ஞாயிறு, 11 பிப்ரவரி, 2018

சிபிஎஸ்இ நீட் தேர்வு நடத்தும் தமிழக தேர்வு மையங்களில் கம்மம், ரெங்காரெட்டி- தெலுங்கானவுக்கு

Gajalakshmi - Oneindia Tamil சென்னை : சிபிஎஸ்இ நீட் தேர்வை எந்த லட்சணத்தில் நடத்துகிறது என்பதை வெட்டவெளிச்சமாக்குகிறது அதன் தளத்தில் வெளியிடப்பட்டுள்ள தேர்வு மையங்களின் பட்டியல். தமிழகத்தில் 10 தேர்வு மையங்கள் மட்டுமே அறிவிக்கப்பட்ட நிலையில் கூடுதலாக 2 இடங்கள் இருக்கிறதே என்று தேடிப்பார்த்தால் அவை இரண்டும் தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த இடங்கள். எம்பிபிஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான நீட் தேர்வு மே 6ம் தேதி நடைபெறும் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. நேற்று முதல் விண்ணப்ப விநியோகம் தொடங்கிய நிலையில் மார்ச் மாதம் 9ம் தேதியுடன் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி நாளாகும். சென்னையிலேயே அதிக அளவில் மாணவர்கள் தேர்வு எழுதுவதை குறைக்கும் வகையில் காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட இடங்கள் கூடுதலாக தேர்வு மையங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு 8 மையங்களில் மட்டுமே தேர்வு நடைபெற்ற நிலையில் இந்த ஆண்டு அது 10 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. 
 
 ஏது தமிழ்நாடு மேப்லயே காணோமா? ஆனால் தமிழக தேர்வு மையங்களின் பட்டியலைப் பார்ப்பவர்களுக்கு அதிர்ச்சியான விஷயம் நம்ம தமிழ்நாடு மேப்புலயே இல்லாத கம்மம், ரெங்கா ரெட்டி என்ற இரண்டு இடங்கள் புதிதாக இதில் இடம்பெற்றுள்ளது. என்னடா இது புதுக்கதையாக இருக்கும் இப்படியான இடங்கள் எங்கே இருக்கிறது என்று தேடிப்பார்த்த போது தான் சிபிஎஸ்இ எந்த லட்சணத்தில் தேர்வு மையங்கள் பற்றிய விவரங்களை மாணவர்களுக்கு அளித்துள்ளது என்பது அம்பலமாகியுள்ளது.
 ஏன் இந்த தந்திரம்? தமிழ்நாடு தேர்வு மையங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள கம்மம் மற்றும் ரெங்கா ரெட்டி இரண்டு இடங்களும் தெலுங்கானா மாநிலத்தில் இருக்கிறது. இது எதேச்சையாக நடந்த குளறுபடியா அல்லது திட்டமிட்டே தவறுதலாக இந்த மையங்கள் மாணவர்கள் தேர்வு செய்துவிட்டு கடைசியில் தேர்வுமையம் எங்கே என்று தெரியாமல் தேர்வு எழுத வரமாட்டார்கள் என்ற தந்திரமா என்பது சிபிஎஸ்இக்கே வெளிச்சம். 

 சிபிஎஸ்இ தேர்வு நடத்தும் லட்சணம் நீட் தேர்வுக்கு ஒரே மாதிரியான வினாத் தாள் இல்லை தமிழ் மொழியில் கேட்கப்பட்ட கேள்விக்கும், குஜராத் மாநிலத்தில் நடந்த தேர்வில் கேட்கப்பட்ட கேள்விக்கும் வேறுபாடுகள் இருந்ததாக கடந்த ஆண்டே புகார் எழுந்தது. ஆனால் இந்த ஆண்டு தேர்வு மைய விஷயத்திலேயே குழப்புகிறது சிபிஎஸ்இ.
 
வெட்டவெளிச்சமாகும் சிபிஎஸ்இ ஏற்கனவே சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பயிலாத மாணவர்கள் நீட்டை எண்ணி பயந்து வரும் நிலையில், தவறான தகவல்கள் மூலம் மாணவர்களை மேலும் குழப்பலாமா. அதே சமயம் மாணவர்களின் மருத்துவ படிப்பை தீர்மானிக்கும் நீட் தேர்வுக்கு வெளியிடப்பட்ட அறிவிப்பில் மாணவர்கள் மீது சிபிஎஸ்இக்கு இருக்கும் அக்கறை இவ்வளவு தானா என்பதையும் இந்த குளறுபடி வெட்டவெளிச்சம் போட்டு காட்டுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக