வெள்ளி, 2 பிப்ரவரி, 2018

தமிழ்நாட்டில் தமிழ் இல்லை ! ஒரு அமெரிக்கரின் அதிர்ச்சி !

அவன், இவன், உவன். அவள் இவள் உவள் எவள். ஓர் எழுத்தை மட்டும் மாற்றும்போது முழுக்கருத்தும் எப்படி மாறிவிடுகிறது. ‘அதுவிதுவுதுவெது’ என்பதை பலதடவை சொல்லிப் பார்த்தேன். அந்த இனிமை என்னை ஏதோ செய்தது.
வினவு : 
ஹார்வார்டில் தமிழுக்கு முக்கியத்துவம் உள்ளதா?
தமிழ் தான் ஆதிச் செம்மொழியாக இன்றும் வாழும் ஒரு மொழி. அதை பாதுகாக்க வேண்டியது கடமை. ஹார்வார்ட் போன்ற முதன்மையான பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழியை மட்டும் அவர்கள் கற்றுக் கொடுப்பதில்லை. சிந்திக்கவும் ஆராயவும் கற்றுக் கொடுக்கிறார்கள்.
2000 வருடங்களுக்கு மேலான தமிழ் மொழியின் நீண்ட சரித்திரத்தில் தமிழ் இன்று கடைசிப் படியில் உள்ளது என்றே நான் நினைக்கிறேன். சரித்திரத்தில் முன்னர் எப்போதும் தமிழ் இப்படியான நிலையை அடைந்ததில்லை. ஆங்கிலேயர் ஆட்சியில்கூட தமிழ் இவ்வளவு உதாசீனப்படுத்தப்பட்டதில்லை. ஹார்வார்டில் நிறைய மொழிகள் கற்றுக் கொடுக்கப் படுகின்றன. ஆராய்ச்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
அழிந்துபோன நிலையிலுள்ள மொழிகளுக்கு முக்கியத்துவம் உண்டு. ஹிந்தி, உருது போன்ற மொழிகளைக் கற்க நிறைய மாணவர்கள் வருகிறார்கள். இன்றும் வாழும் செம்மொழியான தமிழுக்கு அதற்கான மதிப்பு கிடையாது. மற்றைய மொழிகளுக்கு மாணவர்கள் திரள் திரளாக வருவதுபோல தமிழ் மொழிக்கும் வரவேண்டும்.


வெள்ளைக்காரன் – அ. முத்துலிங்கம் சிண்டரெல்லா கதையில் யார் கதாநாயகன் அல்லது நாயகி என்று கேட்டேன். நான் கேட்டது ஓர் ஆறு வயது பெண் குழந்தையிடம். அந்தக் குழந்தை பதில் சொல்ல ஒரு விநாடிகூட எடுக்கவில்லை. ‘மணிக்கூடு’ என்றது. நான் திடுக்கிட்டுவிட்டேன்.
சிண்டரெல்லாவைச் சொல்லலாம், அல்லது ராசகுமாரனை சொல்லலாம். அல்லது தேவதையை சொல்லலாம். ஏன் சிண்டரெல்லாவின் இரண்டு சகோதரிகளைக் கூடச் சொல்லியிருக்கலாம். இது புதுவிதமாக இருந்தது. யோசித்துப் பார்த்தேன். அந்தக் குழந்தை சொன்னது சரிதான். மணிக்கூடு இல்லாவிட்டால் கதையே இல்லையே. அதுதானே முடிச்சு. 12 மணி அடிக்குமுன்னர் சிண்டரெல்லா வீடு திரும்பவேண்டும். இதுதான் தேவதையின் கட்டளை. ஆகவே கதையில் முக்கியமானது மணிக்கூடுதான்.
அவர் குறிப்பிட்ட உணவகத்துக்கு நான் வந்து சேர்ந்துவிட்டேன். வெளியே மழை கொட்டியது. பனியும் கொட்டியது. ஒன்று மாறி ஒன்று பெய்தது. மழைக்காக ஆடை அணிவதா அல்லது குளிருக்காக ஆடை அணிவதா? குளிருக்கு அணிந்த மேலங்கி ஓர் அளவுக்கு மழையையும் தடுத்தது. உடல் நடுங்க நான் உணவகத்துக்குள் நுழைந்தேன்.
நான் முதன்முதல் அவரை பார்க்கிறேன். பக்கவாட்டில் பார்க்கக்கூடிய விதமாக அவர் ஒரு மேசையில் உட்கார்ந்திருக்கிறார். வெள்ளை நிறம். மெல்லிய தோற்றம். வயது முப்பத்தைந்து மதிக்கலாம். கட்டம்போட்ட சட்டை. கையில்லாத கறுப்பு ஸ்வெட்டர். சிரித்தபடியே இருக்கும் வாய். கழுத்து சால்வையால் தன்னைச் சுற்றியிருந்தார்.
அவர் வெள்ளைக்காரன் என்றாலும் தமிழிலே அளவற்ற பற்றுக் கொண்டவர். தமிழை முறையாகக் கற்றவர். அதன்மேல் காதலானவர் என்றே சொல்லலாம். அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த ஒருவர் 19 வயது மட்டும் தமிழ் என்று ஒரு மொழி இருக்கிறது என்பதை அறியாதவர். அவர் பெயர் ஜொனாதன் ரிப்ளி. எப்படி தமிழால் ஈர்க்கப்பட்டார். என அவரிடமே கேட்டேன்.
ஒன்றுமே யோசிக்காமல் சட்டென்று ‘அதன் இனிமைதான்’’ என்றார். சிறுமி ‘மணிக்கூடுதான்’ என்று சொன்னதுபோல.

< ‘இனிமையா?’ நான் எதிர்பார்க்காத பதில். பாரதியார் கூட ‘யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்’ என்று பாடினார். அவர் அப்படித்தானே பாடுவார். தமிழின் மகாகவியல்லவா?
எப்படி இனிமையானது என்று சொல்கிறீர்கள்?
‘நான் ஒஹாயாவிலுள்ள ஒபர்லின் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தேன். ஒருநாள் போலா ரிச்மன் (Paula Richman) படிப்பித்த வகுப்பபில் போய் அமர்ந்தேன். அவர் தென்னாசிய பிராந்திய இலக்கியங்களில் தனித்துறை வல்லுநர். அவருடைய சிறப்புக் கல்வி ராமாயணம் மகாபாரதம் ஆகிய இதிகாசங்கள். சும்மா பார்க்கலாம் என்றுதான் போனேன். என் வாழ்கையே அடியோடு மாறப்போகிறது என்பது எனக்குத் தெரியாது. நான் அவர் பேசியதை உன்னிப்பாகக் கவனிக்கவில்லை. அவர் ஒரு பாடலைச் சொல்லிக்கொண்டு இருந்தார்.
நாமவ னிவனுவன், அவளிவளுவளெவள்
தாமவரிவருவர், அதுவிது வுதுவெது
வீமவை யிவையுவை, யவைநலந் தீங்கவை
ஆமவை யாயவை, யாய்நின்ற அவரே.
அந்த ஓசை நயமும் பாடலின் இனிமையும் காதுகளில் விழுந்தது. எதிரில் வந்த பல நாட்கள் அந்த இனிமை காதுகளில் தொடர்ந்து ஒலித்த வண்ணமே இருந்தது. பல மாதங்களுக்குப் பின்னர்தான் அது நம்மாழ்வார் திருவாய்மொழி 1.1.4 என்று அறிந்தேன்.
அவன், இவன், உவன். அவள் இவள் உவள் எவள். ஓர் எழுத்தை மட்டும் மாற்றும்போது முழுக்கருத்தும் எப்படி மாறிவிடுகிறது. ‘அதுவிதுவுதுவெது’ என்பதை பலதடவை சொல்லிப் பார்த்தேன். அந்த இனிமை என்னை ஏதோ செய்தது. அந்தக் கணமே முடிவுசெய்தேன் நான் தமிழ்தான் படிக்கவேண்டும் என்று.
தமிழைப்பற்றி ஏற்கனவே அறிந்திருந்தீர்களா?
இல்லையே. எனக்கு குஜராத்தி நண்பர்கள் இருந்தார்கள். அவர்கள் வீடுகளுக்குப் போயிருக்கிறேன். அவர்கள் வீடுகளில் உணவருந்தியிருக்கிறேன். கொண்டாட்டங்களில், நடனங்களில் ஆர்வத்துடன் பங்குபற்றியிருக்கிறேன். ஆனால் குஜராத்தி மொழி படிக்கவேண்டும் என்றோ, இந்தி மொழி படிக்கவேண்டுமென்றோ எனக்கு தோன்றவே இல்லை. ஆனால் தமிழ் படிக்கவேண்டும் என்ற வெறி வந்துவிட்டது.
இந்தியாவுக்குப் போய் அங்கே படிக்கவேண்டும் என்று திட்டமெல்லாம் போடத் துவங்கினேன். 1997 -ல் ஒபர்லின் கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் பட்டம் பெற்றேன். அங்கே படிக்கும்போது நாலு வருடம் சீன மொழியும் கற்றேன். உதவிப்பணத்துக்கான நேர்காணலில் என் மனம் முழுக்க தமிழ் நிரம்பியிருந்ததை அவர்கள் கண்டுபிடித்துவிட்டார்கள். அப்படித்தான் சீனா போக இருந்த நான் மதுரைக்குப் போனேன்.
பெற்றோர்களிடம் உங்கள் முடிவை சொன்னீர்களா?
சொன்னேன். அவர்கள் அதிர்ந்து போய்விட்டார்கள். அவர்கள் என்னைச் சுற்றி கனவுகள் கட்டி வைத்திருந்தார்கள். அவை எல்லாம் பொலபொலவென்று உடைந்தன. ‘தமிழை படித்துவிட்டு என்ன செய்வாய்? ஏன் இத்தாலிய மொழி படிக்கலாமே? பிரெஞ்சு மொழி படிக்கலாமே? ஸ்பானிஷ் படிக்கலாமே?. இது என்ன தமிழ் மொழி.? அதை படிக்க இந்தியாவுக்கு போகவேண்டுமா? என்று மிகவும் வருந்தினார்கள். என் பெற்றோர் அப்படி வருந்தி முன்னர் நான் பார்த்தது கிடையாது.
அதன் பின்னர்தான் தமிழ்நாடு போனீர்களா?
நான் மதுரைக்குப் போய் அங்கே இரண்டு வருடம் படித்தேன். ஒபர்லின் கல்லூரியில் படிப்பு முடிந்த பின்னர் நான் உடனேயே மதுரை செல்லவில்லை. விஸ்கொன்சின் பல்கலைக்கழகத்தில் 10 வாரங்கள் அதி தீவிரமாகத் தமிழ் கற்றுக்கொண்டேன். தென்னாசிய கோடைகால மொழிப் பயிற்சி திட்டத்தின் கீழ் சாமுவேல் சுத்தானந்தா என்பவரிடம் தமிழ் படித்தேன். தமிழ் கற்பிப்பதில் அவர் அபார திறமையுடையவர். மதுரைக்கு என்னைத் தயார்செய்த பின்னர் அங்கே போனேன்.
இரண்டு வருடம் தொடர்ந்து அங்கே இருக்கவேண்டும். இடையில் அமெரிக்கா திரும்பக்கூடாது என்பதுதான் ஒப்பந்தம். அங்கே ஜீவன ஜோதி அமைப்பு ஏற்பாடு செய்த வகையில் பாரிசவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த பெரியவர்களுக்கு ஆங்கிலம் கற்பித்தேன். என் பாட்டியும் பெற்றோரும் என்னைப்பற்றி தினமும் உருகி உருகி கவலைப் பட்டார்கள். நானோ தண்ணீரில் விழுந்த மீன்குஞ்சுபோல அகமகிழ்ந்து தமிழ்நாட்டில் சுற்றினேன்.
என்னிடம் ஸ்கூட்டர் இருந்தது. அதிலே கடைகள் ஹொட்டல்கள் கோயில்கள் கொண்டாட்டங்கள் என்று ஒரு நிமிடமும் வீணாக்காமல் அலைந்தேன். தமிழில் பேசினேன். மக்கள் அன்பாகவும் ஆதரவாகவும் சொல்லித்தந்தார்கள். அமெரிக்க படிப்பறையில் படித்ததிலும் பார்க்க வீதிகளில் நிறையக் கற்றுக்கொண்டேன். நல்ல நண்பர்களைச் சம்பாதித்தேன். நான் தமிழுக்கு எவ்வளவு கொடுத்தேனோ அதிலும் பார்க்க கூடுதலாக தமிழ் எனக்குக் கொடுத்தது. இரண்டு வருடம் முடிந்த பின்னரும் எனக்கு அமெரிக்கா திரும்ப மனம் வரவில்லை. ஆனாலும் திரும்பவேண்டி நேர்ந்தது.
மீண்டும் தமிழ்நாடு போனீர்களா?
அமெரிக்காவில் சிக்காகோ பல்கலைக் கழகத்தில் நோர்மன் கட்லர் என்பவரின் வழிகாட்டலில் தென்னாசிய மொழிகளில் முதுநிலைப் பட்டம் பெற்றேன். இந்தச் சமயம் மதுரையில் இரண்டு வருடங்கள் முனைவர் எஸ். பாரதியிடம் தமிழ் கற்றுக்கொண்டேன். எல்லாமாக நாலு வருடங்கள். அதன் பின்னரும்கூட தமிழ்நாடு போய் கம்பராமாயணம், கலிங்கத்துப் பரணி , தேவாரங்கள் என நானாகவே கற்றுக்கொண்டேன்.
தமிழ் படிப்பதில் என்ன சவால் இருந்தது?
எழுத்து தமிழுக்கும் பேச்சுத் தமிழுக்கும் இடையில் இருக்கும் வித்தியாசம்தான் நான் சந்தித்த முதல் சவால். ஆரம்பத்தில் இருந்து இரண்டையுமே கற்றுக்கொண்டேன். இன்றும் யாராவது வேகமாகத் தமிழ் பேசினால் எனக்கு அதை புரிந்துகொள்வதில் சிரமமிருக்கிறது. தமிழ்நாட்டில் இருந்தபோது எனக்கு தினமும் மக்களுடன் பேசுவதிலும், புதிதாக கற்றுக்கொள்வதிலும் ஆர்வம் இருந்தது. மக்கள் உற்சாகப்படுத்தினர். இங்கே அமெரிக்காவில் அது கிடையாது. தமிழ் பேசிப்பழகும் வாய்ப்புகள் வெகு குறைவு.
தமிழ்நாடு மக்களைப்பற்றி?
எனக்கு ஏதோ விதத்தில் ஒரு முன்தொடர்பு இருந்தது. நான் அந்நியமாகவே உணரவில்லை. என்னை வெள்ளைக்காரன் என்று அழைத்தார்கள். ஆரம்பத்தில் ஒருமாதிரி இருந்தது, ஆனால் பழகிவிட்டது. அவர்களின் உண்மையான அன்பை ஒருநாள் உணர்ந்தேன். மதுரை வீதியில் நடந்தபோது நான் கால் தடுக்கி விழுந்துவிட்டேன். அடுத்த நிமிடம் என்னைச் சுற்றி பத்துப்பேர் நின்றார்கள். தூக்கிவிட்டார்கள். அடிப்பட்டதா என்று என்னைத் தடவித்தடவிப் பார்த்தார்கள். அத்தனை கரிசனத்தை நான் எதிர்பார்க்கவில்லை.
அமெரிக்காவில் இப்படி நடந்திருந்தால் கிட்டவே அணுக மாட்டார்கள். அவசர உதவி வாகனத்துக்கு தொலைபேசி போயிருக்கும். நான் வெள்ளைக்காரனாக இருந்ததால் அப்படி நடந்ததா என்றும் யோசித்திருக்கிறேன். அப்படி இல்லை. மதுரை மக்கள் அப்படித்தான். கருணை நிறைந்தவர்கள்.
தமிழ்நாட்டில் 4 வருடங்கள் வாழ்ந்திருக்கிறீர்கள். அதன் பின்னரும் பலதடவை அங்கே போய் வந்திருக்கிறீர்கள். உங்களை ஆச்சரியப்படுத்திய சம்பவம் ஏதாவது?
ஆச்சரியம் அல்ல அதிர்ச்சி என்று சொல்லலாம். தமிழ்நாட்டு கல்வித்திட்டத்தில் தமிழ் இல்லை. தமிழ்நாட்டில் பிறந்த ஒருவர் தமிழ் கற்காமலே ஆங்கிலத்தில் கல்வி கற்று பட்டம் பெற்று வேலைதேடி சம்பாதித்து வாழலாம். அவர் தமிழ் கற்கவேண்டிய அவசியமே கிடையாது. சிலர் ஆங்கிலத்தை முதல் பாடமாகவும் பிரெஞ்சு மொழியை இரண்டாம் பாடமாகவும் எடுக்கிறார்கள். இரண்டாம் பாடமாகக்கூட தமிழ் இல்லை.
அதுவும் தமிழ் நாட்டில். கல்லூரிகளில் ஆங்கில வகுப்புகளுக்கு போயிருக்கிறேன். மேல்தட்டு மக்கள் அழகாக உடையுடுத்தி படிக்க வருகிறார்கள். வகுப்புகள் பெரிசாகவும் அழகாகவும் இருக்கின்றன. பேராசிரியர்கள் மேல்நாட்டு முறையில் உடை தரித்திருக்கிறார்கள். மாணவர்கள் மரியாதையுடன் நடக்கிறார்கள். அழுக்கான சிறிய வகுப்பறையில் தமிழ் பாடம் நடக்கிறது. மாணவர்கள் அநேகமாக ஏழைகளாகவே காணப்படுகிறார்கள். எல்லோரும் மருத்துவம், பொறியியல், சட்டம், கணக்காளர் இப்படி நல்ல வருமானம் தரும் படிப்பையே விரும்புகிறார்கள். அவர்கள் எடுக்கும் மதிப்பெண்கள் ஆகக்குறைவாக இருந்தால் வேறு ஒன்றும் படிக்க இயலாத நிலையில் தமிழை வேண்டா வெறுப்பாக எடுக்கிறார்கள். அதுதான் ஆச்சரியம்.
இது மலையாள மாநிலத்திலோ கன்னட மாநிலத்திலோ அல்லது தெலுங்கு மாநிலத்திலோ நடந்தால் நான் ஆச்சரியப்பட மாட்டேன். ஆனால் நடப்பது தமிழ் நாட்டில். அனைவரும் ஆங்கில மோகம் பிடித்து அலைகிறார்கள். தமிழ்நாட்டில் தமிழுக்கு இந்த நிலை என்றால் நாம் தமிழை வளர்க்க எந்த நாட்டுக்கு போவது.

ஈழத்து இலக்கியக்காரர்களுடன் உங்களுக்கு ஏதாவது பரிச்சயம் உள்ளதா?
ஒரே ஒருவரைச் சந்தித்திருக்கிறேன். வாசுகி கணேசானந்தன். Love Marriage என்ற நாவல் எழுதியவர்; என்னுடைய நண்பர். அவரைத் தவிர இப்பொழுது உங்களைச் சந்தித்திருக்கிறேன். இனிமேல்தான் நான் ஈழத்து இலக்கியம் படிக்கவேண்டும். என்னிடம் ஒன்றிரண்டு ஈழத்து மாணவர்கள் படித்திருக்கிறார்கள். அவர்கள் பேசும் தமிழ் என்னை ஈர்க்கும். ‘ஓம், ஓமோம், ஓ, ஓ’ என்று ஒருவர் பேசினால் அவர் ஈழத்தமிழர் என்று எனக்கு புரிந்துபோகும். எழுத்துத் தமிழுக்கு மிக அண்மையாக அவர்கள் பேச்சுத் தமிழ் இருக்கும். எழுத்திலே ‘வந்து கொண்டிருக்கிறோம்’ என்று எழுதினால் அவர்கள் பேச்சுத் தமிழிலும் ‘வந்து கொண்டிருக்கிறோம்’ என்றே இருக்கும்
நீங்கள் பொஸ்டனில் ஒரு தொண்டு நிறுவனத்தில் வேலை செய்வதாக அறிந்தேனே. அது பற்றிச் சொல்லுங்கள்.
அதற்கும் தமிழுக்கும் சம்பந்தமே இல்லை. அதன் பெயர் Community Cooks. அதிலே 700 தொண்டர்கள் வேலை செய்கிறோம். வீடு இல்லாத ஏழைகள், உணவுக்கு வழியில்லாதவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள் இவர்களுக்கு இலவசமாக உணவு வழங்கும் திட்டம். சமையல் சாமான்களையும் எங்கள் நேரத்தையும் இலவசமாகத் தருவதுதான் தொண்டு… நான் மாதத்தில் ஒருநாள் அங்கேபோய் சமையல் செய்வேன். மாதம் 3500 பேர்களுக்கு இலவசமாக உணவு வழங்குவோம்.
தமிழ்நாட்டு உணவு சமைப்பீர்களா?
வீட்டிலே மட்டும் நான் தமிழ்நாட்டு உணவு சமைத்து உண்பேன். சோறு, சாம்பார், ரசம், வறுவல் என்று சமைக்கத் தெரியும். நண்பர்களும் வந்து சாப்பிடுவார்கள்.. இன்னும் புதுவிதமான சமையல் பழகிக்கொண்டிருக்கிறேன்.
நீங்கள் ஹார்வார்டில் தமிழ் படிப்பிக்கிறீர்கள் அல்லவா? அதுபற்றி சொல்லுங்கள்?
நான் ஹார்வார்டில் Preceptor ஆக இருக்கிறேன். போதனாசிரியர் என்று சொல்லலாம். இங்கே மூன்று தரநிலைகளில் தமிழ் கற்பிக்கப்படுகிறது. முதலாவது நிலையில் எழுத்துக்கள் சொல்லிக் கொடுக்கிறோம். அது இரண்டாம் மூன்றாம் வகுப்பு மட்டும் போகும். அடுத்த நிலை 10 -ம் வகுப்பு மட்டும் என்றும் வைத்துக்கொள்ளுவோம். மூன்றாவது நிலையில் திருக்குறள், கம்பராமாயணம் சங்க இலக்கியங்கள் என மாணவர் விருப்பப்படி கற்கை நெறியை அமைத்துக்கொள்கிறோம்.
தமிழிலே உள்ள முக்கியமான பிரச்சினை எழுத்து தமிழுக்கும் பேச்சுத் தமிழுக்கும் இடையில் பெரும் வித்தியாசம் இருப்பது. எனக்கும் அந்தப் பிரச்சினை இருந்தது. ஆகவே பாடம் சொல்லிக்கொடுக்கும் போதே எழுத்தில் இப்படி வரும் ஆனால் பேசும்போது இப்படி வரும் என்று சொல்லிக் கொடுத்துவிடுகிறேன்.
மாணவர்களுக்கு ஒரே குழப்பமாக இருக்குமே?
கிடையாது. மாணவர்கள் கப்பென்று பிடித்துவிடுகிறார்கள். எனக்கும் கொஞ்சம் ஆச்சரியம்தான். நான் அத்தனை இலகுவாக இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. ‘உன்கூட வாழவேண்டும் என ஆசைப்படுகிறேன்..’ இதைப் பேச்சுத் தமிழில் ‘உங்கூட வாழணும்னு ஆசைப்படுறன்’ என்றும் ‘கண்டிப்பாக நாளை வருகிறேன்’ என்பது ‘கண்டிப்பா நாளை வாறேன்’ என்றும் குழப்பம் இல்லாமல் அவர்கள் கற்றுக்கொண்டு விடுகிறார்கள்..
நவீன இலக்கியம் சொல்லிக்கொடுக்கிறீர்களா? போதிய புத்தகங்கள் உள்ளனவா?
இப்பொழுதுதான் புத்தகங்கள் கொஞ்சம் கிடைத்திருக்கின்றன. சிறிது சிறிதாக ஒரு தமிழ் நூலகத்தை வளர்த்தெடுப்போம்… புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி. அம்பை போன்ற எழுத்தாளர்கள் மாணவர்களுக்கு பரிச்சயம். புதுமைப்பித்தனின் ‘கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும்’ சிறுகதை நிரம்பவும் விவாதிக்கப்பட்டிருக்கிறது.
ஹார்வார்டில் தமிழுக்கு முக்கியத்துவம் உள்ளதா?
தமிழ் தான் ஆதிச் செம்மொழியாக இன்றும் வாழும் ஒரு மொழி. அதை பாதுகாக்க வேண்டியது கடமை. ஹார்வார்ட் போன்ற முதன்மையான பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழியை மட்டும் அவர்கள் கற்றுக் கொடுப்பதில்லை. சிந்திக்கவும் ஆராயவும் கற்றுக் கொடுக்கிறார்கள்.
2000 வருடங்களுக்கு மேலான தமிழ் மொழியின் நீண்ட சரித்திரத்தில் தமிழ் இன்று கடைசிப் படியில் உள்ளது என்றே நான் நினைக்கிறேன். சரித்திரத்தில் முன்னர் எப்போதும் தமிழ் இப்படியான நிலையை அடைந்ததில்லை. ஆங்கிலேயர் ஆட்சியில்கூட தமிழ் இவ்வளவு உதாசீனப்படுத்தப்பட்டதில்லை. ஹார்வார்டில் நிறைய மொழிகள் கற்றுக் கொடுக்கப் படுகின்றன. ஆராய்ச்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
அழிந்துபோன நிலையிலுள்ள மொழிகளுக்கு முக்கியத்துவம் உண்டு. ஹிந்தி, உருது போன்ற மொழிகளைக் கற்க நிறைய மாணவர்கள் வருகிறார்கள். இன்றும் வாழும் செம்மொழியான தமிழுக்கு அதற்கான மதிப்பு கிடையாது. மற்றைய மொழிகளுக்கு மாணவர்கள் திரள் திரளாக வருவதுபோல தமிழ் மொழிக்கும் வரவேண்டும்.
ஹார்வார்டில் தமிழ் இருக்கை அமைப்பது பற்றி?
அருமையான முயற்சி. நான் தற்போது ஹார்வார்டில் தமிழ் கற்பிப்பதால் தமிழ் இருக்கை கிடைப்பதால் என்ன நன்மைகள் கிட்டும் என்பதை சொல்லமுடியும். இங்கே கற்கும் மாணவர்களிடம் தமிழ்மீது நிறைய ஆர்வமிருப்பதை காணமுடிகிறது. அவர்களுடன் தினம் பழகும்போது அவர்களுடைய ஊக்கத்தையும் ஆர்வத்தையும் கண்டு வியக்கிறேன். முதல் வருடத்திலும் பார்க்க அடுத்த வருடத்தில் அதிக மாணவர்கள் தமிழ் படிக்க பதிவு செய்தது உற்சாகம் தரும் அறிகுறி.
நாங்கள் தமிழை ஆழமான படிப்புக்கும் தீவிரமான ஆராய்ச்சிக்கும் உட்படுத்த வேண்டுமானால் தமிழ் இருக்கை முக்கியமானதாக இருக்கிறது. இப்பொழுது காணப்படும் தமிழ் ஆர்வத்தையும் ஊக்கத்தையும் நாங்கள் மேலும் விரிவாக்கி பயன்படுத்தவேண்டும். பொருள்செறிவான இயங்கியல் தன்மையான ஆராய்ச்சிகளுக்கும் மாணவர்களின் ஊக்கமான வெளிப்பாடுகளுக்கும் ஹார்வார்ட் தமிழ் இருக்கை வடிகாலாக அமையும்.
அது மாத்திரமன்றி இங்கே நடக்கும் ஆராய்ச்சிகளும் முன்னெடுத்தல்களும் தமிழின் முக்கியத்துவத்தை உலகப்பரப்பில் நிலைநிறுத்தும். உண்மை என்னவென்றால் தமிழின் பெருமை பாதியளவுகூட வெளியே வரவில்லை. மற்றைய மொழிகளில் பதிவு செய்யப்பட்ட ஆராய்ச்சிகளின் பெறுபேறுகளை அலசும்போது இது தெரியவருகிறது. தமிழின் எதிர்காலத்துக்கு இங்கே ஓர் இருக்கை அமைவது முக்கியமானது.
****
ஜொனாதன் எழுந்து நின்றதும் நான் விடை பெற்றுக்கொண்டேன். வெளியே மழை நின்றுவிட்டது ஆனால் குளிர் அதிகமாகியிருந்தது. ஜொனாதன் போன்றவர்கள் தமிழினால் ஈர்க்கப்பட்டு அதைக் கற்க முன்வருகிறார்கள். தங்கள் வாழ்நாளையே தமிழுக்கு அர்ப்பணிக்கிறார்கள். என்ன அவர்களை அப்படிச் செய்யத் தூண்டுகிறது? பல செம்மொழிகள் இன்று இறந்துவிட்டன. ஆனால் செம்மொழியான தமிழ் மொழி இன்றும் வாழ்கிறது. அது இப்படியான தமிழ் பற்றாளர்களின் அர்ப்பணிப்பால்தான் என்பது நிச்சயமாகிறது.
நாளை ஜொனாதன் அவர் வகுப்பறைக்குள் தமிழ் கற்பிக்க நுழைவார். அங்கே ஏற்கனவே நடந்துகொண்டிருந்த ஒரு மொழி வகுப்பு அப்போது முடிவுக்கு வரும். நூற்றுக் கணக்கான மாணவர்கள் வெளியேறுவார்கள்.
ஜொனாதன் வகுப்பறைக்குள் நுழைவார். கரும்பலகையை அவருக்கு பரிச்சயமில்லாத எழுத்துக்கள். நிறைத்திருக்கும். உன்னிப்பாகப் பார்ப்பார். எப்போதோ இறந்துபோன ஒரு மொழியின் எழுத்துக்கள். அந்த எழுத்துக்களை அழித்து முடிக்க அவருக்கு இரண்டு நிமிடம் எடுக்கும். தன் மாணவருக்காக அவர் காத்திருப்பார். இரண்டு பேர் உள்ளே நுழைவார்கள்.
நன்றி :அ.முத்துலிங்கம்
முத்துலிங்கத்தின் இணைய தளம்

***

எழுத்தாளர் அறிமுகக் குறிப்பு:
லங்கையில் கொக்குவில் என்ற சிறிய கிராமத்தில் பிறந்து வளர்ந்தேன். கொழும்பு பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானப் படிப்பை முடித்ததன் பின், இலங்கையின் சாட்டர்ட் அக்கவுண்டண்ட் படிப்பையும், இங்கிலாந்தின் சாட்டட்ர்ட் மனேஜ்மெண்ட் அக்கவுண்டண்ட் படிப்பையும் பூர்த்தி செய்து வேலை பார்த்தேன். பின்னர் ஐ.நாவுக்காக பல வெளிநாடுகளில் பணிபுரிந்தேன். 2000ம் ஆண்டில் ஓய்வு பெற்று கனடாவில் மனைவியுடன் வசிக்கிறேன். பிள்ளைகள் இருவர், சஞ்சயன், வைதேகி. வைதேகியின் மகள்தான் அடிக்கடி என் கதைகளில் வரும் அப்ஸரா.
அறுபதுகளில் எழுத ஆரம்பித்து சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், நேர்காணல்கள், நாடகங்கள், நாவல்கள் என எழுதியிருக்கிறேன்.
இதுவரை வெளிவந்த நூல்கள் :
1. அக்கா – 1964
2. திகடசக்கரம் – 1995
3. வம்சவிருத்தி – 1996
4. வடக்கு வீதி – 1998
5. மகாராஜாவின் ரயில் வண்டி – 2001
6. அ.முத்துலிங்கம் கதைகள் – 2004
7. அங்கே இப்ப என்ன நேரம்? – 2005
8. வியத்தலும் இலமே – 2006
9. கடிகாரம் அமைதியாக எண்ணிக்கொண்டிருக்கிறது – 2006
10. பூமியின் பாதி வயது – 2007
11. உண்மை கலந்த நாட்குறிப்புகள் – 2008
12. அ.முத்துலிங்கம் சிறுகதைகள் – ஒலிப்புத்தகம் – 2008
13. Inauspicious Times – 2008
14. அமெரிக்கக்காரி – 2009
15. அமெரிக்க உளவாளி – 2010
16. ஒன்றுக்கும் உதவாதவன் – 2011

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக