ஏலத்துக்குக் கொண்டுவந்து தாங்களே தட்டிக்கொண்டு போயிருக்கிறார்கள்.” என்றும் “தஞ்சாவூர் ஜில்லாவில் வேதாரண்ய ஈஸ்வரர் தேவஸ்தானத்துக்கு 16,000 ஏக்கர் நிலம் கொண்ட 45 கிராமங்கள் சொந்தமாக இருக்கின்றன. இருந்தும்கூட, இதன் வருஷ வருமானம் இன்று ரூ.75,000 என்றுதான் காட்டப்படுகிறது. வட ஆற்காடு ஜில்லாவில் ஒரு கோவிலின் தர்ம சொத்துக்கள் பூராவுமே ஒரு ஜாகீரின் சொந்த சொத்தாக மாறிவிட்டது. தஞ்சாவூர் ஸ்வர்க்கபுரம் மடத்தில் சுமார் ரூ.15,000 ரொக்கம் கையாடல் செய்யப்பட்டு, 26 ஏக்கர் நிலம் பராதீனம் ஆகியிருக்கிறது. திருச்செங்கோட்டிலும் வேதாரண்யத்திலும் நகைகள் காணாமல் போயுள்ளன” என்றும் குறிப்பிட்டு, இந்து அறநிலையத் துறையின் தேவையை அன்று ஓமந்தூரார் வலியுறுத்தியுள்ளார்.
இந்து சமய அறநிலையத்துறை ஏற்படுத்தப்பட்ட பின்னரும் கூட கோயிலின் கருவறையை ஆக்கிரமித்துக் கொண்ட பார்ப்பனர்கள் அடித்த கொள்ளைகளின் பட்டியல் மிக நீண்டது. புதிய ஜனநாயகத்தின் இந்தக் கட்டுரை பார்ப்பனர்களும் பக்திமான்களும் கோவில் சொத்துக்களை சூறையாடியது குறித்து விளக்கமாகப் பேசுகிறது
மற்றுமொரு எடுப்பான உதாரணம் சிதம்பரம் கோவில். 2009-ம் ஆண்டு வரை சிதம்பரம் கோவிலில் உண்டியல் வசூலை தீட்சிதப் பார்ப்பனர்கள் தடுத்து வைத்திருந்தனர். அதுவரை ஆண்டு வருமானமாக தீட்சிதர்கள் சில ஆயிரங்களைக் காட்டி அதுவும் செலவாகி விட்டதாக கள்ளக் கணக்கெழுதி வந்தனர். 2009-ம் ஆண்டில் சிதம்பரம் கோவிலில் ஐந்து உண்டியல்கள் வைக்கப்பட்டு 2014-ம் ஆண்டு அவை எடுக்கப்பட்ட போது வசூலான தொகை மொத்தம் ஒருகோடியே 38 லட்சம் ரூபாய்கள் மற்றும் தங்கம் வெள்ளிப் பொருட்கள்.
எப்படி இருந்தாலும் இந்துக் கோவில்கள் இந்துக்களிடம் தானே இருக்க வேண்டும்? என்கிற பாமரத்தனமாக சிந்திப்பவர்களும் இருக்கத் தான் செய்கிறார்கள். ஆனால் வரலாற்று உண்மை என்ன?
பண்டைய காலங்களில் நிலவிய ஆசிய பாணி சொத்துடைமை வடிவத்தில் இந்திய கிராமங்கள் தன்னிறைவு பெற்று விளங்கின. ஒவ்வொரு கிராமமும் தனது விவசாய உற்பத்தியின் ஒரு பகுதியை தமது உழைப்பிற்கான ஊதியமாக எடுத்துக் கொண்டு ஒரு பகுதியை மன்னருக்கு கப்பமாக அனுப்பி வைத்தது. மற்றுமொரு பகுதியை உள்ளூர் கோவிலுக்குச் செலுத்தினர். அன்றைய கோவில்கள் வெறும் பக்திக்கான இடமாக மட்டும் இல்லாமல் நிர்வாக அலகுகளாகவும் இருந்தன.
ஒவ்வொரு கோவிலிலும் ஏராளமான சொத்துக்களும், தங்கம் வெள்ளி வைரம் வைடூரியம் என செல்வங்களும் குவிந்து கிடந்தன. எனவே தான் மன்னர்கள் (இந்து மன்னர்களே கூட) அண்டை நாட்டின் மீது படையெடுக்கும் போது கோவில்களைத் தாக்கிக் கொள்ளையடித்தனர். ”விராட இந்துக்களான” மராத்தியர்கள் ”மிலேச்ச முசுலீம்” திப்புவின் ராஜ்ஜியத்தின் மீது போர் தொடுத்து அவரது ராஜ்ஜியத்தில் இருந்த சிருங்கேரி மடத்திற்கு சொந்தமான கோவில்களைக் கொள்ளையடித்ததற்கும் அந்த இந்துக் கோயில்களைப் புனருத்தாரணம் செய்ய “மிலேச்ச முசுலீம்” திப்பு நிதி ஒதுக்கியதற்கும் இது தான் காரணம்.
மன்னராட்சி நிலவிய காலம் தொட்டு கோவில்கள் அரசுக்குச் சொந்தமாக இருந்ததோடு அவை கிராம பொருளாதாரத்தின் சொற்ப உபரியை உறிஞ்சிக் கொழுத்தவைகளாகவும் இருந்தன. இந்து மன்னர்கள் மட்டுமின்றி இசுலாமிய மன்னர்களும் கூட வேர்மட்ட அளவில் நிலவிய கிராமப் பொருளாதாரத்தையும் அதன் குவிமையமாக இருந்த கோவில்களையும் அப்படியே போற்றிப் பராமரித்து வந்தனர். சமீபத்திய வரலாற்றுக் காலம் வரை கோவில்களுக்கு கிராம நிர்வாகத்தில் இருந்த பங்கின் எச்சசொச்சமாக இன்றும் கிராமப் பஞ்சாயத்துகள் கோவில்களில் கூடும் வழக்கம் உள்ளது. இன்றைக்கும் தமிழக கிராமப் புறங்களில் உள்ள அம்மன் கோவில்களுக்கு வரி பிரிக்கும் போது இந்துக்கள் மட்டுமின்றி கிராமத்தில் உள்ள இசுலாமியர்களும், கிறிஸ்தவர்களும் வரி செலுத்தும் வழக்கம் உள்ளது.
மதுரை மீனாட்சியம்மன் கோவில் தீவிபத்தை அடுத்து இந்துத்துவ கும்பல் முன்னெடுத்திருக்கும் பிரச்சாரத்திற்குப் பின் இருப்பது ஆன்மீகமோ பக்தியோ அல்ல. கோவில்களைக் காப்பாற்ற வேண்டும் என்கிற அக்கறையும் அல்ல. அப்படி அக்கறை இருந்திருந்தால், கோவில் சொத்துக்களைச் சுரண்டிக் கொழுத்துக் கிடக்கும் பார்ப்பன முதலாளிகளிடமிருந்த அந்த சொத்துக்களை மீட்கப் போராடுவதில் இருந்து அவர்கள் துவங்கியிருக்க வேண்டும். பார்ப்பனர்களும் பக்திமான்களும் கோவில் சொத்துக்களை சூறையாடியது குறித்து திராவிடர் கழகத்தின் உண்மை இதழில் வெளியான இந்தப் பட்டியலில் இருந்து ஹெச்.ராஜாவும் ஆர்.எஸ்.எஸ் வானரப் படைகளும் தனது கோவில் மீட்புப் போராட்ட்த்தைத் துவங்கியிருக்க வேண்டும்.
ஆனால், இந்துத்துவ கும்பலுக்கு இருப்பதோ கீழ்த்தரமான பாசிச அரசியல் உள்நோக்கங்கள். இந்துத்துவ கும்பலின் ஊளைகள் அதிகரித்திருப்பதும் இதே காலகட்டத்தில் கோவில் சிலை திருட்டுச் சம்பவங்கள் குறித்த செய்திகள் வந்த வண்ணம் இருப்பதும் மிகுந்த கவனத்திற்குரியது. அதிலும் குறிப்பாக சிலைத் திருட்டு வழக்குகளில் கைதானவர்களில் ஒருவர் கூட பார்ப்பன குருக்களாக இல்லை என்பது கவனிக்கத்தக்கது. பாதுகாப்பு நிறைந்த கோயில்களில் இருந்து சிலைகளைத் திருடும் குற்றவாளி என ஒருவன் இருந்தால் அந்த குற்றத்திற்கு துணை போன உள்கைகள் இல்லாமல் இருக்குமா? பார்ப்பன அர்ச்சர்களின் துணையின்றி சிலைகளை எப்படிக் கடத்தியிருக்க முடியும்?
கடந்த முப்பதாண்டுகளாக கோவில்களைக் கைப்பற்றி அவற்றை ஆர்.எஸ்.எஸ் பயிற்சிக் கூடாரமாக மாற்றும் இந்துத்துவ கும்பலின் சதித்திட்டத்திற்கு தோதாகவே சிலைத்திருட்டு, கோவிலில் தீவிபத்து என சமீபத்திய நிகழ்வுகள் நடந்தேறுகின்றன. இவை ஒருபுறம் இருக்க, இன்னொருபுறம் அரசால் பராமரிக்கப்பட்டு வரும் சுமார் 36 ஆயிரம் கோவில்களைக் கைப்பற்றவும், அவற்றைத் தற்போது நிர்வகித்து வரும் இந்துசமய அறநிலையத்துறையையே கலைத்து விடவும் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளார் சுப்பிரமணிய சாமி. அரசியல் சாசனப் பிரிவு 25 மற்றும் 26-ன் படி ஒவ்வொரு மதக் குழுவினருக்கும் தாம் விரும்பியபடியும், அவரவரின் பாரம்பரிய முறைகளின் படியும் வழிபாடு செய்ய உரிமை இருப்பதாகவும் அதில் அரசு தலையிடுவது அடிப்படை உரிமைகளுக்கே எதிரானது என்று வாதிட்டு வருகின்றனர்.
கோவில்களை மீட்க இந்துத்துவ கும்பலின் சார்பாக பல ஆண்டுகளாக முனைப்பாக செயல்பட்டு வருபவர் டி.ஆர்.ரமேஷ். இவர் http://templeworshippers.in/ என்கிற இணையதளம் ஒன்றை இதற்காக பராமரித்து வருகிறார். அதில் தமது லட்சியங்கள் என “Restore the practices and traditions of our Temples” இந்த லட்சியத்தின் கீழ் தேவதாசி முறையில் இருந்து ஆர்.எஸ்.எஸ் கும்பலின் பயிற்சிக் கூடமாக கோவிலை மாற்றுவது வரை எதை வேண்டுமானாலும் அவர்களால் செய்து கொள்ள முடியும்.

இந்துக் கோவில்கள் ஆர்.எஸ்.எஸ் கையில் போனால் கொடியவர்களின் கூடாரங்களாகி விடும்!
இந்துத்துவ அரசியல் நோக்கங்களுக்கு சமூக வாழ்வின் அங்கமாக உள்ள கோயில் வலைப்பின்னலை கைப்பற்றிக் கொள்வது என்பதோடு கோவில்களில் குவிந்துள்ள பல்லாயிரம் கோடி சொத்துகளைக் கைப்பற்றுவது, அதைக் கொண்டு தமது பயங்கரவாத செயல்களுக்குத் திருப்பி விடுவதும் இவர்களது நோக்கங்களாக உள்ளன. வணிக வளாகங்கள், திருமண மண்டபங்கள் என வகைதொகையில்லாத சொத்துகள். இவற்றை கைப்பற்றலாம். கோயில் உண்டியலில் விழும் பணத்தை அப்படியே மடை மாற்றலாம்.
இந்த நோக்கங்களுக்காக அவர்கள் இந்து சமய அறநிலையத் துறையில் உள்ள நிர்வாக சீர்கேடுகளையும் முறைகேடுகளையும் ஊதிப் பெருக்கிக் காட்டுகின்றனர். அரசுகளால் நடத்தப்படும் எந்தவொரு அமைப்பிலும் முறைகேடுகள் இருப்பது உண்மைதான். அதை சரி செய்யவே மக்கள் போராடுகின்றனர். சான்றாக ஒக்கி புயலின் போது கடற்படையும், இந்தியக் கடலோரக் காவற்படையும் சரியாக செயல்படவில்லை. எனவே இப்படைகளை கலைத்து விட்டு மீனவர்களே படை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை சங்கிகள் ஆதரிப்பார்களா?
அதே போல போக்குவரத்து, சுகாதாரம், கல்வி என அனைத்து துறைகளிலும் அரசு நிறுவனங்கள் செயல்படுகின்றன. ஒரு அரசு மருத்துவமனையில் வசதிகள் இல்லை என்று அதை அப்பல்லோவுக்கு எழுதிக் கொடு என்பதற்கும், இந்து அறநிலையத்துறையை கலைத்துவிட கோருவதற்கும் வேறுபாடு இல்லை.
கோவில்களின் நிர்வாகம் அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் வரை மக்களால் பெயரளவிற்காவது அதைக் கேள்விக்குட்படுத்த முடியும். தனியாரிடம் ஒப்படைத்து விட்டால் அங்கே கேள்விக்கே இடமில்லை. இராணுவத்திலும் போலீசாரிடமும் லஞ்ச ஊழல் இருக்கிறது என்பதற்காக அந்த துறைகளை மொத்தமாக அம்பானி அதானி ஏன் அமெரிக்காவிடம் ஒப்படைக்கலாம் என்றால் ‘தேஷபக்தர்கள்’ ஒத்துக் கொள்வார்களா? எதார்த்தத்தில் இராணுவத்தின் ஆயுதத் தளவாடங்களின் மூலம் அமெரிக்கா மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் கையில் இருக்கிறது என்பதும் உண்மை.
இந்துமதம் சார்ந்த விவகாரங்களில் அப்படி தனியார்மயம் ( பார்ப்பனிய மயம்) நடப்பதற்குத் தோதான வகையில் மத்தியில் மோடி அரசும், மாநிலத்தில் எடுபிடிகளின் அரசும் அமைந்துள்ளன. புராணப்புரட்டுக்களை கல்வியில் சேர்ப்பது, பார்ப்பன சடங்குகளை அரசு விழாவாக்குவது, வரலாற்றை திருத்தி எழுதுவது, பாபர் மசூதியை ஒழித்து விட்டு அதிகாரப் பூர்வமாக ராமர் கோவில் கட்டுவது, மாட்டுக்கறி – அசைவ உணவு வகைகளை பொது வாழ்வில் இல்லாததாக்குவது என ஏகப்பட்ட திட்டங்களை பார்ப்பனிய பாஜக அமல்படுத்தி வருகிறது. இத்தகைய கயர்கள் தமிழக கோவில்களை மட்டும் விட்டு வைப்பார்களா என்ன?
கோவில்களைக் காப்பாற்றுவது என்பது இனிமேலும் மதம் சார்ந்த பிரச்சினை அல்ல – கோவில்களுக்கு சமூகத்தில் இருக்கும் செல்வாக்கைக் கணக்கில் எடுத்துக் கொண்டு அவற்றின் சொத்து – பாரம்பரிய – வரலாற்று மதிப்பை காப்பாற்ற மக்கள் அனைவரும் களமிறங்கியாக வேண்டும். அறநிலையத்துறையை வலுப்படுத்த வேண்டும்.
கோவில் மட்டுமல்ல, அனைத்து ஆதீனங்களும், மடங்களும் கூட அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட வேண்டும். அவை அனைத்திற்கும் தமிழகம் முழுவதும் ஏராளமான நிலங்களும், இதர சொத்துக்களும் உள்ளன. மதங்களில் பக்தி, ஆன்மீகம் மட்டுமே சாமியார்களுக்கும், கடவுளர்களுக்கும் சொந்தமாக இருக்க வேண்டும். இவை தவிர அனைத்தும் மக்கள் சொத்துக்களாக அங்கீகரிக்கப்பட்டு அரசின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்.
திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலில் மன்னர்களும், நம்பூதிரிகளும் அடித்த கொள்ளையை இன்று வரை தண்டிக்க முடியவில்லை. பாபாராம் தேவ், அஸ்ராம் பாபு, ராம்ரஹீம், நித்தியானந்தா போன்ற சாமியார்கள் பொறுக்கித்தனத்தில் மட்டுமல்ல, ஊழல் முறைகேடுகளிலும் முன்னணி வகிக்கிறார்கள்.
ஆக வரும் காலத்தில் இவர்களைக் கட்டுப்படுத்துவது என்பது வெறும் சொத்துக்கள் என்ற வகையில் மட்டுமல்ல, தேச விரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்கே அது  முன் நிபந்தனையாக தேவைப்படுகிறது.
தமிழக கோவில்கள் இந்து அறநிலையத்துறையில் இருந்து இந்துமதவெறிக் கும்பல்களின் கையில் செல்லுமானால் இவர்களுக்கு ஊருக்கு ஊர் ஒரு ஆயுத முகாம் உருவாகிவிடும். அங்கே அப்பாவி மக்களை வெறியேற்றுவது, இளைஞர்களை அடியாட்படைகளாக மாற்றும் வண்ணம்  பயிற்சி கொடுப்பது என பல முறைகேடுகள் நடக்கும். இவற்றுக்கு கோவில்களில் உள்ள மக்கள் சொத்துக்கள் பயன்படும். அனுமதிக்க போகிறோமா?
– சாக்கியன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக